செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 6 மே 2022 (10:40 IST)

பழைய டீமை பந்தாடிய வார்னர்..! – ட்ரெண்ட் செய்யும் கிரிக்கெட் ரசிகர்கள்

David Warner
ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடிய வார்னர் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது ட்ரெண்டாகியுள்ளது.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் தொடங்கி மும்முரமாக நடந்து வரும் நிலையில் நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணியும் மோதிக் கொண்டன.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. இரண்டாவதாக களம் இறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 186 ரன்களே எடுத்து தோல்வியை தழுவியது.

இந்த ஆட்டத்தில் முதலில் டெல்லி அணி பேட்டிங் செய்தபோது களமிறங்கிய வார்னர் 58 பந்துகளில் 92 ரன்களை விளாசி ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முந்தைய ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணி கேப்டனாக இருந்தவர் வார்னர்.

கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் அப்போதும் வார்னர் ஒவ்வொரு போட்டியிலும் அரைசதமாவது அடித்து அணிக்காக பாடுபட்டார். ஆனால் அவர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதுடன், பின்னர் பேட்டிங் ஆர்டரிலிருந்தும் தூக்கப்பட்டார்.

இந்த சீசனில் டெல்லி அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட வார்னர் தன் பழைய அணிக்கு கொடுத்த பதிலடியாகவே அவரது நேற்றைய ஆட்டத்தை ரசிகர்கள் பார்க்கிறார்கள். இதுகுறித்த பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.