1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 மே 2021 (13:49 IST)

உலக செவிலியர் தினம்: குடும்பத்தைக்கூட கவனிக்க முடியாமல் கொரோனா வைரஸ் தொற்றுடன் போராடும் போராளிகள்

கொரோனா நோய்த் தொற்று காலத்தில் பல்வேறு சிரமங்களுக்கு இடையே மருத்துவர்களும், செவிலியர்களும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

குறிப்பாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்காக நாள் முழுவதும் பணி செய்துவரும் செவிலியர்களின் பணியானது மகத்தான ஒன்று. உலகம் முழுவதும் உள்ள செவிலியர்களைக் கௌரவிக்கும் விதமாக இந்த ஆண்டை செவிலியர் ஆண்டாக அறிவித்தது உலக சுகாதார நிறுவனம்.

நோயாளிகளின் பாதிப்பு எவ்வளவு கடினமாக இருந்தாலும் அவர்களுக்குச் செய்யும் பணியை தங்களது கடமையாகக் கருதி, எந்த காலத்திலும், நோயாளிகளின் பாதிப்பு எவ்வளவு இருந்தாலும் செவிலியர்களைப் பொறுத்தவரை நோயாளிகள் அவர்களுக்கு நோயாளிகள் தான் என்று கூறுகின்றனர். அது சாதாரண நேரமாக இருந்தாலும், இதுபோன்ற கொரோனா நோய்த் தொற்று பரவக் கூடிய நெருக்கடியான காலங்களாக இருந்தாலும் அனைவரையும் ஒன்றாகக் கருதுகின்றனர்.

உலகம் முழுவதும் செவிலியர்கள் தினமாகப் போற்றப்படும் இந்நாளில், கொரோனா சிறப்புப் பிரிவில் மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் அவர்களது அனுபவத்தை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டனர்.

கடலூர் மாவட்டத்தில் கொரோனா சிறப்பு பிரிவில் பணியாற்றும் செவிலியர் விஜயா கூறுகையில்,"நாங்கள் செய்யும் பணி எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், அது எங்களுக்கு ஒரு சுமையாக எப்போதும் இருந்ததில்லை. ஆனால், இந்த கொரோனா சிறப்புப் பணியில் முதன் முதலில் நாங்கள் எங்களை ஈடுபடுத்திக்கொள்ளத் தயார் ஆனபோது மனதளவில் பயம் என்பது அதிகமாகவே இருந்தது.

கொரோனா சிறப்புப் பணிக்காக எங்கள் ஒவ்வொருவருக்கும் சுழற்சி அடிப்படையில் பணி வழங்கப்படுகிறது. குறிப்பாக, தொடர்ந்து 7 நாட்கள் மருத்துவமனையில் பணி செய்து முடித்த பிறகு, நாங்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பிறகு, 14 நாட்கள் எங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதில், முதல் 7 நாட்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொள்வதும், இறுதி 7 நாட்கள் வீடுகளில் எங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறோம். வீட்டிற்குச் சென்று என்னை நான் தனிமைப்படுத்திக் கொள்ளும்போது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரிடம் சரியாக நேரம் ஒதுக்க முடியாமல் இருப்பது கடினமாக இருக்கிறது," எனக் கூறினார்.

"எனது குழந்தை என் அருகில் வந்து தூங்க வேண்டும் என்று ஆசையுடன் வருவாள். ஆனால், என்னால் அவளை அருகில் வைத்துக் கொள்ள முடியாத சூழல் காரணமாக எனது குழந்தையின் அன்பைத் தவிர்க்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்படுகிறேன். அவர்களுக்குப் புரிய வைப்பது கடினமாக இருந்தாலும், கணவர் மற்றும் குடும்பத்தினரின் உதவியால் இதைச் சமாளித்து வருகிறேன்.
 

சில நேரம் மருத்துவமனையில் ஆள் பற்றாக்குறை காரணமாக எங்களுக்கு வீட்டில் எங்களைத் தனிமைப் படுத்திக்கொள்ளும் சூழல் மறுக்கப்படுகிறது. அதன் காரணமாகத் தொடர்ந்து வேலை செய்யும் சூழலுக்கும் நாங்கள் தள்ளப்படுவதால், வீட்டிலுள்ள குழந்தைகள், பெரியவர்கள் குறித்து முழுமையான நிலை அறியாமல் வேதனையாக இருக்கிறது," எனத் தெரிவித்தார் விஜயா.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் சித்ரா கொரோனா பணியின் போது குடும்ப ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அவர் சந்தித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டபோது, "நான் எனது விடுதியிலிருந்து மருத்துவமனைக்கு பணிக்காக வந்தேன். வரும் வழியில் வயதான பெண் ஒருவர் மருத்துவமனை அருகே சிரமப்படுவது போல் எனக்குத் தெரிந்தது. எனக்குக் கொடுக்கப்பட்ட உணவினை அவர் பசியைப் போக்க உதவுமே என்று எண்ணிக் கொடுத்தேன்.

ஆனால், அவர் உங்கள் உணவு எனக்கு வேண்டாம் என்று மறுத்துவிட்டார். ஏன் மறுக்கிறீர்கள் என்று அவரிடம் காரணம் கேட்டபோது, நீங்கள் மருத்துவமனையில் வேலை செய்வதால் கொரோனா குறித்த அச்சம் இருக்கிறது என்றார். ஆனால், அந்த நேரம் எனக்கு மிகவும் மனதிற்கு வேதனையாக இருந்தது. கொரோனா நோயாளிகள் போன்று, கொரோனா பரவல் தடுப்பு பணி செய்யும் எங்களையும் சிலர் நோயாளிகளாகவே பார்க்கின்றனர்," எனத் தெரிவித்தார்.

