1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 28 ஜூலை 2024 (08:10 IST)

சொந்த மண்ணில் இலங்கை படுதோல்வி..! இந்திய அணி அபார வெற்றி.!!

India Won
இலங்கைக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  
 
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி பல்லேகலேவில் நடைபெற்றது.  
 
டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலன்கா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோர் நல்ல தொடக்க அமைத்து கொடுத்தனர். ஜெய்ஸ்வால் 40 ரன்களுக்கும், சுப்மன் கில் 34 ரன்களுக்கும் அவுட் ஆனார்கள்.

India
அதன்பின் களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 58 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை விறுவிறுவென உயர்த்தினார். அவருக்கு உறுதுணையாக ரிஷப் பன்ட் 49 ரன்கள் குவித்தார். தொடக்க வீரர்கள் 4 பேரும் 30 ரன்களுக்கு மேல் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால் இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 213 ரன்களை எடுத்தது. இலங்கை தரப்பில் மதீஷ பத்திரனா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர்களான பதுன் நிஷங்கா மற்றும் விக்கெட் கீப்பர் குசல் மெண்டிஸ் 84 ரன்கள் சேர்த்தனர். அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் குசல் மெண்ட்ஸ் 45 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் களமிறங்கிய இலங்கை வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். மறுமுனையில் மற்றொரு தொடக்க வீரர் பதுன் நிஷங்கா மட்டும் போராடிக் கொண்டு இருந்தார். நிஷங்காவும் 79 ரன்கள் குவித்து இருந்த நிலையில் அக்சர் பட்டேல் பந்தில் போல்டாகி ஆட்டமிழந்தார். 
 
அதன்பின் வந்த இலங்கை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 19 புள்ளி 2 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 170 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ரியன் பராக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


அர்ஷ்தீப் சிங், அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ், ரவி பிஷ்னோய் ஆகியோ தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரு அணிகளுக்கு  இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு பல்லேகலே மைதானத்தில் நடைபெறுகிறது.