1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 27 மே 2016 (18:04 IST)

கெய்ல் கிரிக்கெட் உலகின் தலைவர்; தலைப்புச் செய்திக்காக குறிவைக்கப்படுகிறார் - டேரன் சமி

கிறிஸ் கெய்ல் ஒரு கிரிக்கெட் உலகின் தலைவர் என்றும் செய்திதாள்களின் தலைப்புச் செய்திக்காகவே கிறிஸ் கெய்ல் குறிவைக்கப்படுகிறார் என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் டி 20 கேப்டன் டேரன் சமி கூறியுள்ளார்.
 

 
கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக்பாஷ் டி20 போட்டியின் போது மெல்போர்ன் அணிக்காக ஆடிய கிறிஸ் கெயில் டாஸ்மேனியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 15 பந்துகளில் 41 ரன்கள் விளாசினார்.
 
கெயில் ஆட்டமிழந்த பின் தொலைக்காட்சி பெண் நிருபருக்கு பேட்டியளித்தார். இந்த பேட்டியின் போது பெண் நிருபரை பார்த்து உன் கண்களை பார்ப்பதற்காகவே இந்த போட்டியில் கலந்து கொண்டேன் என்றார், மேலும் ”நாங்கள் இப்போட்டியில் எப்படியும் வென்று விடுவோம். அதற்கு பிறகு நாம் சேர்ந்து 'தண்ணி' அடிக்கலாம். வெட்க பட வேண்டாம்” என்றார்.
 
இந்த பேட்டிக்கு பின்னதாக, கெயிலின் செயலுக்கு இங்கிலாந்தின் ஆண்ட்ரூ பிளிண்டாப் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். சிலர், கிறிஸ் கெய்ல் அவ்வாறு நடந்து கொண்டது விளையாட்டின் ஒரு அங்கம்தான் என்று அவருக்கு ஆதரவு அளித்தனர்.
 
இந்நிலையில், கிறிஸ் கெய்லின் சக ஆட்டக்காரரும், மேற்கிந்திய தீவுகள் அணியின் டி 20 கேப்டனுமான டேரன் சமி அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார்.
 
இது குறித்து அவர் கூறுகையில், “கிறிஸ் கெய்ல் ஒரு கிரிக்கெட் உலகின் தலைவர். என்னுடைய சக அணி வீரரான அவருக்கு பாராட்டுகளையும், மரியாதையையும் தருகிறேன். என்னைப் பொறுத்தவரை காரணமில்லாமலே, அவர் மீது குறிவைக்கிறார்கள்.
 
என்னை பொறுத்தவரையில், எங்களுடைய கிரிக்கெட் ஹீரோக்களுல் அவரும் ஒருவர். அவர் ஒரு சிறந்த பொழுதுபோக்காளர். ஆனால், பெரும்பாலானவர்கள் அவருடைய கடந்த காலத்திற்கு சென்று அவரை குற்றம்சாட்டுகிறார்கள்.
 
நான் எப்பொழுதுமே கிறிஸ் கெய்லுக்கு ஆதரவளிக்கிறேன். ஏனெனில், கிரிக்கெட்டிற்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார். ஆம், மக்கள் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 
நமக்கு நாமே அவரவர்கள் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், சில சமயங்களில் செய்திதாள்களின் தலைப்புச் செய்திக்காகவே கிறிஸ் கெய்ல் குறிவைக்கப்படுகிறார் என்றே தோன்றுகிறது” என்று கூறியுள்ளார்.