வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: ஞாயிறு, 17 மே 2015 (14:20 IST)

ஷேன் வாட்சன் அபார சதம்: கொல்கத்தாவை வீழ்த்தி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது ராஜஸ்தான்!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷேன் வாட்சன் சதத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கொல்கத்தா அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
 

 
ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மும்பையில் நேற்று இரவு நடந்த 54வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்தன. டாஸ்’ வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பொறுப்பு கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே, ஷேன் வாட்சன் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆடினார்கள். முதல் ஓவரில் அசார் மக்மூத் பந்துவீச்சில் ஷேன் வாட்சன் தொடர்ந்து 2 பவுண்டரிகள் விளாசினார். அடுத்த ஓவரில் மோர்னே மோர்கல் பந்து வீச்சில் ரஹானே சிக்சர் பறக்க விட்டார். இருவரின் அதிரடி காரணமாக ராஜஸ்தான் அணி  4.3 ஓவர்களிலேயே  50 ரன்னை எட்டியது.
 
அடித்து ஆடிய ரஹானே (37 ரன், 22 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன்) ரன் அவுட் ஆகி வெளியேறினார். ஆனால் ஷேன் வாட்சன் அதிரடி தொடர்ந்தது 9.2 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 100 ரன்னை கடந்தது. ஷேன் வாட்சனுடன் இணைந்த கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 14 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 8 ரன்னிலும், ஃபாக்னர் 6 ரன்னிலும், கருண் நாயர் 16 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார்கள்.
 
6வது விக்கெட்டுக்கு கிறிஸ் மோரிஸ், ஷேன் வாட்சனுடன் ஜோடி சேர்ந்தார். நிலைத்து நின்று ஆடிய ஷேன் வாட்சன் சதம் அடித்தார். அவர் 57 பந்துகளில் சதத்தை கடந்தார். ஐபிஎல் போட்டி வரலாற்றில் ஷேன் வாட்சன் அடித்த 2வது சதம் இதுவாகும். இந்த சீசனில் அடிக்கப்பட்ட 4வது சதம் இதுவாகும். இந்த சீசனில் இதற்கு முன்பு பிரன்டன் மெக்கல்லம், கெயில், டிவில்லியர்ஸ் ஆகியோர் சதம் அடித்துள்ளனர்.
 
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் குவித்தது. ஷேன் வாட்சன் 59 பந்துகளில் 9 பவுண்டரி, 5 சிக்சருடன் 104 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்து 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த வெற்றியையடுத்து ராஜஸ்தான் அணி தனது பிளே-ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்து கொண்டது.