வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 7 ஜனவரி 2016 (12:01 IST)

வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா பெருஞ்சுவர்; ஹசிம் அம்லா கேப்டன் பதவியிலிருந்து விலகல்

தென் ஆப்பிரிக்கா அணிக்கு பெருஞ்சுவர் போல் விளங்கிவந்த ஹசிம் அம்லா கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
 

 
தென் ஆப்பிரிக்கா அணி கடந்த 9 ஆண்டுகளாக எந்தவொரு டெஸ்ட் தொடரையும் இழக்காமல் ராஜ பவனி வந்தது. ஆனால், கடந்த ஆண்டு இந்தியாவிற்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அதில், இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
 
இந்த வெற்றி மூலம், தென் ஆப்பிரிக்க அணி 2006ஆம் ஆண்டுக்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்ததில்லை என்ற சாதனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
 
மேலும், தென்ஆப்ரிக்கா 2015ஆம் ஆண்டு ஆடிய 8 டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரே  ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே வென்றது.
 
இந்நிலையில், இங்கிலாந்துடனான 4 போட்டிகள் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், 241 ரன்கள் வித்தியாசத்தில் தனது சொந்த மண்ணில் படுதோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்டில் போராடி டிரா செய்தது. இரண்டாவது டெஸ்டில் கேப்டன் ஹசிம் அம்லா நீண்ட நாட்களுக்குப் பின் இரட்டை சதத்தைப் பதிவு செய்திருந்தார்.
 
ஆனாலும், சொந்த மண்ணில் தோல்வியை தழுவியதால், அவரது தலைமை குறித்து விமர்சனங்கள் எழுந்தது. இதனையடுத்து தான் டெஸ்ட் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
 
இது குறித்து அவர் கூறுகையில், “கேப்டன் பதவி எனக்கு அளிக்கப்பட்டபோது உண்மையிலேயே அதை மிகப்பெரிய கெளவுரவமாக கருதினேன். கேப்டனாக இருந்த காலம் முழுவதும், சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக இருந்தனர்.
 
அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும், அடுத்ததாக யார் தலைமைப் பதவிக்கு வந்தாலும் அவர்களுக்கும், தென் ஆப்பிரிக்க அணிக்கும் எனது முழு ஒத்துழைப்பையும் அளிப்பேன்.
 
இந்த முடிவெடுப்பதற்கு சற்று கடினமானதாகத்தான் இருந்தது. ஆனாலும் தற்போது பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறேன். வேறொரு நபர் யாரேனும் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.