கோலி, ரோஹித் ஷர்மா 2027 உலகக் கோப்பையில் விளையாடுவார்களா?... கம்பீர் அளித்த பதில்!
டி 20 உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு இந்திய அணி அடுத்தடுத்த தொடர்களில் விளையாட உள்ளது. ஜிம்பாப்வே தொடர் முடிந்துள்ள நிலையில் அடுத்து இலங்கை சென்று டி 20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது.
இதற்கான அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் சீனியர் வீரர்களான பும்ரா, ரோஹித் மற்றும் கோலி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படலாம் என முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் அணி அறிவிக்கப்பட்ட போது அவர்கள் பெயர் இடம்பெற்றிருந்தது. பயிற்சியாளராக கம்பீரின் முதல் தொடர் என்பதால் அனைத்து வீரர்களும் இடம்பெற வேண்டும் என கம்பீர் விரும்பியதாக தெரிகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் கம்பீர். அப்போது பல விஷயங்களைப் பேசிய கம்பீர் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோரின் எதிர்காலம் குறித்து பேசினார். அதில் “கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் உலகத் தரமான வீரர்கள். அவர்கள் இப்போதும் ஃபார்முடன் இருக்கிறார்கள். சாம்பியன்ஸ் டிரோபி மற்றும் ஆஸ்திரேலியா தொடர்களில் அவர்கள் சிறப்பாக பங்களிப்பார்கள். உடல்தகுதியுடன் இருந்தால் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரிலும் விளையாடலாம்” எனக் கூறியுள்ளார்.