ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (13:34 IST)

இரவில் வீடு புகுந்து குழந்தைகளை இரையாக்கும் ஓநாய்கள் - அஞ்சி நடுங்கும் 30 கிராமங்கள்!

Indian Wolves

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் மக்கள் ஓநாய்கள் குறித்த பீதியில் உள்ளனர்.

 

 

இந்தியா-நேபாள எல்லையை ஒட்டியுள்ள டெராய் பகுதியில் ஓநாய்கள் தொல்லை அதிகமாகியுள்ளது. அங்குள்ள ஓநாய்கள் கூட்டம் குறிப்பாக குழந்தைகளை குறிவைக்கிறது.

 

பெரியவர்களால் கூட ஓநாய் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடிவதில்லை. அப்பகுதியில், கடந்த ஜூலை மாதம் முதல் ஓநாய்கள் தாக்குதலால் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர், 26 பேர் காயமடைந்துள்ளனர்.

 

ஓநாய் கூட்டத்தைப் பிடிக்க வனத்துறையினர் இரவு பகலாக உழைத்து வரும் நிலையில், இதுவரை மூன்று ஓநாய்கள் மட்டுமே பிடிபட்டுள்ளன.

 

வனத்துறையின் ஒன்பது குழுக்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. ஓநாய்கள் இருக்கும் பகுதிகளில் நான்கு கூண்டுகள் மற்றும் ஆறு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

 

மேலும் ஓநாய்களை தேடும் பணியில் வனத்துறையினர் தெர்மல் ட்ரோன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

 

மேலும், ஓநாய்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

பஹ்ரைச் கோட்ட வன அதிகாரி அஜித் பிரதாப் சிங் கூறுகையில், "கிராம மக்களிடம் தங்கள் குழந்தைகளை வெளியில் படுக்க வைக்க வேண்டாம் என்று கூறுகிறோம். இந்த பகுதியில் பெரும்பாலான வீடுகளுக்கு கதவுகள் இல்லாததால் ஓநாய்கள் வீட்டிற்குள் நுழைகின்றன." என்றார்.

 

"ஓநாய்களைப் பொறுத்தவரையில் அவை மனிதர்களைத் தாக்குவதில்லை. ஆனால், சில சூழ்நிலைகளில் தவறான புரிதலால் மனிதர்களை ஓநாய்கள் தாக்குகின்றன, பின்னர் அவை அதற்கு பழக்கமாகிவிட்டதாக தெரிகிறது" என்றார் அஜித் பிரதாப் சிங்.

 

இதுதொடர்பாக உத்தரப் பிரதேச வனத்துறை அமைச்சர் அருண்குமார் சக்சேனாவிடம் பிபிசி பேசியது.

 

“வனவிலங்குகளோ, மனித உயிர்களோ அழிவதை நாங்கள் விரும்பவில்லை. இதுவரை மூன்று ஓநாய்களை பிடித்துள்ளோம்” என்றார்.

 

இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் பிடிபட்ட வனவிலங்குகள் குறித்து அமைச்சர் கூறுகையில், “ஜனவரி 2024 முதல் ஆகஸ்ட் 23, 2024 வரை 27 சிறுத்தைகள் மற்றும் 3 புலிகளும் பிடிக்கப்பட்டுள்ளன” என்றார்.

 

30 கிராமங்கள் பாதிப்பு, உள்ளூர் மக்கள் கோபம்

பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள மஹ்சி எனும் பகுதியில், சுமார் 100 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ள 25 முதல் 30 கிராமங்கள் ஓநாய்கள் குறித்த அச்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதி இந்தியா-நேபாள எல்லையை ஒட்டியுள்ளது.

 

அஜித் பிரதாப் சிங் பிபிசியிடம் கூறுகையில், "ஓநாய்கள் தவறுதலாக குழந்தைகளை குறிவைப்பது இதுவே முதல் முறை" என்று கூறினார்.

