மொத்த விக்கெட்டும் காலி.. வாகை சூடிய ஆஸ்திரேலியா! – கனவாய் போன இந்தியாவின் ஆசை!
லண்டனில் நடைபெற்ற ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பரபரப்பாக நடந்து வந்தது.
முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் ஆஸ்திரேலியா குவித்த நிலையில் களமிறங்கிய இந்திய அணி 296 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 270 ரன்களை குவித்த நிலையில் இந்திய அணியின் வெற்றி இலக்கு 444 ரன்களாக உயர்ந்தது.
நேற்று இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை இந்தியா தொடங்கிய நிலையில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களே எடுத்திருந்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய இறுதிநாள் போட்டியில் விராட் கோலி, ரஹானே கூட்டணி சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விராட் கோலியின் விக்கெட் ஆட்டத்தையே புரட்டி போட்டுவிட்டது.
விராட் கோலியை தொடர்ந்து அடுத்த பந்திலேயே ஜடேஜா ரன் எடுக்காமலே டக் அவுட் ஆனார். தொடர்ந்து ரஹானேவின் விக்கெட்டும் விழுந்த நிலையில் ஆட்டம் ஆஸ்திரேலியாவுக்கு சாதகமாக மாறியது. பின்னர் வந்த ஷர்துல் தாகுர், உமேஷ் யாதவ், சிராஜ் உள்ளிட்டவர்களாலும் ஆஸ்திரேலிய பவுலிங்கிற்கு ஈடு கொடுக்க முடியாததால் விக்கெட்டை இழந்தனர்.
இதனால் இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இந்த தோல்வியினால் 10 ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனவு தொடர்ந்து இந்தியாவிற்கு கனவாகவே ஆகியுள்ளது.
Edit by Prasanth.K