திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 24 ஏப்ரல் 2024 (07:18 IST)

“ஆட்டம் எங்கள் கையில்தான் இருந்தது… ஆனா?”- தோல்விக்குப் பிறகு ருத்துராஜ் சொன்ன கருத்து!

ஐபிஎல் தொடரில் நேற்று சிஎஸ்கே மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த போட்டி கடைசி பந்து த்ரில்லராக அமைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி அபாரமாக விளையாடி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்துள்ளது. சென்னை அணியின் கேப்டன் ருத்துராஜ் சிறப்பாக விளையாடி சதமடித்து அசத்தினார். மற்றொரு வீரரான ஷிவம் துபே 27 பந்துகளில் 66 ரன்களை சேர்த்தார். இந்த கடினமான இலக்கைத் துரத்திய லக்னோ அணி ஆரம்பத்தில் திணறினாலும் பின்னர் சுதாரித்தது.

அதன் பின்னர் ஆடிய லக்னோ அணி தொடக்கத்தில் விக்கெட்களை இழந்து தடுமாறினாலும், அதன் பிறகு ஸ்டாய்னஸ் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோரின் சிறப்பான அதிரடியால் கடைசி ஓவரில் இலக்கை எட்டியது, ஸ்டாய்னஸ் அபாரமாக ஆடி 63 பந்துகளில் 124 ரன்கள் சேர்த்தார்.

இந்த தோல்விக்குப் பின்னர் பேசிய சி எஸ் கே கேப்டன் ருத்துராஜ் “பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டதாகவே உணர்கிறோம். இரண்டாவது விக்கெட் சீக்கிரமே விழுந்ததால் ஜடேஜாவை முன்கூட்டியே இறக்கினோம். நாங்கள் எடுத்த ஸ்கோர் திருப்திகரமானதுதான். ஆனால் அது போதவில்லை என நினைக்கிறேன். இரண்டாவது இன்னிங்ஸில் 13 ஆவது ஓவர் வரை ஆட்டம் எங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் ஸ்டாய்னஸ் சிறப்பாக விளையாடி எங்களை வீழ்த்திவிட்டார். இரண்டாவது இன்னிங்ஸில் பனிப்பொழிவு இருந்ததும் தோல்விக்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது” எனக் கூறியுள்ளார்.