யாருமே அஷ்வின் அளவு மோசமா நடத்தப்படலை! – சுனில் கவாஸ்கர் ஆதங்கம்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ரவிசந்திரன் அஸ்வின் தேர்ந்தெடுக்கப்படாதது குறித்து சுனில் கவாஸ்கர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில் லண்டனில் நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது. அதை தொடர்ந்து இந்திய அணியின் ஃபார்ம் குறித்த பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. முக்கியமாக டெஸ்ட் கிரிக்கெட்டின் உலகின் நம்பர் 1 பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஷ்வினை ஆடும் 11 பேர் அணியில் எடுக்காமல் விட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்த தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் “நவீன யுகத்தில் எந்த ஒரு இந்திய கிரிக்கெட் வீரரும் அஷ்வின் அளவுக்கு மோசமாக நடத்தப்பட்டதில்லை. அணியில் நம்பர் 1 பேட்ஸ்மேன் ஒருவரை அவரால் சுழற்பந்துக்கு சாதகமான பிட்ச்சில் ஆட முடியாது, புல் அதிகம் உள்ள பிட்ச்சில் ஆட முடியாது என்று காரணம் சொல்லி ஆடும் 11-ல் சேர்க்காமல் இருப்பார்களா? பேட்டிங் லைனில் கூட மாறாமல் அதே இடத்தில் அவர் ஆடியிருப்பார்” என கூறியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அஷ்வின் இருந்திருந்தால் முதல் இன்னிங்ஸில் இவ்வளவு ரன்கள் போயிருக்காது என்றும், இந்திய அணி வெல்ல வாய்ப்பு இருந்திருக்கும் என்றும் பலர் கூறி வருகின்றனர். மேலும் இனி வரும் ஆசியக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளிலாவது அஷ்வினை இந்திய அணி சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் பலருக்கு உள்ளது.
Edit by Prasanth.K