நாங்கள் ஏன் ஏழை நாட்டு சீரிஸ்களில் விளையாட வேண்டும்… சேவாக்கின் திமிர் கருத்தால் எழுந்த சர்ச்சை!
ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் கடந்த மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை அனைத்து அணிகளும் 7 போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளன. உலகின் அதிக பணமழைக் கொட்டும் லீக் தொடராக ஐபிஎல் உள்ளது. ஒரு ஆண்டு முழுவதும் விளையாடினால் வீரர்கள் தேசிய அணியின் மூலம் எவ்வளவு சம்பாதிப்பார்களோ அதை விட அதிகமாக இரண்டே மாதத்தில் சம்பாதித்துவிடுகின்றனர்.
இதனால் ஐபிஎல் நடக்கும் இரண்டு மாதங்களில் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சர்வதேச கிரிக்கெட் தொடர் எதையும் திட்டமிடுவதில்லை. உலகெங்கிலும் உள்ள வீரர்கள் வந்து ஐபிஎல் தொடரில் விளையாடி புகழ்பெறுகின்றனர். ஆனால் இந்திய வீரர்கள் வேறு எந்த நாட்டு லீக் தொடரிலும் விளையாட பிசிசிஐ அனுமதிப்பதில்லை. இது சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் நடத்தும் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சேவாக்கிடம் “இந்திய வீரர்கள் மற்ற நாடுகள் நடத்தும் லீக் தொடர்களில் கலந்துகொள்ள ஏதேனும் வாய்ப்புகள் இருக்கிறதா?” எனக் கேட்டார். அதற்கு சேவாக் “வாய்ப்பில்லை. ஏனென்றால் நாங்கள் பணக்காரர்கள். நாங்கள் ஏன் மற்ற ஏழை நாடுகளுக்கு சென்று அவர்களின் தொடர்களில் விளையாட வேண்டும்.” என திமிராக பதில் கூறியுள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.