ரிஷப் பண்ட் ஏன் மூன்றாவது வீரராகக் களமிறங்குகிறார்… இந்திய அணி பயிற்சியாளர் அளித்த பதில்!
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி நேற்று தங்கள் முதல் போட்டியை ஆடியது. இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அயர்லாந்து அணியை இந்திய பவுலர்கள் 96 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர்.
பின்னர் பேட் செய்த இந்திய அணி 2 விக்கெட்களை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. கேப்டன் ரோஹித் ஷர்மா அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். மூன்றாம் இடத்தில் களமிறங்கிய ரிஷப் பண்ட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து இன்னிங்ஸை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
வழக்கமாக நடுவரிசை அல்லது பின்வரிசையில் ஆடும் ரிஷப் பண்ட் இந்த தொடரில் மூன்றாம் இடத்தில் களமிறக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் “ரிஷப் பண்ட் மூன்றாம் இடத்தில் இறங்குவதற்கு அவர் இடது கை பேட்ஸ்மேனாக இருப்பதும் ஒரு முக்கியக் காரணம்” எனக் கூறியுள்ளார்.