ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 4 செப்டம்பர் 2022 (10:34 IST)

அடுத்த சீசனிலும் “தல” தோனிதான் கேப்டன்! – சிஎஸ்கே அறிவிப்பால் ரசிகர்கள் குஷி!

அடுத்த ஆண்டில் நடைபெறும் ஐபிஎல் டி20 போட்டியிலும் சிஎஸ்கே அணி கேப்டனாக தோனியே தொடர்வார் என கூறப்பட்டுள்ளது.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான மகேந்திர சிங் தோனிக்கு இந்தியா முழுவதும் பரவலாக ரசிகர்கள் உள்ளனர். தற்போது அனைத்து வித போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்ட தோனி ஐபிஎல் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.

ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ்.தோனி, அணியின் கேப்டனாகவும் இருந்து வருகிறார். கடந்த சீசனில் தோனி கேப்டன் பதவியிலிருந்து விலக்கப்பட்டு ஜடேஜா அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.

இது தோனி ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. சில ஆட்டங்களுக்கு பிறகே அணியை வழிநடத்த முடியாது என ஜடேஜா பின் வாங்கிய நிலையில் மீண்டும் தோனி கேப்டன் ஆனார். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா? கேப்டனாக நீடிப்பாரா? என்ற பல கேள்விகள் இருந்து வந்தது.

இதுகுறித்து தற்போது பேசியுள்ள சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், ஐபிஎல் தொடரின் அடுத்த சீசனிலும் சென்னை அணியின் கேப்டனாக எம்.எஸ்.தோனியே இருப்பார் என உறுதிப்படுத்தியுள்ளார். இது சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.