மத்திய அரசுடன் இணைந்து செயல்படுங்கள்.! மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு..!!
மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.
நிதி ஆயோக்கின் 9-வது நிர்வாகக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று (27.07.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தை தமிழகம் உட்பட எதிர்க்கட்சிகளை சேர்ந்த மாநில முதல்வர்கள் புறக்கணித்த நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் கலந்து கொண்டார்.
கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அவரும் வெளிநடப்பு செய்தார். என்னை பேசவிடாமல் மைக் அணைக்கப்பட்டதாக அவர் புகார் தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இந்தியரின் கனவாகும் என்றார். இதற்கு மாநில அரசுகள் முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் மாநில அரசுகளே, மக்களோடு நேரடி தொடர்பில் உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே மாநில அரசுகள், மத்திய அரசோடு ஒருங்கிணைந்து செயல்பட்டு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். அனைத்து மாநில அரசுகளும் தொழில்நுட்பங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
சர்வதேச தரத்தில் திட்டங்கள், கொள்கைகளை உருவாக்கி திறம்பட செயல்படுத்த வேண்டும் என்றும் அந்நிய முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்க வேண்டும் என்றும் இவற்றின் மூலம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற லட்சிய கனவை, நனவாக்க முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்