வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 26 மார்ச் 2016 (18:57 IST)

4 போட்டிகளிலும் தோற்று வெளியேறியது வங்கதேசம்; 75 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி

வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி 20 உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
 

 
இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியின் சூப்பர் 10 சுற்றில் வங்கதேசம் - நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
 
20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு நியூசிலாந்து அணி 145 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து கேப்டன் 32 பந்துகளில் [5 பவுண்டரிகள், 1 சிக்ஸர்] 42 ரன்களும், கொலின் மன்றோ 35 ரன்களும், ராஸ் டெய்லர் 28 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகி வெளியேறினர்.
 
வங்கதேசம் தரப்பில் முஸ்டஃபிஷூர் ரஹிம் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அல்-அமின் ஹொசைன் 2 விக்கெட்டுகளையும், மோர்தஸா 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்.
 
பின்னர் 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 15.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 70 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் வங்கதேச அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார தோல்வி அடைந்தது.
 
அந்த அணியில் சுவகடா ஹோம் எடுத்த 16 ரன்களே அதிகப்பட்சம் ஆகும். இந்திய அணியிடம் பெற்ற தோல்வியில் இருந்து வங்கதேச அணி மீளவில்லை என்றே நினைக்கிறேன். வங்கதேச வீரர்கள் பிட்சுக்கு வருவதும் போவதுமாக இருந்தனர். அந்த அணியில் 8 வீரர்கள் ஒற்றை இலக்கத்தையே தாண்டவில்லை.
 
வங்கதேச அணி தரப்பில் 4 பவுண்டரிகளும், ஒரே ஒரு சிக்ஸரும் மட்டுமே அடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து தரப்பில் இஷ் சோதி மற்றும் கிராண்ட எல்லியாட் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
ஆட்ட நாயகன் விருது கேன் வில்லியம்ஸ்-க்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் உலகக்கோப்பை தொடரில் 4 போட்டிகளிலும் தோல்வியடைந்த வங்கதேசம் பரிதாபமாக வெளியேறியது. அதே சமயம் 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலணியாக நியூசிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.