1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 11 ஜனவரி 2016 (14:09 IST)

அதிவேக அரைச் சதத்தில் புதிய சாதனை; சின்னாபின்னமானது இலங்கை

சர்வதேச டி 20 போட்டிகளில் நியூசிலாந்து வீரர் மன்றோ 14 பந்துகளில் அரைச்சதம் விளாசி புதிய சாதனையின் மூலம் இலங்கை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

 

 

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டி 20 போட்டி ஆக்லாந்தில் நேற்று நடைபெற்றது. முதல் டி 20 போட்டியில் இலங்கை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்திருந்தது.
 
இந்நிலையில் நேற்றையப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது.
 
இலங்கை அணியில் அதிகப்பட்சமாக ஆஞ்சலோ மேத்யூஸ் 49 பந்துகளில் [7 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள்] 81 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்றொரு வீரர் தில்ஷன் 28 ரன்கள் எடுத்தார்.
 
இந்த இருவர் மட்டுமே இலங்கை இரட்டை இலக்கத்தை தாண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எட்டு வீரர்கள் இரட்டை இலக்கத்தை தொடாமல் ஒற்றை இலக்கத்திலேயே அவுட் ஆகி வெளியேறினர்.
 
14 பந்துகளில் அரைச்சதம் விளாசிய கொலின் மன்றோவை பாராட்டும் அணி பயிற்சியாளர் மைக் ஹெஸோன்
பின்னர், களமிறங்கிய நியூசிலாந்து வீரர்கள் இலங்கை பந்துவீச்சை துவம்சம் செய்தனர். அந்த அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்தில் 20 பந்துகளில் அரைச்சதம் எடுத்தார். பின்னர் 63 ரன்களில் [6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்] வெளியேறினார்.
 
பின்னர் கொலின் மன்றோ களமிறங்கினார். தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து ஆரம்பித்தவர், வெற்றி இலக்கை சிக்ஸர் அடித்து முடிக்கும் வரை ருத்ர தாண்டவம் ஆடினார். அவர் நேற்றைய போட்டியில், 14 பந்துகளில் [1 பவுண்டரி, 7 சிக்ஸர்கள்] அரைச்சதம் கடந்து புதிய சாதனையை படைத்தார்.
 
மன்றோ அதிவேக அரைச்சதம் விளாசியவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தை மன்றோ தற்போது பிடித்துள்ளார்.
 
முதலிடத்தில் இந்தியாவின் யுவராஜ் சிங் உள்ளார். அவர் 2007ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், 12 பந்துகளில் அரைச்சதம் எடுத்திருந்தார். அந்த போட்டியில் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசியதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றியுள்ளது. ஏற்கனவே இலங்கை அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரையும் இழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.