வியாழன், 28 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 13 மார்ச் 2018 (15:45 IST)

ஹிட் அவுட் சாதனை படைத்த கே.எல்.ராகுல்: கொண்டாடுவதற்கு அல்ல...

இலங்கை சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக சுதந்திர கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இலங்கை நடத்துகின்றது. இதில் இலங்கை, இந்தியா, வங்கதேசம் அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
 
இந்நிலையில் நேற்று இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த இலங்கை அணி 19 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 152 ரன்கள் எடுத்தது. 
 
153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணி 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 153 ரன்கள் எடுத்து முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழிவாங்கி வெற்றி பெற்றது.
 
இந்த போட்டியில், இந்திய வீரர் கே.எல்.ராகுல் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டம் இழந்தார். 10 வது ஓவரில் பந்தை பின்பக்கமாக வந்து அடிக்க முயன்ற போது, அவரது கால் ஸ்டம்பில் பட்டதால் ஹிட் அவுட் ஆனார்.
 
டி20 போட்டியில் ஹிட் விக்கெட்டான முதல் இந்தியர் ராகுல் ஆவார். இதே போல், டெஸ்ட் போட்டியில் லாலா அமர்நாத்தும் (1949), ஒருநாள் போட்டியில் நயன் மோங்கியாவும் (1995) ஹிட் அவுட் ஆகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.