சன்ரைசர்ஸை வெளுத்து வாங்கிய கொல்கத்தா! நேரடியாக இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது!
இன்று நடந்த ஐபிஎல் முதல் தகுதி சுற்று போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தாலும் அதிக ரன்களை எடுக்க முடியவில்லை. சன்ரைசர்ஸ் அணியின் நம்பிக்கை நாயகனான ட்ராவிஸ் ஹெட் ஆரம்பத்திலேயே டக் அவுட் ஆகிவிட, தொடர்ந்து அபிஷேக் ஷர்மாவும் 3 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த ராகுல் த்ரிபாதி நிதானமாக விளையாடி 55 ரன்களை குவித்தார். க்ளாசன் ஓரளவு அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்து 32 ரன்கள் வரை நின்று விளையாடினார். நடுவே வந்த நிதிஷ்குமார் ரெட்டி 9 ரன்களில் அவுட் ஆனார். ஷபாஸ் அகமது டக் அவுட் ஆனார்.
இப்படியே பலரும் சிங்கிள் டிஜிட் ரன்களிலும், டக் அவுட்களிலும் வெளியேற கடைசியாக பேட் கம்மின்ஸ் மட்டும் நின்று விளையாடி ஸ்கோரை 160+ நோக்கி தள்ள முயன்றார். ஆனால் 19.3ல் அவரது விக்கெட்டும் விழ அனைத்து விக்கெட்டையும் இழந்து 159 ரன்களை மட்டுமே சன்ரைசர்ஸ் எடுத்திருந்தது
இந்நிலையில் பேட்டிங்கில் இறங்கிய கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்ட தொடங்கியது. ரஹ்மனுல்லா குர்பாஸ் 23 ரன்களும், சுனில் நரேன் 21 ரன்களும் குவித்து அவுட் ஆனார்கள். அடுத்து களம் இறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும், வெங்கடேஷ் ஐயரும் பார்ட்னர்ஷிப் போட்டு ரன்களை குவித்தனர். வெங்கடேஷ் ஐயர் 28 பந்துகளில் 51 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 24 பந்துகளில் 58 ரன்களையும் குவித்தனர்.
இதனால் 13.4வது ஓவரிலேயே 164 ரன்களை குவித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் 38 பந்துகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வெற்றிக் கொண்டு நேரடியா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
Edit by Prasanth.K