திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 19 நவம்பர் 2024 (11:00 IST)

பாகிஸ்தான் வருவதில் இந்திய அணிக்கு என்ன பிரச்சனை?... கிரிக்கெட் வாரியத் தலைவர் கேள்வி!

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் என அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் சென்று விளையாட இந்திய கிரிக்கெட் வாரியம் அரசியல் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மறுத்துள்ளது. இது சம்மந்தமாக இந்தியா பாகிஸ்தானுக்கு வந்து விளையாடாது என ஐசிசியிடம் உறுதியாக தெரிவித்து விட்டதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வழிகாட்டுதலுக்காக ஒரு அதிகாரப்பூர்வ மின்னஞ்சலை ஐசிசி அனுப்பியது. பாகிஸ்தான் சார்பாக பேசவேண்டிய ஐசிசி இந்திய அணி மூலமாக வரும் வருவாய்க் காரணமாக இந்திய கிரிக்கெட் வாரியத்தைக் கண்டிக்க அஞ்சுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த தொடரை நடத்துவதில் இருந்து விலகிக் கொள்வதாக தற்போது அறிவித்துள்ளது. இது குறித்து “இந்திய அணி, பாகிஸ்தான் வந்து விளையாடவில்லை என்றால் நாங்கள் இந்த தொடரை நடத்துவதைக் கைவிடுகிறோம்” என அறிவித்துள்ளது. இதனால் ஐசிசி தொடரை தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றும் ஆலோசனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி “மற்ற அணிகள் அனைத்தும் பாகிஸ்தானுக்கு வர ஒத்துக்கொண்ட பிறகு, இந்தியாவுக்கு மட்டும் என்ன பிரச்சனை? அப்படி எதாவது பிரச்சனையாக இருந்தால் அதை எங்களிடம் முன்வைக்க வேண்டும். இதுபற்றி ஐசிசிக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளோம். இன்னும் அவர்களிடம் இருந்து பதில் வரவில்லை.  இந்தியா வராவிட்டால் நாங்கள் அவர்கள் இல்லாமல் தொடரை நடத்துவோமா எனக் கேள்வி எழுப்பப்படுகிறது. அது பற்றி ஐசிசிதான் பதிலளிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.