செவ்வாய், 25 ஜூன் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 27 ஜனவரி 2024 (18:29 IST)

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி.! இங்கிலாந்து அணி 126 ரன்கள் முன்னிலை.!!

test
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 126 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
 
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்தது.  
 
பின்னர் களம் இறங்கிய இந்திய அணி வீரர்கள் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த  436 ரன்கள் எடுத்தது.  இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக யஜஸ்வி ஜெய்ஸ்வால் 74 பந்துகளில் 80 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 180 பந்துகளில் 87 ரன்களும், கே.எல்.ராகுல் 123 பந்துகளில் 86 ரன்களும் எடுத்தனர். 
 
test match
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை ஜோ ரூட் சிறப்பாக பந்து வீசினார். அதன்படி, 29 ஓவர்கள் வீசிய அவர் 5 ஓவர்கள் மெய்டன் செய்து 79 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதேபோல், டாம் ஹார்த்லி மற்றும் ரீகன் அகமது தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.
 
பின்னர், இரண்டாவது இன்னிங்ஸை இங்கிலாந்து அணி தொடங்கியது.  தொடக்க ஆட்டக்காரர்களாக சாக் கிராலி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் களமிறங்கினார்கள். இருவரும் அந்த அணிக்கு சிறப்பான தொடக்கத்தை பெற்றுக்கொடுத்தனர்.  சாக் கிராலி 33 பந்துகளில் 31 ரன்களும், பென் டக்கெட் 52 பந்துகளில் 47 ரன்களும் எடுத்தனர். இவர்களை தொடர்ந்து ஒல்லி போப் களம் இறங்கினார். அவருடன் களமிறங்கிய ஜோ ரூட் 6 பந்துகளில் 2 ரன்களை மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
 
england batsman
மறுபுறம் ஒல்லி போப் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். பின்னர் களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் 10 ரன்களும், அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களிலும், பென் ஃபோக்ஸ் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

 
மறுபுறம் அதிரடியாக விளையாடி வரும் ஒல்லி போப் 208 பந்துகளில் 148 ரன்களை விளாசினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்களை எடுத்துள்ளது. தற்போது இந்திய அணியை விட இங்கிலாந்து அணி 126 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்திய அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை  பும்ரா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.