வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2024 (08:15 IST)

கவாஸ்கர், கபில்தேவுக்குக் கூட நடந்திருக்கிறது... ருத்துராஜ், நடராஜன் குறித்து பேசிய பாலாஜி!

உலகக் கோப்பையை வென்ற கையோடு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் கேப்டன் ரோஹித் ஷர்மா. இதனால் இனிமேல் டி 20 அணிக்குக் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யாதான் செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது டி 20 அணிக்குக் கேப்டனாக சூர்யகுமார் யாதவ்வை நியமிக்க வேண்டும் எனப் புதுப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அழுத்தம் கொடுப்பதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து டி 20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஹர்திக் பாண்ட்யா துணைக் கேப்டன் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து இப்போது மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அதிர்ச்சியை விட ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருப்பது இந்திய அணியில் ருத்துராஜ் இடம்பெறாததுதான். அதே போல தமிழக வீரர்களான வருண் சக்ரவர்த்தி மற்றும் நடராஜன் ஆகியோருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பேசியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் லஷ்மிபதி பாலாஜி “இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாத முதல் வீரரும் ருத்துராஜ் இல்லை. கடைசி வீரரும்  ருத்துராஜ் இல்லை. மிகப்பெரிய ஜாம்பவான்களாக கவாஸ்கர் மற்றும் கபில் தேவ் கூட அணியில் தேர்வு செய்யப்படாமல் உட்கார வைக்கப்பட்டுள்ளார்கள்.

அணியில் தேர்வு செய்யப்படுவது நமது கையில் இல்லை. அதனால் வீரர்கள் கதவு திறக்கும் என பொறுமையாக இருக்காமல் கதவை உடைக்கும் அளவுக்கு விளையாடவேண்டும்” எனக் கூறியுள்ளார்.