வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: செவ்வாய், 14 ஜூலை 2015 (16:50 IST)

மணீஷ் பாண்டே - கேதர் ஜாதவ் அபாரம்: ஜிம்பாப்வே அணிக்கு இந்தியா 277 ரன்கள் இலக்கு!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் அறிமுக வீரர் மணீஷ் பாண்டே அரை  சதமடித்துள்ளார். கேதர் ஜாதவ் சதமடித்து அசத்தினார்.
 

 
ஹாராரே நகரில் நடந்து வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி, முதலில் பீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஜொலிக்கவில்லை. ரஹானே 15 ரன்னிலும், முரளி விஜய் 13 ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். பின்னர் வந்த உத்தப்பா 31 ரன்களும், திவாரி 10 ரன்னிலும் அவுட் ஆனார்கள். தொடர்ந்து களமிறங்கிய மணீஷ் பாண்டேவும், கேதர் ஜாதவும் இணைந்துதான் ஜிம்பாப்வே பந்துவீச்சை விளாசி தள்ளி ரன்களை குவித்தனர்.
 
இதில் மணீஷ் பாண்டே இந்திய அணிக்காக களமிறங்கிய முதல் சர்வதேச போட்டி இதுதான். இந்திய அணியில் இடம் கிடைத்த ஆனந்தத்தில் மைதானத்திலேயே கண்ணீர் விட்ட மணீஷ் பாண்டேவை சக வீரர்கள் தேற்றினர்.
 
ஒரு கட்டத்தில் 84 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்த இந்திய அணியை, பாண்டே மீட்டெடுத்தார். 67 பந்துகளை எதிர்கொண்ட மணீஷ் பாண்டே, அரை சதமடித்தார். இதில் 4 பவுண்டரிகளும் ஒரு சிக்சரும் அடங்கும். அதே போல் கேதர் ஜாதவும் 64 பந்துகளில் அரை சதமடித்தார்.
 
முதல் போட்டியிலேயே சதமடித்து அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மணீஷ் பாண்டே 71 ரன் எடுத்திருந்த போது, சிபாபா பந்தில் அவுட் ஆனார். அதே வேளையில் ஜாதவ் அபாரமாக விளையாடி சதத்தை பூர்த்தி செய்தார். கேதர் ஜாதவ் அடித்த முதல் சதம் இதுவாகும். இதில் 12 பவுண்டரிகளையும் ஒரு சிக்சரையும் கேதர் ஜாதவ் விளாசினார். முக்கியமாக 96 ரன்னில் இருந்தபோது கேதர் ஜாதவ் சிக்சர் அடித்து சதம் அடித்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 276 ரன்களை குவித்தது.