வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : புதன், 14 அக்டோபர் 2015 (21:56 IST)

முதல் வெற்றியை ருசித்தது இந்தியா; 22 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா தோல்வி

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்தது.
 

 
இந்தியா நிதானம்:
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இந்தூரில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. கடந்த போட்டியில் 150 ரன்கள் எடுத்து அசத்திய ரோஹித் சர்மா 3 ரன்களில் ரபாடா பந்தில் ஸ்டெம்புகள் சிதற வெளியேறினார்.
 
பின்னர் இணைந்த தவான், ரஹானே ஜோடி மெதுவாக ரன் குவித்தது. இந்த ஜோடி 56 ரன்கள் குவித்தது. தவான் 23 ரன்களில் வெளியேற, விராட் கோலி 12 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
 
இந்திய அணி சரிவு:
 
இதனையடுத்து தோனி களமிறங்கினார். அரைச்சதம் கடந்த ரஹானே 51 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த ரெய்னா 5 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய அக்ஷர் பட்டேல் மற்றும் புவனேஷ்குமார் தலா 13 ரன்கள் எடுத்து வெளியேறினர்.
 
அப்போது இந்திய அணியின் எண்ணிக்கை 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் என்றிருந்தது. இதனால், இந்திய அணி 200 தாண்டுவதே சிரமம் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதன் பிறகு ஹர்பஜன் சிங், தோனியுடன் கைகோர்த்தார்.
 
தோனி விஸ்வரூபம்:
 
இந்த ஜோடி அடித்து விளையாடியது. இதனால், அணியின் எண்ணிக்கையும் உயர்ந்து வந்தது. தோனி 57 பந்துகளில் 50 ரன்கள் கடந்தார். ஹர்பஜன் சிங் 22 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உட்பட 22 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்த இணை 56 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
 

 
பின்னர் வந்த உமேஷ் யாதவ் 4 ரன்களில் வெளியேறினார். கடைசிவரை ஆட்டமிழக்கமால் இருந்த தோனி 86 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் குவித்தது.
 
தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஸ்டெய்ன் 3 விகெட்டுகளையும், இம்ரான் தாஹிர், மோர்னே மோர்கல் தலா 2 விக்கெட்டுகளையும், ரபாடா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

தென் ஆப்பிரிக்கா அசத்தல் தொடக்கம்:
பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஜோடிகளான ஹசிம் அம்லா மற்றும் குவிண்ட்ன் டி காக் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 40 ரன்கள் குவித்தது. அம்லா 17 ரன்களும், டி காக் 34 ரன்களும் எடுத்து வெளியேறினர்.
 
பிறகு, களமிறங்கிய டு பிளஸ்ஸி அரைச்சதம் எடுத்து மிரட்டினர். டுமினியும் அவருக்கு ஈடு கொடுத்து 36 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டுக்கு 82 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் என்ற நிலையில் இருந்தது.
 

 
வெற்றியை நெருங்கிய தென் ஆப்பிரிக்கா:
மேற்கொண்டு 114 ரன்கள் எடுத்தால் வெற்றி; கைவசம் 7 விக்கெட்டுகள் இருந்தது. அப்போது டுமினி 36 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். சிறிது நேரத்திலேயே டு பிளஸ்ஸியும் 51 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
 
அதன் பிறகு தென் ஆப்பிரிக்காவின் வீழ்ச்சி ஆரம்பமானது. ஆனாலும், பின்கள வரிசையில் டி வில்லியர்ஸ், டேவிட் மில்லர், பெஹார்டியன் ஆகியோர் இருந்ததால் இந்திய வீரர்களிடம் சற்று பதற்றத்தை காண முடிந்தது. ஆனால், ரசிகர்கள் தொடர்ந்து உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர்.
 
வீழ்ந்தது மலை:
ஆனால், மிரட்டப்போவார் என எதிர்பார்த்த டி வில்லியர்ஸ், எதிர்பாராத விதமாக [19] ரன்களிலும், டேவிட் மில்லர் ரன் ஏதும் இல்லாமலும் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால், வீரர்களிடம் புது உற்சாகம் பிறந்தது.
 
இடையில் ஸ்டெய்ன் தனது பங்கிற்கு 13 ரன்கள் [1 பவுண்டரி, 1 சிக்ஸர்] எடுத்தார். 39.3 ஆவது ஓவரில் பெஹார்டியன் 18 ரன்களில் வெளியேறும்போது தென் ஆப்பிரிக்கா அணி 200 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்தது.
 
கடைசி நேர திக்.. திக்..:
 
இதனால், 10.3 ஓவர்களுக்கு 48 ரன்கள் தேவை என்றானது. கைவசம் இரண்டு விக்கெட்டுகள். இம்ரான் தாஹி சந்தித்த முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து கிலியை ஏற்படுத்தினார். 43ஆவது ஒவரில் ரபாடா 2 பவுண்டரிகளை ஓடவிட்டார்.
 
இதனால், ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 43 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 221 ரன்கள் குவித்திருந்தது. வெற்றிக்கு 27 ரன்களே தேவை. 44 ஆவது ஓவரை வீச வந்த புவனேஷ்குமார் 2ஆவது பந்தில் இம்ரான் தாஹிர் அவுட் ஆனார். பேட் விளிம்பில் பட்டு தோனியிடம் புகுந்தது.
 
9ஆவது விக்கெட்டுக்கு இருவரும் 21 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. அதே ஓவரின் 3ஆவது பந்தில் கடைசியாக களமிறங்கிய மோர்னே மோர்கல் வந்ததும் பவுண்டரி ஒன்றை விளாசினார்.
 
ஆனால், அடுத்த பந்தில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுக்க முடிந்தது தென் ஆப்பிரிக்க அணியின் கதை. இதனால், தென் ஆப்பிரிக்கா அணி 43.4 ஓவர்களுக்கு 225 ரன்கள் மட்டும் எடுத்து 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
 
இந்தியா தரப்பில் புவனேஷ் குமார், அக்ஷர் பட்டேல் தலா 3 விக்கெட்டுகளையும், ஹர்பஜன் சிங் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது தோனிக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.