1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 20 மே 2024 (14:15 IST)

RCB வீரர்கள் தோனியை அவமதித்தார்களா?... மைக்கேல் வாஹ்ன் சொன்ன கருத்து!

நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்த நிலையில் சி எஸ் கே அணி ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. அந்த போட்டியில் சிஎஸ்கே தனது இறுதி ஓவரில் இருந்தபோது 6 பந்துகளில் 17 ரன்கள் அடித்தால் ப்ளே ஆப் வாய்ப்பு உறுதியாகிவிடும் என்று இருந்தது.

அப்போது யஷ் தயால் பந்து வீச முதல் பந்தில் சிக்ஸர் அடித்த தோனி இரண்டாவது பந்தில் கேட்ச் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் எட்டக்கூடிய இலக்கையும் எட்ட முடியாமல் சிஎஸ்கே தோல்வியடைந்தது. இந்நிலையில் சிஎஸ்கேவின் தோல்விக்கு தோனி அடித்த அந்த சிக்ஸர்தான் காரணம் என ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். கடைசி ஓவரில் அவுட் ஆனதில் இருந்தே மிகவும் சோகமாகவும் அதிருப்தியாகவும் காணப்பட்டார்.

இந்நிலையில் போட்டி முடிந்ததும், அவர் ஆர் சி பி வீரர்களுக்குக் கைகூட கொடுக்காமல் சென்றுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்தை எழுப்பியது. ஆனால் தோனி ஆர் சி பி வீரர்களோடு கைகுலுக்க  வரிசையில் காத்திருந்ததாகவும், ஆனால் ஆர் சி பி வீரர்கள் நீண்ட நேரம் கொண்டாட்டத்திலேயே ஈடுபட்டதால்தான் அவர் ஓய்வறைக்கு திரும்பிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட்  கேப்டன் மைக்கேல் வாஹ்ன் “ஆர் சி பி வீரர்கள் தோனியை மதித்து அவரிடம் வந்து கைகுலுக்கி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் நீண்ட நேரம் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவேளை இதுதான் தோனியின் கடைசி போட்டியாக இருக்கும்பட்சத்தில் ஆர் சி பி வீரர்கள் தோனியோடு கைகுலுக்க முடியவில்லையே என வருந்துவார்கள்” எனக் கூறியுள்ளார்.