இந்தியா தங்கக்கட்டி நாங்க மண்சட்டியா? இலங்கை அணிக்கு பாரபட்சம்! – ஐசிசி மீது இலங்கை அமைச்சர் குற்றச்சாட்டு!
அமெரிக்காவில் நடந்து வரும் உலகக்கோப்பை டி20 போட்டியில் இலங்கை அணி பாரபட்சமாக நடத்தப்படுவதாக இலங்கை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த ஆண்டு உலக கோப்பை டி20 போட்டிகளை மேற்கிந்திய தீவுகள் நடத்தும் நிலையில், இந்த போட்டிகளின் லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும், இறுதி போட்டிகள் வெஸ்ட் இண்டீஸிலும் நடத்தப்படுகின்றன. 4 பிரிவுகளில் 20 அணிகள் மோதும் இந்த போட்டியில் இலங்கை அணி D பிரிவில் தென்னாப்பிரிக்கா, நெதர்லாந்து, நேபாளம், பங்களாதேஷ் உள்ளிட்ட அணிகளோடு மோதுகிறது.
இதில் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்ட இலங்கை அணி 19.1 ஓவரில் 77 ரன்களுக்கு மொத்த விக்கெட்டையும் இழந்தது. இதனால் தென்னாப்பிரிக்கா அணி 16.2 ஓவரில் 80 ரன்களை எடுத்து வென்றது. இந்நிலையில் ஐசிசியின் போட்டி ஏற்பாடுகளை இலங்கை அணி குற்றம் சாட்ட தொடங்கியுள்ளது.
இலங்கையின் முதல் 4 போட்டிகளும் நான்கு வெவ்வேறு இடங்களில் நடைபெறுவதாகவும், ஆனால் இந்தியாவிற்கு மட்டும் முதல் 3 போட்டிகள் ஒரே இடத்தில் நடப்பதாகவும் இலங்கை அணி கேப்டன் ஹசரங்கா குற்றம் சாட்டினார்.
இந்நிலையில் இந்திய அணிக்கு மட்டும் மைதானம் பக்கத்திலேயே அறைகள் புக்கிங் செய்து தரப்பட்டுள்ளதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை இலங்கை விளையாட்டு மந்திரி ஹரின் பெர்னாண்டோ குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ஐசிசிக்கு அவர் புகார் அளித்துள்ளதாகவும், ஒவ்வொரு நாட்டு அணியும் ஒவ்வொரு மாதிரி நடத்தப்படுவது குறித்தும் விளக்கம் அளிக்க கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K