வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 29 ஜனவரி 2016 (18:27 IST)

ஆஸ்திரேலியவிற்கு இந்திய அணி பதிலடி: டி 20 தொடரை கைப்பற்றி பழி தீர்ப்பு

ஆஸ்திரேலியவிற்கு இந்திய அணி பதிலடி; டி 20 தொடரை கைப்பற்றிய பழி தீர்ப்பு

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2ஆவது டி 20 போட்டியில், 27 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி அடைந்தது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
 

 
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2ஆவது டி 20 போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது.
 
இதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களமிறங்கினர். இருவரும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை துவம்சம் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு ரோஹித் - தவான் இணை 97 ரன்கள் குவித்தது.
 
32 பந்துகளை சந்தித்து 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷிகர் தவான் வெளியேறினார். பின்னர் விராட் கோலி களமிறங்கினார். அவரும் ஆரம்பம் முதலே அதிரடியாக ரன் குவித்தார்.
 

 
இதற்கிடையில் ரோஹித் சர்மா 37 பந்துகளில் அரைச்சதம் கடந்தார். பின்னர், 47 பந்துகளில் [5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] 60 ரன்கள் குவித்து வெளியேறினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய விராட் கோலி 29 பந்துகளில் [7 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] அரைச்சதத்தைக் கடந்தார்.
 
கடைசியாக இறங்கிய தோனியும், தனது பங்கிற்கு 9 பந்துகளில் 14 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.
 
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி தொடக்க வீரர்கள் ஆரோன் பிஞ்ச் மற்றும் ஷான் மார்ஷ் இருவரும் ஓவருக்கு 10 ரன்ரேட்டிற்கு குறையாமல் பார்த்துக் கொண்டனர். இதனால் ஆஸ்திரேலியா அணி 9 ஓவர்களுக்கு 89 ரன்கள் குவித்தது.
 
முதல் விக்கெட்டாக மார்ஷ் 23 ரன்களில் வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு 94 ரன்கள் குவித்தது. பின்னர் வந்த கிறிஸ் லைன் 2, மேக்ஸ்வெல் 1, வாட்சன் 15 என அடுத்தடுத்து வெளியேறினர். இதற்கிடையில் ஆரோன் பிஞ்ச் அரைச்சதம் கடந்து இந்திய பந்துவீச்சாளர்களை பயமுறுத்தினார்.
 
ஆனாலும், ஆரோன் பிஞ்ச் 48 பந்துகளில் [8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] 74 ரன்களில் வெளியேற ஆஸ்திரேலியாவின் தோல்வி உறுதியானது. 94 ரன்னிலிருந்து மேற்கொண்டு 30 ரன்கள் சேர்ப்பதற்குள் முக்கிய 4 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.
 
20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், இந்திய அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதோடு தொடரையும் வென்று, 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.