ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Updated : திங்கள், 14 நவம்பர் 2022 (12:18 IST)

யசோதா - திரைப்பட விமர்சனம்

நடிகர்கள்: சமந்தா, வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், முரளி ஷர்மா; இசை: மணி ஷர்மா; இயக்கம்: ஹரி - ஹரீஷ். ஓர் இரவு, அம்புலி, ஆ ஆகிய படங்களை இயக்கிய ஹரி - ஹரீஷ் இரட்டையரின் லேட்டஸ்ட் படம்தான் இந்த யசோதா. சமந்தா நடித்திருப்பதால், கூடுதல் கவனத்தைப் பெற்றிருக்கிறது இந்தப் படம்.
 
இன்று வெளியாகியிருக்கும் இந்தப் படத்திற்கு ஊடகங்களில் தற்போது விமர்சனங்கள் வெளியாகிவருகின்றன. இந்தப் படத்தின் கதை இதுதான்: தன்னுடைய தங்கையின் மருத்துவச் செலவுக்குத் தேவைப்படுவதால், யசோதா (சமந்தா)  வாடகைத் தாயாகிறார். அந்த காலகட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்தின் பராமரிப்பில் இருக்கிறார்.
 
மற்றொரு பக்கம், மூன்று பேர் இறந்து போகிறார்கள். காவல் துறை இந்த கொலை வழக்கை விசாரிக்கும்போது, யசோதாவைக் கவனித்துக்கொள்ளும் தனியார் நிறுவனத்தில் பல முறைகேடான விஷயங்கள் நடப்பது தெரிகிறது.
 
இந்த வழக்குக்கும் யசோதாவுக்கும் என்ன தொடர்பு என்பது மீதிக் கதை.
 
வாடகைத்தாய் விவகாரத்தில் இத்தனை ஆபத்தா?
வாடகைத்தாய் விவகாரத்தில் நடக்கும் விஷயங்களை நமக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் காட்டியிருக்கும் விதத்தில் மிக முக்கியமான படம் என்கிறது இந்து தமிழ் திசையின் விமர்சனம்.
"வாடக்கைத் தாய் விவகாரத்தை கதைக் கருவாக எடுத்துக்கொண்டு அதையொட்டி திரைக் கதையை உருவாக்கி இறுதியில் வேறொரு விஷயத்தை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
 
கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த அவர்கள் எடுத்துக்கொண்ட நேரம், கதைக் களத்தை அறிமுகப்படுத்துவது என முதல் பாதி பெரிய சுவாரஸ்யங்களற்று பொறுமையாகவே நகர்கிறது.
 
இடைவேளைக்கு முன்புதான் திரைக்கதை படத்தின் மையத்திற்குள் நுழைகிறது. படத்தின் இரண்டாம் பாதி முழுவீச்சில் விறுவிறுப்பாக நகர்கிறது.
 
இரண்டு வெவ்வேறு கதைகளும் ஒன்றிணையும் இடமும் இறுதிக் காட்சியில் வரும் திருப்பமும் ரசிக்கும்படியாக இருந்தது. பின்னணி இசை, பாடல்கள், ஒளிப்பதிவு, தொழில்நுட்ப ரீதியாக படம் அதன் பலத்திலிருந்து குன்றவில்லை.சமந்தாவின் கதாபாத்திரம் வாயிலாக பெண்களுக்கான தைரியத்தை கட்டமைத்திருக்கிறார்கள்.
மருத்துவமனைக்கு வருகிற பெண்களை ஆசை வார்த்தை கூறி வாடகைத் தாயாக மாற்றுவது, அதற்குள் நடக்கும் கமிஷன் விவகாரங்கள், முறைகேடான வாடகைத் தாய் முறை, குடும்பச் சூழலால் வாடகைத் தாயாக ஒப்புக்கொள்ளும் பெண்களை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்டவை ‘யசோதா’ மூலம் வெளிச்சம் பெற்றுள்ளன.
 
