திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 18 ஜனவரி 2023 (10:36 IST)

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடம்! – சில மணி நேரங்களில் காலியான மகிழ்ச்சி!

ICC
ஐசிசி இணையதளத்தில் டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த இந்திய அணி சில மணி நேரங்களில் முதல் இடத்தை இழந்துள்ளது.

உலகம் முழுவதும் பல நாடுகளில் கிரிக்கெட் அணிகள் இருந்தாலும் உலக அளவில் பிரபலமானவையாக இருந்து வரும் அணிகள் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளின் அணிகள். ஐசிசியின் ஒருநாள், டெஸ்ட், டி 20 தர வரிசை பட்டியலில் முதல் இடத்தை பெற இந்த நாடுகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில் ஐசிசியின் இணையதளத்தில் நேற்று டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி 115 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருப்பதாகவும், 111 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை கண்டு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

ஆனால் அந்த மகிழ்ச்சி சில மணி நேரங்களே நீடித்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரவுகள் தவறாக இடம்பெற்றிருந்த நிலையில் ஐசிசி அதை சரிசெய்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 126 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இந்திய அணி 115 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K