"கொரோனா பணி முடிந்து வீட்டில் தனிமைப்பட்டிருந்த போது, கடந்த மாதம் எனது சகோதரியின் மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நிகழ்வு அவர்களது வீட்டிலே ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் எனது சூழ்நிலை கருதி நான் செல்லவில்லை.அதன் காரணமாகச் சிறிய வயதிலிருந்து தாய் போல அனைத்தையும் அருகிலிருந்து கவனித்த எனது சகோதரி மகளின் சுப நிகழ்வில் பங்கேற்க முடியாமல் போனது என்னை அதிகமாகப் பாதித்தது," என்றார் சித்ரா.

மேலும், "கொரோனா பணியின்போது சுய பாதுகாப்பு கவசம் (Personal Protective Equipment ) அணிந்து தான் எங்கள் பணிகள் அனைத்தையும் செய்து வருகிறோம். நான் இந்த பாதுகாப்பு கவசத்தை 6 மணியிலிருந்து 8 மணி நேரம் வரை அணிந்திருப்பேன். ஆனால், இந்த பாதுகாப்பு கவசம் அணிந்து பணி செய்வதென்பதை விடக் கடினமான ஒரு விஷயம் இந்த உலகில் ஏதுமிருக்காது. உடல் ரீதியாக பல பிரச்சனைகள் இருந்த போதிலும், இந்த உடை அணிந்திருக்கும் போது அனைத்தையும் கட்டுப்படுத்திப் பணி செய்து வருகிறேன்.

பொதுவாகவே எனக்குச் சிறுநீர் அடிக்கடி வரும். ஆனால், இது போன்ற நேரத்தில் நான் பாதுகாப்பு கவசத்தை அணிந்திருப்பதால் பணி நேரம் முடியும் வரை அனைத்தையும் கட்டுப்படுத்திக்கொள்வேன். காரணம், போதுமான அளவில் பாதுகாப்பு கவசம் இல்லாத சூழலில், நாங்கள் பயன்படுத்தும் கவசமானது ஒரு சமயம் அணிந்தால், அதைக் கழட்டும் வரை, அனைத்தையும் சூழ்நிலை கருதிப் பொறுத்துக்கொள்கிறோம்.

பொதுவாகவே இந்த கவசம் அணிந்து தொடர்ந்து 6 மணி நேரங்களுக்கு மேல் உடையைக் கழற்றாமல் வேலை செய்வதினால், இடைப்பட்ட நேரத்தில் உடலிற்குத் தேவையான தண்ணீர் குடிக்க முடியாமல் ரத்தச் சர்க்கரைக் குறைவு(hypoglycemia) ஏற்படுகிறது. மேலும், தலை முதல் கால் வரை முழுவதும் வேர்க்கிறது, இதனால் உடலில் நீராதாரம் குறைந்து உடல் சுற்றோட்ட நீர்மக்குறை (hypovolemia) ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த காரணத்தினால் மயக்க நிலை சிலருக்கு ஏற்படுகிறது. இது இந்த சுய பாதுகாப்பு கவசம் அணியும் அனைவருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்னை. மேலும், மாதவிடாய் காலங்களில் இந்த உடை அணிந்திருப்பதனால், நாப்கின்கள் முறையாக மாற்ற முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகிறேன்," என்கிறார்.

"இருந்தபோதிலும், நாங்கள் செய்யும் பணி எங்களுக்கு எப்போதுமே கஷ்டமாகத் தோன்றுவதில்லை. தனிப்பட்ட குடும்ப வாழ்வில் எங்களால் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளமுடியாமல் இருப்பது தான் மனதிற்கு வேதனையாக இருக்கிறது. இதன் காரணமாகக் கொஞ்சம் கொஞ்சமாக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது," எனத் தெரிவித்தார் செவிலியர் சித்ரா.

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்த்த செவிலியர் செல்வி கூறும்போது, "நான் இந்த கொரோனா நோய்த் தொற்று வந்த நேரத்திலிருந்து இதில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பணி செய்து வருகிறேன். பணிக்காலம் முடிந்து வீட்டிற்குச் செல்லும் நாட்களில், வீட்டிற்கு வெளியே எனக்காகத் தனியாக ஏற்பாடு செய்யப்பட்ட அறையில் தான் இருப்பேன்.

எனக்கு 5 வயதில் குழந்தை இருக்கிறாள். நான் வீட்டில் இருக்கும் நாட்களில் அவளுடன் என் நேரத்தைப் பயன்படுத்த முடியாமல் இருப்பது தான் கடினமான ஒன்று. எனது குழந்தையுடன் நேரம் செலவிட முடியாமல், அவளுக்குத் தேவையானதை செய்து கொடுக்க முடியாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ளக் கடினமாக இருந்தாலும், வேறுவழியில்லை. அவள் வெளியே இருந்து ஒவ்வொரு முறை என்னை அம்மா என்று அழைக்கும் போதும், அவளை உரிமையுடன் அரவணைக்க முடியவில்லை என்ற வேதனையால் அழுது விடுவேன்," என்றார்.

"ஆனால், என் கஷ்டங்களை குடும்பத்தினரிடம் காட்டிக்கொள்ள மாட்டேன். என் வேதனைகள் அவர்களைப் பாதிக்குமேயானால் அதை அவர்களும் தாங்கிக்கொள்ள மாட்டார்கள். இன்று வரை அனைத்து சூழல்களிலும், குறிப்பாக இந்த கொரோனா நோய்த் தொற்று காலத்தில் எனது குடும்பத்தினரின் ஆதரவு தான் எனக்கும், என்னைப் போன்றவர்களுக்கு அனைத்திலும் ஆறுதலாக இருக்கும் ஒரே விஷயம்," என கூறுகிறார் செவிலியர் செல்வி.