1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (09:32 IST)

உங்க ஹோம் க்ரவுண்டுல போய் இதை பண்ணுங்க..! – கம்பீரை கண்டித்த ஆர்சிபி ரசிகர்கள்!

Gautam Gambhir warn RCB fans
நேற்றைய ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி ரசிகர்களை மிரட்டும் விதமாக கௌதம் கம்பீர் செயல்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய ஐபிஎல் போட்டி பெங்களூர் – லக்னோ அணிகள் இடையே நடைபெற்றது. இந்த போட்டி பெங்களூர் அணியின் ஹோம் க்ரவுண்டான பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. ஹோம் க்ரவுண்ட் மேட்ச் என்பதால் ஏராளமான ஆர்சிபி ரசிகர்கள் இந்த போட்டிகளை காண குவிந்திருந்தனர்.

முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி 212 ரன்களை குவித்த நிலையில் அடுத்ததாக லக்னோ அணி களம் இறங்கியது. இந்த போட்டியில் லக்னோ அணியின் தொடக்க பேட்ஸ்மேனான கைல் மையர்ஸை ஆர்சிபி பவுலர் முகமது சிராஜ் முதல் ஓவரின் மூன்றாவது பந்திலேயே டக் அவுட் செய்தார். இதனால் உற்சாகமடைந்த ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சி கூச்சலிட்டனர்.

அப்போது முதல் ஓவருக்குள்ளேயே தனது அணி வீரர் விக்கெட் இழந்ததில் அணி பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கோவமாக இருந்ததாக தெரிகிறது. உடனே அவர் ஆர்சிபி ரசிகர் கூட்டத்தை பார்த்து வாயில் விரலை வைத்து காண்பித்து சத்தம் போடாமல் இருக்குமாறு எச்சரிக்கும் விதமாக சைகை காட்டினார்.

இது ஆர்சிபி ரசிகர்களை கொதிப்படைய செய்துள்ளது. இதுகுறித்து கௌதம் கம்பீரை கண்டித்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஹோம் க்ரவுண்ட் போட்டிகளில் அந்த அணியின் ரசிகர்கள் அதிகமாக இருக்கும்போது குறிப்பிட்ட அணிக்கு கைத்தட்டல்கள், விசில்கள் பறப்பது இயல்புதான். அதற்காக ரசிகர்களை எச்சரிக்கும் சைகைகளை செய்ய ஒரு அணி பயிற்சியாளருக்கு எந்த உரிமையும் கிடையாது என பேசி வருகின்றனர்.

Edit by Prasanth.K