1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 26 மார்ச் 2025 (09:26 IST)

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

KKR vs RR

ஐபிஎல் சீசன் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக் கொள்ள உள்ளன.

 

நடப்பு ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் 10 அணிகளும் முதல் சுற்றை நிறைவு செய்துள்ள நிலையில் 5 அணிகள் முதல் வெற்றியை பதிவு செய்து டேபிளில் உயரத்தில் உள்ளன. அதனால் தோல்வியை சந்தித்த அணிகள் அடுத்த வெற்றிக்காக கடுமையாக போராட வேண்டிய நிலை உள்ளது.

 

அந்த வகையில் இன்று டேபிளில் கடைசி இரண்டு இடங்களில் உள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக் கொள்ள உள்ளன.

 

முன்னதாக ஆர்சிபி அணியுடன் தொடக்க போட்டியில் மோதிய கொல்கத்தா அணி பவுலிங்கில் ஆர்சிபியை கட்டுப்படுத்த தவறியதன் விளைவாக தோல்வியை தழுவியது. அதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சன்ரைசர்ஸுடன் மோதியபோது 286 என்ற இமாலய இலக்கை அடையும் முயற்சியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

 

எனினும் இந்த இரு அணிகளுமே இரண்டு போட்டிகளிலும் இலக்கை எட்ட கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று இரு அணிகளும் மோதிக் கொள்ளும் நிலையில் முதல் வெற்றி யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

கொல்கத்தாவை பொறுத்தவரை கடந்த ஆட்டத்தில் சுனில் நரைன், ரஹானே உள்ளிட்டோர் அதிரடியாக விளையாடி இருந்தனர். டி காக், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல் போன்ற வலிமையான பேட்ஸ்மேன்கள் இந்த போட்டியில் தங்கள் திறமையை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்.

 

ராஜஸ்தான் ராயல்ஸை பொறுத்தவரை ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், நிதிஷ் ரானா, துருவ் ஜுரெல், ஹெட்மெயர் என மிடில் ஆர்டர் தாண்டிய பின்னும் வலுவான பேட்டிங் லைன் அப் உள்ளது. டாஸ் வெல்லும் வாய்ப்பு கிடைத்தால் ராஜஸ்தான் பேட்டிங்கை எடுத்து ரன்களை அள்ளிக் குவிக்க முயற்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த இரு அணிகளும் இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 29 முறை மோதிக் கொண்டுள்ள நிலையில் இரு அணிகளுமே 14 முறை வென்று சமநிலையில் உள்ளன. ஒரு போட்டி ட்ரா செய்யப்பட்டுள்ளது. சம பலத்துடன் உள்ள இரு அணிகள் இந்த மோதல் சுவாரஸ்யமானதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

 

Edit by Prasanth.K