 

“வானிலை காரணமாக ஓநாய்களின் குகைகள் தண்ணீரில் நிரம்பும்போது, அவை மக்களின் வாழ்விடங்களை நோக்கி நகர்ந்து, தவறுதலாக மனிதர்களைக் குறிவைக்கின்றன. பின்னர், அவை அவற்றுக்கு பழகிவிடுகின்றன” என கூறினார்.

 

முன்பு இப்பகுதியில் சிறுத்தை குறித்த பயம் இருந்தது. அவை, சில சமயங்களில் மனிதர்களை தாக்கின.

 

பிபிசி குழு பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள மைகுபூர்வா பகுதி உட்பட பல கிராமங்களுக்குச் சென்றது.

 

இங்குள்ள ஒரு கிராமத்தில், இரவு தூங்கிக் கொண்டிருந்த எட்டு வயது உத்கர்ஷ், ஓநாயின் பிடியில் சிக்கிக்கொண்டார். இருப்பினும், சரியான நேரத்தில் எழுந்த அவரது தாய் ஓநாய் பிடியில் சிக்கிய உத்கர்ஷை மீட்டார்.

 

அதற்குள் சத்தம் கேட்டு திரண்டு வந்த கிராம மக்கள் உத்கர்ஷின் உயிரை காப்பாற்றினர்.

 

மைகுபூர்வாவின் கிராம தலைவரான அனூப் சிங் பிபிசியிடம், "ஏப்ரல் 17 ஆம் தேதி முதன்முறையாக இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது. அதற்கு முன்பு மார்ச் மாதத்திலும் ஓநாய் தாக்குதல்கள் நடைபெற்றன. அதன் பிறகு கிராமத்தில் தொடர்ந்து ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.

 

மேலும் அவர் கூறுகையில், "வனக்குழுவினர் அப்பகுதியில் இரவு நேரங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். நாங்கள் இரவில் விழித்திருந்து மக்களை பாதுகாக்கிறோம். ஆனால், வேறு கிராமங்களில் ஓநாய் தாக்குதல் சம்பவம் நடந்ததாக நாங்கள் கேள்விப்படுகிறோம்" என்றார்.

 

இருப்பினும், காக்ரா நதியின் காரணமாக இந்த பகுதி ஒவ்வொரு ஆண்டும் வெள்ளத்தை எதிர்கொள்கிறது. இதன்காரணமாக, ஓநாய்களின் குகைகளில் தண்ணீர் நிரம்பிவிடுகிறது. நீண்ட காலத்திற்கு பிறகு ஓநாய்கள் மனிதர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளன.

 

சில வருடங்களுக்கு முன்பு கூட ஓநாய்கள் மனிதர்களை கொன்றுள்ளன.

 

பஹ்ரைச் கோட்ட வன அதிகாரி அஜித் பிரதாப் சிங் கூறுகையில், "சுமார் 20 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதிகளில் ஓநாய்கள் மனிதர்களை தாக்கின. கோண்டா, பஹ்ரைச் மற்றும் பல்ராம்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில், ஓநாய் தாக்குதலால், சுமார் 32 குழந்தைகள் அப்போது உயிரிழந்தனர். அதன்பின், இதுபோன்ற ஓநாய் தாக்குதல்கள் நடைபெறவில்லை” என தெரிவித்தார்.

 

“மஹ்சியில் ஐந்தாறு ஓநாய்கள் அடங்கிய கூட்டம் மனிதர்களைத் தாக்குகிறது” என்றார் அவர்.

 

கடந்த முறை போலவே ஓநாய் தாக்குதல்கள் இருப்பதால், அப்பகுதி மக்களிடையே கோபம் அதிகரித்து வருகிறது.

 

இதுகுறித்து அஜித் பிரதாப் சிங் கூறும்போது, ​​“இத்தகைய சூழலில் ஓநாய்கள் பிடிக்கப்படும் போது, வனத்துறையிடமிருந்து உள்ளூர் மக்கள் அவற்றை கைப்பற்றி கொல்ல முயற்சிப்பது அடிக்கடி நடக்கிறது” என தெரிவித்தார்.

 

இதுபோன்ற நபர்கள் மீது வனவிலங்கு சட்டத்தின் கீழ் காவல்துறையிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பஹ்ரைச்சில் வனக்குழுவினரை தாக்கியதாக 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மின்சாரம் இல்லாமல் சிரமத்தில் மக்கள்

ஓநாய் தாக்குதலை தவிர்க்க கிராம மக்கள் கண்காணிப்புடன் உள்ளனர். ஆனாலும் அது எளிதானதாக இல்லை. மின்சாரம் இல்லாததாலும், இரவு நேரத்திலும் மிகுந்த சவாலாக உள்ளது.

 

மைகுபூர்வா கிராமத்தைச் சேர்ந்த ராம்லால் கூறுகையில், ''மின்சார பிரச்னையால், இருண்ட சூழலை ஓநாய்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. இதுகுறித்து, மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம். ஆனால், இரவில் மின்சாரம் இல்லை. இரவில் மின்சாரம் இருந்தால் எளிதாக இருக்கும்" என்றார்.

 

முந்தைய ஓநாய் தாக்குதல் சம்பவத்தைக் குறிப்பிட்டு, "இந்த கிராமத்திற்கு இரவு நேரங்களிலும் விலங்குகள் வந்துள்ளன. ஆனால், தொடர்ந்து கண்காணித்து வந்ததால் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. ஆனால், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்துபூர்வா கிராமத்தில் ஆகஸ்ட் 17 அன்று இரவுவேளையில் நான்கு வயது சிறுமி சந்தியாவை ஓநாய் கவ்விச் சென்றது” என்கிறார் அவர்.

 

சம்பவம் குறித்து சந்தியாவின் தாய் சுனிதா கூறும்போது, ​​“விளக்குகளை அணைத்த இரண்டு நிமிடங்களில் ஓநாய் என் மகளை தாக்கியது. எங்களுக்கு அது புரிவதற்கு முன்பே, என் மகளை கவ்விக்கொண்டு ஓநாய் ஓடிவிட்டது” என்றார்.

 

மைகுபூர்வா கிராமத்தைப் போலவே அருகிலுள்ள கிராமங்களிலும் ஓநாய்கள் குழந்தைகளை தாக்கிய சம்பவங்கள் நடந்துள்ளன. ஆகஸ்ட் 21 ஆம் தேதி, பாடோலி கிராமத்திற்கு அருகே ஓநாய் ஒரு சிறுமியை தாக்கியது.

 

இந்துபூர்வா கிராமத்திற்கு அருகிலுள்ள நசீர்பூர் கிராமத்தில் நான்கு வயது சபா என்ற குழந்தையையும் ஓநாய் தாக்கியது. ஆனால், அவரது தந்தை காப்பாற்றியதால் அச்சிறுமி உயிர்பிழைத்தார். ஆனாலும் அச்சிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

 

ஓநாய் தாக்குதல் குறித்து சபாவின் தந்தை ஷகீல் கூறும்போது, ​​"நான் அந்த ஓநாயின் பின்னாலேயே ஓடினேன். எனினும், ஓநாயின் பின்புறத்தை மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. ஓநாய் கவ்வியதால். என் மகளின் தலையில் காயம் ஏற்பட்டு, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது" என கூறினார்.

 

கிராம மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மக்கள் விழிப்புடன் இருக்கும் வகையில் அதற்கான பொது அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

 

மேலும், கிராம மக்கள் ஓநாய்களை கண்டால் அவற்றை விரட்ட பட்டாசுகளும் வழங்கப்பட்டுள்ளன. பட்டாசு சத்தத்தால் ஓநாய்கள் ஓடிவிடுகின்றன.

 

இரவு நேரங்களில் விலங்குகளால் ஏற்படும் ஆபத்து குறித்து வனத்துறை அதிகாரி அஜித் பிரதாப் சிங் கூறும்போது, ​​"இப்பகுதியில் வறுமை அதிகம். மக்களுக்கு நிரந்தர வீடுகள் இல்லை, எனவே வெளியில் உறங்குகிறார்கள். அதனால்தான் இத்தகைய ஆபத்துகள் ஏற்படுகின்றன" என்கிறார்.

 

ஓநாய்களை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை மூன்று ஓநாய்கள் பிடிபட்டுள்ளன.

 

வனத்துறை கூறுவது என்ன?

அஜித் பிரதாப் சிங் கூறுகையில், "மீதமுள்ள ஓநாய்களையும் விரைவில் பிடிப்போம். பிடிபட்ட மூன்று விலங்குகளில் ஒன்று மாரடைப்பால் இறந்துவிட்டது. மீதமுள்ள இரண்டு ஓநாய்கள் லக்னோ உயிரியல் பூங்காவிற்கு அனுப்பப்பட்டுள்ளன. அதில் ஒன்று ஆண் ஓநாய், மற்றொன்று பெண் ஓநாய்" என கூறினார்.

 

"இந்த ஓநாய்கள் கூட்டத்தில் வயது முதிர்ந்த, கால்கள் முடங்கிப்போன ஓநாய் ஒன்றும் உள்ளது. அது மூர்க்கமாக இருக்க வாய்ப்புள்ளது. அதனால்தான் அந்த ஓநாயை பிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன" என்று அவர் கூறினார்.

 

அப்போது, "நாங்கள் மூன்று ஓநாய்களை பார்த்தோம். அதில், ஒரு ஓநாய்க்கு கால்கள் நல்ல நிலையில் இல்லை. இரண்டு ஓநாய் குட்டிகள் இருந்தன” என்றார்.

 

இப்பகுதியை பராமரிக்க வனத்துறைக்கு அரசு ரூ.20 லட்சம் வழங்கியுள்ளது.

 

ஓநாய் தாக்குதலால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்து வருவதாகவும், அதில் ரூ.4 லட்சம் நிர்வாகம் மூலமாகவும், ரூ.1 லட்சம் வனத்துறை மூலமாகவும் வழங்கப்படுவதாக வனத்துறை அதிகாரி அஜித் பிரதாப் சிங் கூறினார்.

 

ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு

அஜித் பிரதாப் சிங் மேற்பார்வையின் கீழ், பஹ்ரைச் மண்டல அதிகாரி மற்றும் அவரது குழுவினர் காலை முதல் இரவு வரை ட்ரோன்கள் மூலம் அப்பகுதியின் சதுப்பு நிலங்கள் மற்றும் கரும்பு வயல்களில் ஓநாய்களைக் கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர். மேலும் இதற்காக கிராமங்களுக்குச் சென்று விவசாயிகள் மற்றும் புல் வெட்டுபவர்களிடமும் விசாரித்து வருகின்றனர்.

 

அவர்கள் ஏதேனும் ஓநாய்களை பார்த்தனரா என்பது குறித்து வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

 

விவசாயிகளிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஓநாய்கள் நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் பகுதிகளில் சுற்றிவளைத்து அவற்றைப் பிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

பஹ்ரைச்சின் வனத்துறை அதிகாரி முகமது சாஹிப் பிபிசியிடம் கூறுகையில், "அப்பகுதி தண்ணீரால் நிரம்பியுள்ளது. கரும்பு பயிரும் அதிகரித்துள்ளது, இதன் காரணமாக ஓநாய்களை கண்டறிவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன” என்றார்.