சில சின்ன சின்ன பிரச்சினைகள் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக முக்கியமான கதைக் களத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்ற வகையில் கவனிக்க வைக்கிறது இந்த ‘யசோதா’" என்கிறது இந்து தமிழ் திசையின் விமர்சனம். சிரமத்துடன் கடக்க வேண்டிய முதல் பாதி
பெயரைப் பார்த்து அந்த யசோதாவை நினைத்துக்கொண்டு செல்லாமல், எதிர்பார்ப்பின்றிச் சென்றால் த்ரில்லான இந்த ‘யசோதா’வை ரசிக்கலாம் என்கிறது தினமணி நாளிதழின் விமர்சனம்.கிரைம் திரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகியிருந்தாலும் முதல் பாதியில் சில இடங்களை திரைக் கதைத் தேக்கம் காரணமாக ‘சிரமத்துடன்’ கடக்க வேண்டியிருக்கிறது.
 
இரண்டாம் பாதியில் சஸ்பென்ஸ் காட்சிகள் கைதட்ட வைக்கின்றன. குறிப்பாக, படத்தின் மையமாக மருத்துவம் சார்ந்த விஷயத்தைக் கையில் எடுத்திருப்பதால் சில காட்சிகளை நம்ப முடியவில்லை.
 
இதற்கெல்லாம் வாய்ப்பு இருக்காது என்கிற எண்ணமே எழுகிறது. மருத்துவர்களுக்கே வெளிச்சம்.’தி ஃபேமிலி மேன்’ இணையத் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய சமந்தா இந்தப் படத்திலும் தன் வெகுளித்தனமான நடிப்பால் ரசிக்க வைக்கிறார். 
 
நடிகை வரலட்சுமி சரத்குமார் சர்க்கார் திரைப்படத்திற்கு பின் படத்தில் மீண்டும் எதிர்மறையாக கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
 
வில்லியாக மாறினால் கண்டிப்பாகத் தமிழ் சினிமாவில் ஒரு சுற்று வருவார் என்கிற அளவிற்குக் கதையுடன் ஒன்றி நடித்துள்ளார்.
 
பெரும்பாலான காட்சிகள் ஒரே இடத்தில் நடப்பதால் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது" என்கிறது தினமணி நாளிதழ். 
 
இது முழுக்க முழுக்க சமந்தாவின் திரைப்படம் என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் விமர்சனம்."படத்தின் முதல் பாதி, காமெடி மற்றும் உணர்வுரீதியான காட்சிகள் என்று நகர்கிறது.
 
வாடகைத் தாய்களுக்கான இடத்தில் இருக்கும் மருத்துவருடன் யசோதா கேலியாகப் பேசுவது, அங்கு பணியாற்றுபவர்களுடன் விளையாடுவது, அங்கிருக்கும் பிற வாடகைத் தாய்களுடன் பேசுவது போன்ற காட்சிகள் கலகலப்பாக நகர்கின்றன.  
 
சமந்தா
பட மூலாதாரம்,@SRIDEVIMOVIEOFF
"சமந்தாவின் நடிப்பு சிறப்பு"
அந்த இடத்தைப் பற்றி யசோதா அதிகம் கண்டுபிடிக்க, கண்டுபிடிக்க, காவல்துறையின் விசாரணை தடம் புரண்டுகொண்டே போகிறது. இடைவேளைக்கு முன்பு வரும் சண்டைக் காட்சி, ஒரு சிறப்பான த்ரில்லர் வரப்போகிறது என்பதை முன்னறிவிக்கிறது.  
 
அடுத்து என்ன வரப்போகிறது என்பதை யூகிக்க முடிந்தாலும் (யூகிப்பது கடினம்தான்) படம் சுவாரஸ்யமாகவே நகரும். 
 
ஆனால், யசோதாவைப் பற்றி, தாயின் அன்பைப் பற்றி, பிரசவம், கர்ப்பம் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் பேசும்போது சற்று நாடகத்தனமாக நகர்கிறது படம். படத்தின் நீளத்தை அதிகரிப்பதைத் தவிர, இந்தக் காட்சிகளால் வேறு பயன் இல்லை என்பதால் அவை இல்லாமலேயே எடுத்திருக்கலாம்.
 
