உலகிலேயே அதிக வருமான வரி கட்டும் கிரிக்கெட்டராக கோலி சாதனை!.. எத்தனை கோடி ரூபாய் தெரியுமா?
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிரிக்கெட்டின் முகமாக ஒரு வீரர் இருப்பார். முந்தைய தலைமுறையில் இருந்து கிரிக்கெட்டின் முகம் இன்னொரு வீரருக்கு மாறும். அப்படி சச்சின் தோனிக்குப் பிறகு உச்சப் புகழோடு உலகளவில் ரசிகர்களைப் பெற்று இருக்கிறார் கோலி.
சமீபத்தில் டி 20 உலகக் கோப்பையை வென்ற அணியில் அவர் இடம்பெற்றிருந்தார். அவர் உலகக் கோப்பையோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர, அந்த புகைப்படம் ஆசியாவிலேயே அதிகம் பேரால் லைக் செய்யப்பட்ட புகைப்படம் என்ற சாதனையைப் படைத்தது. மேலும் அந்த டி 20 உலகக் கோப்பையை அமெரிக்காவில் பிரபலப்படுத்த கோலியின் புகைப்படம்தான் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது.
உலகளவில் கால்பந்து ஜாம்பவான்களான ரொனால்டோ மற்றும் மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக கொண்டாடப்படும் விளையாட்டு வீரராக கோலி உள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டில் கிரிக்கெட் வீரர்களில் அதிக வருமான வரி செலுத்தியவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவர் கடந்த ஆண்டில் மட்டும் 66 கோடி ரூபாய் வரி கட்டியுள்ளதாக பார்ச்சூன் இந்தியா என்ற ஊடகம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.