செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 18 அக்டோபர் 2021 (20:01 IST)

‘திருட்டுப்பயலே 2 " இந்தி ரீமேக் டைட்டில் வெளியானது!

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் தரமான படைப்புகளைக் கொடுத்து முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சுசிகணேசன். தமிழில் இவர் இயக்கிய ‘ஃபைவ் ஸ்டார்’, ‘விரும்புகிறேன்’, ‘கந்தசாமி’ “  திருட்டுப்பயலே "உட்பட ஏராளமான படங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவை.
 
தற்போது வெற்றிப் படமான ‘திருட்டுப்பயலே - 2’ படத்தை இந்தியில் இயக்கி வருகிறார். சமீபத்தில் இதன் இந்தி டைட்டில்  வெளியானது. படத்துக்கு ‘தில் ஹே கிரே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. தமிழில் இதன் அர்த்தம், இதயத்தின் நிறம் சாம்பல் .இந்த உலகத்தில் வெள்ளை மனம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். 
கறுப்பு மனம் உள்ளவர்களும் இருக்கிறார்கள். கிரே இதயம் என்றால் வெள்ளை, கறுப்பு என இரண்டும்  கலந்தது. அப்படி ஒரு கிரே இதயம் படைத்த மனிதர்களின் கதையைத் தனித்துவமாக இதில் சொல்லியுள்ளார்கள். 
 
இந்தப் படம் தமிழில் வெளியான ‘திருட்டுப்பயலே 2 "படத்தின் நேரடி ரீமேக்காக வெளியாகவுள்ளது. 
இதில் நாயகனாக வினித் குமார் சிங் நடிக்கிறார். தற்போது பாலிவுட் முன்னணி நடிகராக உள்ள இவரை ‘முக்காபாஸ்’ என்ற படத்தில் அனுராக் காஷ்யப் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
நாயகியாக ஊர்வசி ரெளத்தேலா நடிக்கிறார். பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவருக்குச் சமூக வலைத்தளங்களில் 4.5 கோடி ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் அக்‌ஷய் ஒப்ராய் நடிக்கிறார். இவர் ‘பீட்சா’ இந்தி ரீமேக்கில் நடித்தவர். தற்போது வில்லனாக பிரசன்னா நடித்த பாத்திரத்தில் நடிக்கிறார் நாயகியின் அம்மாவாக சீதா நடிக்கிறார். தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள சீதா இந்தப் படத்தின் மூலம் முதன் முறையாக இந்தியில் அறிமுகமாகிறார். 
 
இவர்களுடன், இயக்குநர் சுசி கணேசன் உயர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தமிழில் இவர் நடித்த துப்பறியும் வேடத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்கிறார். இது தவிர, ஏராளமான பாலிவுட் முன்னணி நடிகர்களும் நடிக்கிறார்கள். 
 
இந்தப் படத்துக்கு சேது ஸ்ரீராம் ஒளிப்பதிவைக் கவனிக்க, ராம் எடிட்டிங் செய்துள்ளார். சண்டைக் காட்சிகளை ‘ஸ்டன்’ சிவா அமைத்துள்ளார். தமிழ் டெக்னீஷியன்களான இவர்கள் அனைவரும் பாலிவுட் படத்துக்குப் பணியாற்றுவது சிறப்பு மிக்க அம்சம். பாலிவுட்டைச் சேர்ந்த முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களும் இதில் கைகோர்த்துள்ளார்கள். 
 
பிரபல கன்னடத் தயாரிப்பு நிறுவனமான ‘சுரஜ் புரொடக்‌ஷன்’ எம்.ரமேஷ் ரெட்டி மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இவர் கன்னடத்தில் சிறந்த படத்துக்கான தேசிய விருது வாங்கியவர். ‘திருட்டுப்பயலே2 "இந்தியில் உருவான விதம் சுவாரஸ்யமானது. பெங்களூர் திரயேட்டரில் ,தயாரிப்பாளர் எம்.ரமேஷ் ரெட்டி ‘திருட்டுப்பயலே 2 "படத்தைப் பார்த்துவிட்டு ,இயக்குனரை அழைத்து பாராட்டியதோடு கன்னடம், தெலுங்கு ரைட்ஸ் வாங்கியுள்ளார். 
 
அதே முனைப்போடு இந்தியிலும் இந்தப் படத்தைத் தயாரித்து முடித்துள்ளார் . இந்தியில் முதல் படமாக தயாரிப்பாளராக அடி எடுத்துவைக்கிறார் ரமேஷ் ரெட்டி . சுசி கணேசனின் தாயாரிப்பு நிறுவனமான 4 வி எண்டர்டெயின்மெண்ட் - சார்பாக மஞ்சரி சுசிகணேசன் இணைந்து தயாரிக்கிறார்.   
 
சுசி கணேசனின் இரண்டாவது பாலிவுட் படைப்பாக வெளிவரவுள்ள இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளார்கள். காவல் துறையில் நடக்கும் சர்ச்சைக்குரிய தொலைபேசி ஒட்டுக்கேட்கும் அழைப்பால் ஒரு அழகான குடும்பம் எப்படி சிக்கிக்கொள்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதைச் சுருக்கம்.
 
தற்போது வெளியாகியிருக்கும் டைட்டில் எல்லோரையும் கவரும் விதத்தில் இருப்பதாக படக்குழுவுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும் ரசிகர்களும் பாராட்டு தெரிவித்துவருகிறார்கள்.