பிரபல நடிகரின் திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளித்த 8 மாநிலங்கள்

Last Modified வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (08:20 IST)
பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்த சூப்பர் 30' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்திற்கு இந்தியாவில் உள்ள 7 மாநிலங்கள் ஏற்கனவே வரிவிலக்கு அளித்துள்ள நிலையில் தற்போது ஜம்மு காஷ்மீர் மாநிலம் வரி விலக்கு அளித்துள்ளது'சூப்பர் 30' திரைப்படத்திற்கு ஏற்கனவே பீகார், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், குஜராத், புதுடெல்லி, மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய மாநிலங்கள் சமீபத்தில் வரி விலக்கு அளித்துள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த பட்டியலில் ஜம்மு காஷ்மீர் மாநிலமும் இணைந்துள்ளது

பீகார் மாநிலத்தை சேர்ந்த கணிதமேதையும் கணித ஆசிரியருமான ஆனந்த்குமார் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தான் 'சூப்பர் 30' திரைப்படம். இவர் பீகாரில் உள்ள ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி அளித்து, தனது வருமானத்தின் பெரும்பகுதியை செலவு செய்தவர். ஒவ்வொரு ஆண்டும் பீகாரில் ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்கள் 30 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு தேவையான கல்வி, நுழைவு தேர்வுக்கு பயிற்சி ஆகியவைகளை அளிக்க உதவி செய்துள்ளார். இவரிடம் பயின்ற பல மாணவர்கள் தற்போது இந்தியாவின் உயர் பதவியில் உள்ளனர். பீகார் மாநிலத்தை சேர்ந்த பெரும்பாலான ஐஏஎஸ் அதிகாரிகள் இவரிடம் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த ஜூலை 12ம் தேதி வெளியான இந்தப் படத்தில் ஹிருத்திக் ரோஷன், மிருணாள் தாகூர், வீரேந்திர சக்சேனா, நந்தீஷ் சிங் உள்பட பலர் நடித்திருந்தனர். விகாஸ் பால் இயக்கிய இந்த படத்திற்கு அஜய்-அதுல் இசையமைத்திருந்தனர். இந்த படம் ரூ.115 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை சுமார் ரூ.190 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :