பல நாடுகள் இந்தியாவிற்கு எதிராக பயத்துடன்தான் விளையாடும் - ராபின் சிங்


லெனின் அகத்தியநாடன்| Last Modified புதன், 17 பிப்ரவரி 2016 (15:28 IST)
உலகின் பெரும்பாலான நாடுகள் இந்தியாவிற்கு எதிராக பயத்துடன்தான் விளையாடும் என்று இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ராபின் சிங் கூறியுள்ளார்.
 
 
மணிகிராம் [MoneyGram] பண பரிமாற்று சேவை நிறுவனம் நாடுமுழுவதும் பல்வேறு நகரங்களில் ‘பந்துவீச்சு சவால்' [Bowling Challenge] என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
 
இதில் கலந்து கொண்டு அதிவேகமாக பந்து வீசும் வீரர்களுக்கு உலகக் கோப்பை போட்டியை நேரில் கண்டுகளிக்க டிக்கெட் வழங்கப்பட உள்ளது.
 
இந்நிகழ்ச்சி நேற்று சென்னை தியாகராய நகரில் உள்ள சோமசுந்தரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ராபின்சிங் தொடங்கி வைத்தார்.
 
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “டி 20 உலகக் கோப்பையை வெல்லும் அணிகள் ஒன்றாக இந்தியா இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. என்னுடைய அனுபவத்தில், மற்ற அணிகள் இந்தியாவில் நிலவும் சூழ்நிலைகளை சமாளித்து ஆடுவது என்பது கடினமானது.
 
பெரும்பாலான அணிகள் இந்தியாவில் பயத்துடன்தான் விளையாடும். குறிப்பாக இந்திய மண்ணில் இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது.
 
தோனி மீதான இடைவிடாத விமர்சனங்களை நிறுத்திக்கொள்ள வேண்டும். அவர் செய்த சாதனைகளுக்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும். இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றவர் தோனிதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :