வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 20 ஆகஸ்ட் 2015 (11:22 IST)

ஒராண்டில் அந்நிய மண்ணில் ஒரு டெஸ்டில்கூட வெற்றி பெறாத இந்திய அணி

அந்நிய மண்ணில் இந்திய அணி கடந்த ஒரு வருடத்தில் ஒரு டெஸ்ட் போட்டியைக் கூட வெல்லவில்லை என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.
 

 
இந்திய அணி கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடியது. இதில் நாட்டிங்காமில் நடைபெற்ற முதல் போட்டி வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது.
 
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2ஆவது போட்டியில் இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆனால் அதன் பின்னர் மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் மோசமான தோல்வியை சந்தித்து தொடரை 1-3 என இழந்தது.
 
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் இந்தியா இரண்டு போட்டியை ‘டிரா’ செய்தது. ஆனால், இரண்டு போட்டியில் தோல்வியடைந்து தொடரை 0-2 என இழந்தது.
 
அதன், பின்னர் இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளுக்கு பிறகு வங்கதேசம் சென்ற இந்திய அணி அந்த அணிக்கு எதிரான ஒரு போட்டியை ‘டிரா’ செய்தது. தற்போது இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காலோ மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.
 
கடந்த ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெற்ற பின் இந்தியா ஒரு டெஸ்டில் கூட வெற்றி பெற்றதில்லை. அதேபோல், கடந்த 2011ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் இந்தியா ஒரு டெஸ்டை வென்றிருந்தது.
 
அதற்குப் பிறகு வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி கடந்த மூன்று ஆண்டுகளில் பெற்ற ஒரே வெற்றி லார்ட்ஸ் வெற்றி தான் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.