செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 2 ஜூலை 2022 (23:49 IST)

ஜஸ்பிரித் பும்ரா ஒரே ஓவரில் குவித்த 35 ரன்கள் - பிரையன் லாராவின் உலக சாதனை முறியடிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய 84வது ஓவரில் 35 ரன்கள் சேர்த்து, இந்திய அணி கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டி குறித்த முக்கிய தகவல்கள் இங்கே தொகுத்துள்ளோம்.
 
டெஸ்ட் போட்டிக்கு பேர்போன இங்கிலாந்து அணி, கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மோசமான சாதனையை பதிவு செய்திருக்கிறது.
 
டெஸ்ட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விளாசிய வீரர் எனும் சாதனை படைத்திருக்கிறார் இந்திய கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான ஜஸ்பிரித் பும்ரா.
 
பும்ராவின் சாதனைக்கு இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட்டின் மோசமான ஒரேயொரு ஓவர் காரணமாகிவிட்டது.
 
இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எட்ஜ்பஸ்டனில் நடைபெற்று வருகிறது.
 
ரோஹித் சர்மாவுக்கு கொரோனா உறுதியானதால், கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவுக்குப் பிறகு இந்திய அணிக்கு வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை கேப்டனாக்கியது பிசிசிஐ.
 
ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு வேகப்பந்துவீச்சாளர் தலைமையில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்டில் இந்திய அணி விளையாடி வருகிறது.
 
முதல் இன்னிங்ஸில் கடைசி பேட்ஸ்மேனாக களமிறங்கிய கேப்டன் பும்ரா, ஸ்டுவர்ட் பிராட் வீசிய 84வது ஓவரை எதிர்கொண்டார்.
 
முதல் பந்தை பும்ரா பவுண்டரிக்கு விளாசினார். அடுத்த பந்து வைடு பவுண்டரியாக அமைந்தது. 3வது பந்தை பும்ரா சிக்சருக்கு விளாச, அது நோ பாலாக மாறியது. அடுத்து போடப்பட்ட 3 பந்துகளிலும் ஹாட்ரிக் பவுண்டரிகள் விளாசினார் பும்ரா.
 
7வது பந்து சிக்சரும் 8வது பந்தை சிங்கிள்ஸ் ஆடியும் மொத்தம் 6 எக்ஸ்டிராஸ் உள்பட 35 ரன்கள் சேர்த்து இதுவரை யாரும் செய்திராத சாதனையை படைத்தார் ஜஸ்பிரித் பும்ரா.
 
6 பந்துகளில் முடிய வேண்டிய ஓவரை வைட், நோ பால் என 8 பந்துகளாக ஸ்டுவர்ட் பிராட் வீசியது அவருக்கே சோதனையாக அமைந்துவிட்டது.
 
 
டெஸ்ட் வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா முதலிடத்தில் உள்ளார்.ஜஸ்பிரித் பும்ரா

2003ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் பீட்டர்சன் வீசிய ஒரு ஓவரில் பிரையன் லாரா விளாசிய 28 ரன்களே அதிகபட்சமாக இருந்தது.
பிரையன் லாராவின் சாதனையை ஆஸ்திரேலிய வீரர் பெய்லே (Bailey), தென்னாப்பிரிக்க வீரர் மஹாராஜ் ஆகியோர் சமன் செய்துள்ளனர்.
 
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான பிரையன் லாராவின் சாதனையை ஒரு வேகப்பந்து வீச்சாளர் முறியடித்திருப்பதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறார் கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா.