வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: சனி, 23 பிப்ரவரி 2019 (07:57 IST)

'நாய்' என நினைத்து ஓநாயை காப்பாற்றிய தொழிலாளர்கள்

இரக்க குணமுள்ள எஸ்தோனிய தொழிலாளர்கள் ஆற்றில் பனிக்கட்டியில் சிக்கி இருந்த 'நாய்' ஒன்றை விரைந்து சென்று காப்பாற்றினர்.
 
ஆனால், தங்களின் காரில் ஓநாய் ஒன்றை கொண்டு சென்று காப்பாற்ற இருப்பது அப்போது அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.
 
வடக்கு ஐரோப்பாவில் உள்ள எஸ்தோனியா என்னும் நாட்டில், பார்னு ஆற்றிலுள்ள சிந்தி அணையில் வேலை செய்து கொண்டிருந்த இந்த தொழிலாளர்கள் உறை நிலையில் தண்ணீரில் சிக்கியிருந்த இந்த விலங்கை கண்டனர்.

பனி உறைந்து கிடந்த பாதையை விலக்கி சென்ற அவர்கள், பனிக்கட்டிகள் ஒட்டிய நிலையில் கிடந்த நாய் போன்றதொரு விலங்கை காப்பாற்றி, அதற்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க கால்நடை சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றனர்.
 
அப்போதுதான் அவர்கள் ஓர் ஓநாயை தங்களின் காரில் போட்டு கொண்டு வந்திருந்ததாக அவர்களுக்கு சொல்லப்பட்டது.
 
 
 
கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது, இந்த ஓநாய்க்கு குறைவான ரத்த அழுத்தம் இருந்ததாகவும், தாக்காமல் அமைதியாக இருந்துள்ளதற்கு இதுவே காரணமாக இருந்திருக்கலாம் என்றும் எஸ்தோனிய விலங்குகள் பாதுகாப்பு ஒன்றியம் தெரிவித்துள்ளது.
 
சரிவான பாதையில் அதனை கொண்டு வர வேண்டியிருந்தது. இது சற்று அதிக எடையுடன் இருந்தது. ஆனால், அமைதியாக எனது கால்மேல் தலை வைத்து படுத்திருந்தது. நான் கால் நீட்டி உட்கார விரும்பியபோது, இந்த விலங்கு சற்று தலையை உயர்த்தி அனுமதித்தது" என்று இந்த விலங்கை காப்பாற்றியவரில் ஒருவரான காட்ஸ்சிப், 'போஸ்டைம்ஸ்' என்ற எஸ்தோனிய செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளார்,
 
இந்த பெரியதொரு நாயின் உண்மையான இயல்பு பற்றி கால்நடை மருத்துவர்கள் சந்தேகம் அடைந்தனர். இதனால், அந்த பகுதியிலுள்ள ஓநாய்கள் பற்றி அதிகமாக தெரிந்து வைத்திருக்கும் உள்ளூர் வேட்டைகாரர் ஒருவர், இது சுமார் ஓராண்டு வயதான ஓநாய் என்பதை உறுதிசெய்துள்ளார்.