கிராஃபிக்ஸ் காட்சிகளும் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம். கதாநாயகியுடன் தங்கியிருக்கும் பெண்களின் பாத்திரங்கள் இன்னும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.  
 
யசோதாவின் பாத்திரத்தில் நடித்திருக்கும் சமந்தா, சிறப்பாக நடித்திருக்கிறார். இது முழுக்க முழுக்க அவருடைய படம்தான். அவர் சண்டையிடும் காட்சிகளிலும் பஞ்ச் வசனங்களைப் பேசும்போது திரையரங்குகளில் விசில் பறக்கிறது.
 
வரலட்சுமியும் உன்னி முகுந்தனும்கூட சிறப்பாக நடித்திருக்கிறார்கள். வழக்கமான மசாலா அல்லது காதல் கதையைக் கொண்ட திரைப்படம் வேண்டாமென்றால், இந்த வார இறுதியில் யசோதாவைப் பார்க்கலாம். த்ரில்லர் ரசிகர்களாகவோ சமந்தாவின் ரசிகர்களாகவோ இருந்தால் கண்டிப்பாக பார்க்கலாம்" என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.
 
சமந்தா
பட மூலாதாரம்,@SRIDEVIMOVIEOFF
ஒற்றைப் பரிமாணமுள்ள சில பாத்திரப்படைப்புகளைத் தவிர்த்துவிட்டு, சில பதிலில்லாத இடைவெளிகளை நீக்கியிருந்தால் இன்னும் சிறப்பான த்ரில்லராக வந்திருக்கும் என்கிறது தி இந்து நாளிதழின் விமர்சனம்.
 
"உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் வாடகைத் தாய் என்பது முழுப் படத்தின் ஒரு அம்சம்தான். இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம் என்றாலும் கூட, புதிதாக எதையோ செய்ய முயன்ற வகையில் சுவாரஸ்யமான திரைப்படம்தான் இது.
 
ஏகப்பட்ட க்ளூக்களுடன் கதையை நகர்த்திச் செல்கிறார் இயக்குநர். இவையெல்லாம் முதலில் சாதாரணமாகத் தெரிந்தாலும் ஒரு த்ரில்லருக்கே உரித்தான பெரிய சித்திரத்தை உருவாக்க இவை உதவுகின்றன.
 
உதாரணமாக, கண்ணாடியில் தனது ஸ்டிக்கர் பொட்டை யசோதா ஒட்டிவைத்துக்கொண்டே இருக்கும் காட்சி. அதை மிகச் சிறப்பாக படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். 
 
யசோதா புலனாய்வைத் துவங்கியவுடன் படம் முழுவீச்சில் நகர்கிறது. ஒரு ஆக்ஷன் த்ரில்லராக படம் மாறுவது இயல்பாக நடக்கிறது.
 
தனது காணாமல் போன நண்பர்களைப் பற்றி யசோதா என்ன கண்டுபிடிக்கப் போகிறார் என்பதை யூகிப்பது கடினமல்ல.
 
ஆனால், அந்தக் காட்சி வரும்போது அதனைப் பார்ப்பது மிகுந்த தொந்தரவைத் தருகிறது. வாடகைத் தாயாக இருப்பவர்கள் தாங்கள் சுமக்கும் குழந்தை மீது பாசத்தை வளர்த்துக்கொள்ள முடியுமா என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முயல்கிறது கதை.
 
ஆனால், வாடகைத் தாய் விவகாரம் என்பது இந்த படத்தின் ஒரு பகுதிதான்.
 
முக்கியமான அறிவியல் புனைவு படத்தின் பிற்பகுதியில் வருகிறது. ஒற்றைப் பரிமாணமுள்ள சில பாத்திரப்படைப்புகளைத் தவிர்த்து விட்டு, சில பதிலில்லாத இடைவெளிகளை நீக்கியிருந்தால் இன்னும் சிறப்பான த்ரில்லராக வந்திருக்கும்.
 
இருந்தபோதும் ஒரு சுவாரஸ்யமான த்ரில்லர்தான்" என்கிறது தி இந்து நாளிதழின் விமர்சனம்.