எங்களுக்காக ரத்தம் சிந்துன உங்களை மறக்க மாட்டோம்! – ட்ரெண்டான #ThankYouWatson
நடப்பு ஐபிஎல் தொடரில் தோல்வியை சந்தித்த சிஎஸ்கே ப்ளே ஆஃப் செல்ல முடியாமல் வெளியேறிய நிலையில் ஷேன் வாட்சன் தனது ஓய்வை அறிவித்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான ஆட்டத்தால் ஐபிஎல் வரலாற்றிலேயே முதன்முறையாக ப்ளே ஆஃப் வாய்ப்பை தவறவிட்டுள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ஷேன் வாட்சன் ஐபிஎல் தொடர்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட வாட்சன் ஐபிஎல் தொடரில் பல அணிகளில் விளையாடி இருந்தாலும் 2018 முதலாக தொடர்ந்து சிஎஸ்கேவுக்காக விளையாடி வருகிறார். சிஎஸ்கே தான் தனக்கு பிடித்த அணி என அவரே பல பேட்டிகளில் சொல்லியும் இருக்கிறார்.
கடந்த 2019 ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கால்களில் ரத்தம் சொட்ட சென்னை சூப்பர் கிங்ஸூக்காக வாட்சன் நின்று விளையாடிய தருணங்கள் சிஎஸ்கே ரசிகர்களால் மறக்க முடியாதவை. வாட்சனின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து அவரை ரொம்பவும் மிஸ் செய்வதாக சிஎஸ்கே ரசிகர்கள் இணையத்தில் #ThankYouWatson என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.