 

"இதுதவிர, ட்ரோன் அதிக வெப்பமடைந்தால் அதன் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுகிறது. பின்னர் நாங்கள் உள்ளூர் மக்களிடம் உதவி பெற்று ஓநாய்களைச் சுற்றி வளைக்கிறோம். அதன்பின், நாங்கள் பொறிகளை அமைத்து, ஓநாய்கள் சிக்குமாறு கூண்டுகளை தயார் நிலையில் வைக்கிறோம். மற்ற கால்நடைகள் காயமடையாமல் இருக்கும் வகையிலும் நாங்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கிறோம்" என்றார்.

 

உத்தரப் பிரதேச வனத்துறை அமைச்சர் அருண் குமார் சக்சேனா பிபிசியிடம் மனித-வனவிலங்கு ஏதிர்கொள்ளல்களை தடுப்பதற்கான திட்டங்கள் குறித்து பேசினார்.

 

அவர் கூறுகையில், "உயர்நிலையில் மனித - வனவிலங்கு மோதலை தடுக்க, வனத்துறையினரும் வேலி அமைக்கும் பணியை தொடங்க உள்ளனர். மனித உயிரிழப்பை தடுக்க, பதற்றம் நிறைந்த கிராமங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, பாதுகாப்பற்ற பகுதிகள் குறித்து கூகுள் மூலம் வரைபடம் தயாரிக்கப்பட்டு, திட்டமிட்ட முறையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்றார்.

 

மேலும் அவர் கூறுகையில், ''அவ்வப்போது, ​​உரிய மட்டத்தில் அனுமதி பெற்று, கூண்டுகள் பொருத்தி, பொறி அமைத்து வனவிலங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

 

மனிதர்களை தாக்குவதற்கு காரணம் என்ன?

மனிதர்களுக்கும் ஓநாய்களுக்கும் இடையிலான மோதல்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன. இதுகுறித்து நிபுணர்கள் பல்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.

 

மனிதர்களுக்கும் ஓநாய்களுக்கும் இடையிலான மோதல் அமெரிக்காவின் மேல் தீபகற்பத்திலும் காணப்படுகிறது.

 

மிச்சிகனை தளமாகக் கொண்ட இயற்கை வளங்கள் துறையின் வனவிலங்கு உயிரியலாளர் பிரையன் ரோல், இதுபோன்ற மோதல்கள் அரிதானவை என்று நம்புகிறார்.

 

‘நார்தர்ன் எக்ஸ்பிரஸ்’ வார இதழில் ஒரு அறிக்கையில், பிரையன் ரோல், "ஓநாய்களுக்கும் தெருநாய்களுக்கும் இடையில் மோதல்கள் காணப்படுகின்றன. ஆனால், மனிதர்கள் மீதான தாக்குதல்கள் மிகவும் அரிதானவை." என தெரிவித்துள்ளார்.

 

ஓநாய்கள் நிபுணராக பிரையன் ரோல் அறியப்படுகிறார்.

 

ஓநாய்களுக்கும் வீட்டு விலங்குகளுக்கும் இடையிலான மோதல்கள் குறித்து அவர் கூறுகையில், "இதுபோன்ற தாக்குதல்கள் மிகவும் அரிதானவை, குறிப்பாக மேல் தீபகற்பத்தின் நிலப்பரப்பு மிகப் பெரியது மற்றும் இங்கு ஏராளமான வளர்ப்பு விலங்குகள் உள்ளன. ஓநாய்களின் பிராந்திய ஆதிக்கத்தால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன." என தெரிவித்துள்ளார்.

 

வைல்ட்லைஃப் எஸ்ஓஎஸ் (Wildlife SOS) அளித்துள்ள தகவலின்படி, இயற்கை மாற்றங்கள் காரணமாக, வானிலை மற்றும் பருவங்கள் பாதிக்கப்படுகின்றன, இதன் காரணமாக வனவிலங்குகளின் இனப்பெருக்க காலம் மற்றும் இடம்பெயர்வு ஆகியவற்றில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால், வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.