ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 9 ஜூன் 2024 (07:48 IST)

உலகக் கோப்பை தொடரின் முதல் 200+ ஸ்கோர்… இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா!

ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பை தொடர் கடந்த சில தினங்களாக நடந்து வருகின்றன. ஐபிஎல் பார்த்து உற்சாகத்தில் இருந்த ரசிகர்களுக்கு இந்த தொடர் சலிப்பான ஒன்றாகவே அமைந்துள்ளது. ஏனென்றால் இதுவரை நடந்த போட்டிகள் பெரும்பாலானவை எல்லாம் குறைந்த ஸ்கோர் அடிக்கப்பட்ட போட்டிகளாகவே அமைந்துள்ளது. இதுவரை ஒரே ஒரு போட்டி மட்டும் 200 ரன்களை தாண்டி சேர்க்கப்பட்டுள்ளது.

அந்த போட்டி நேற்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த போட்டிதான். வெஸ்ட் இண்டீஸின் பார்படாஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில ஆஸி அணி பேட் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர்.

அதன் பின்னர் வந்த வீரர்களும் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 201 ரன்கள் சேர்த்தது. அதன் பின்னர் இந்த இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 6 விக்கெட்களை இழந்து 165 ரன்கள் மட்டுமே சேர்த்தது.  அந்த அணியின் கேப்டன் பட்லர் மட்டும் அதிகபட்சமாக 42 ரன்கள் சேர்த்தார். சிறப்பாக பந்துவீசிய ஆடம் ஸாம்பா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே மழையால் ஒரு போட்டி ரத்தாகிவிட்ட நிலையில் இங்கிலாந்து அணிக்கு இந்த தோல்வி மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.