வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 26 ஜூலை 2024 (16:35 IST)

கிரிக்கெட் வாரியத்தில் எந்த அரசியலும் இல்லை… வாய்ப்புகள் கிடைக்காதது பற்றி நடராஜன் பேச்சு!

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான நடராஜன் டிஎன்பிஎல் போட்டிகள் மூலமாக ஐபிஎல் தொடரில் விளையாடி, அதில் பிரகாசித்து பின்னர் இந்திய அணிக்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 ஆகிய மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஆனால் அவருக்கு அடுத்தடுத்து சர்வதேச போட்டிகளில் வாய்ப்பளிக்கப்படவில்லை.

இதற்கு அவரின் காயமும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. காயம் காரணமாக ஓய்வில் இருந்த அவர் இப்போது மீண்டு வந்துள்ளார். தற்போது சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். அவர் இந்திய அணியில் ஆடத்தகுதியான வீரராக இருந்தபோதும் அவருக்கான வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் தேர்வுக்குழுவில் அரசியல் நடப்பதாகவும் ரசிகர்கள் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.

இதுபற்றி பேசியுள்ள நடராஜன் “அதுமாதிரி எந்த அரசியலும் நடக்கவில்லை. இந்திய அணியில் எனக்கு வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. ஆனால் காயம் காரணமாக என்னால் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை. மாநில வாரியாக கிரிக்கெட் வாரியங்கள் மத்தியில் பாகுபாடு காட்டப்படுவதில்லை.  பிசிசிஐ ஆதரவு இருந்ததால் மட்டுமே என்னால் இந்திய அணிக்காக விளையாட முடிந்தது” எனக் கூறியுள்ளார்.