1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 18 ஜூன் 2024 (15:39 IST)

விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு எதிராக பாமக வெற்றிபெற அதிமுகவின் 65,000 வாக்குகள் உதவுமா?

EPS anbumani
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விக்ரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் தி.மு.க. கூட்டணிக்கு அடுத்து நெருக்கமான இடத்தைப் பிடித்தது அ.தி.மு.க. அக்கட்சி தேர்தலைப் புறக்கணித்திருக்கும் நிலையில் அந்த வாக்குகள் என்ன ஆகும்?



விக்ரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஜூலை மாதம் 10ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லையென தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. அறிவித்துள்ளது.
விக்ரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தி.மு.கவைச் சேர்ந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இந்தத் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10ஆம் தேதி நடக்குமென அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 14ஆம் தேதி துவங்கியது. 21ஆம் தேதி வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இறுதி நாள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. சி. அன்புமணியை அறிவித்துள்ளது. நாம் தமிழர் கட்சியின் சார்பில் டாக்டர் அபிநயா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

65 ஆயிரம் வாக்குகள் யாருக்கு?

விக்ரவாண்டி தொகுதி 2007ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பின்போது உருவாக்கப்பட்ட தொகுதி. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர். ராமமூர்த்தியும் 2016ல் தி.மு.கவின் கே. ராதாமணியும் 2019 இடைத் தேர்தலில் அ.தி.மு.கவின் ஆர். முத்தமிழ் செல்வனும் 2021ஆம் சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் என். புகழேந்தியும் வெற்றிபெற்றனர்.

இந்த முறை பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளது. அந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.கவும் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளது. ஆகவே அ.தி.மு.கவின் வாக்குகளை யார் பெறக்கூடும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

விக்ரவாண்டி சட்டமன்றத் தொகுதி விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்த சட்டமன்றத் தொகுதிக்குள் தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்த வி.சி.கவின் வேட்பாளர் து. ரவிக்குமார் அதிகபட்சமாக 72,188 வாக்குகளைப் பெற்றார். இதற்கு அடுத்தபடியாக, அ.தி.மு.க. வேட்பாளர் பாக்கியராஜ் 65,365 வாக்குகளைப் பெற்றார். நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான 8,352 வாக்குகளைப் பெற்றார். பா.ஜ.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த பா.ம.க. 32,198 வாக்குகளைப் பெற்றது.
இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக அறிவித்திருப்பதால் அ.தி.மு.க. பெற்ற சுமார் 65 ஆயிரம் வாக்குகள் யாருக்குக் கிடைக்கக்கூடும்?

"தங்களுக்கே சாதகம்" - பாமக

இந்தத் தேர்தலை தங்களுடைய கட்சி புறக்கணித்திருப்பதால், தங்களுடைய தொண்டர்களும் புறக்கணிப்பார்கள் என்கிறார் அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சரான டி. ஜெயக்குமார். ஆனால், ஒரு கட்சி தேர்தலைப் புறக்கணிப்பதால், அக்கட்சிக்கு வாக்களிக்கக்கூடிய வாக்காளர்களும் தேர்தலை முழுமையாகப் புறக்கணிப்பார்களா என்பது சந்தேகம்தான்.

ஆகவே, இந்தச் சூழல் தங்களுக்குச் சாதகமானது என பா.ம.க. கருதுகிறது. இந்த முறை தி.மு.கவுக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும்தான் நேரடிப் போட்டியென்பதால், தி.மு.க. எதிர்ப்பு வாக்குகளான அ.தி.மு.கவின் வாக்குகள் தங்களுக்கே திரும்பும் என எதிர்பார்க்கிறது அக்கட்சி. ஆகவே சுமார் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கலாம் என கருதுகிறது.

அ.தி.மு.கவின் வாக்குகள் தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள் என்பதால் அவற்றின் பெரும்பகுதி பா.ம.கவுக்கே வந்து சேரும் என்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தித் தொடர்பாளரான வழக்கறிஞர் பாலு.

"அ.தி.மு.க. ஒரு பலமான கட்சி. அக்கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற சுமார் 65 ஆயிரம் வாக்குகளில் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் அ.தி.மு.க. தொண்டர்களின் வாக்குகள். அவர்கள் ஒருபோதும் உதயசூரியனுக்கு வாக்களிக்க மாட்டார்கள். அ.தி.மு.கவின் அடிப்படையான கொள்கையே தி.மு.க. தோற்கடிக்கப்படவேண்டும் என்பதுதான். எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகத்தான் அ.தி.மு.கவும் போட்டியைத் தவிர்த்துள்ளது. அடுத்ததாக அங்கு வசிப்பவர்களில் நாற்பது சதவீதம் பேர் வன்னியர்கள். ஆகவே எல்லா வகையிலும் பெரும்பான்மை வாக்குகள் பா.ம.கவுக்குத்தான் வந்து சேரும். இந்த முறை பெற்ற வாக்குகளைவிட இரு மடங்கு வாக்குகளை பா.ம.க. பெறும்" என்கிறார் பாலு.

விசிக சொல்வது என்ன?

ஆனால், அ.தி.மு.கவின் ஓட்டுகளை தி.மு.க. எதிர்ப்பு ஓட்டுகள் என்பதைவிட, அ.தி.மு.க. ஆதரவு வாக்குகள் எனப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் இருந்து வெற்றிபெற்ற வி.சி.கவின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமார்.

"விக்ரவாண்டி தொகுதியில் 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டு சுமார் 41 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. அதனையே அக்கட்சியின் வாக்குகளாகக் கொள்ள வேண்டும். 2021ஆம் ஆண்டு தேர்தலில் பா.ம.க., அ.தி.மு.க., பா.ஜ.க. இணைந்து போட்டியிட்டன. அப்போது அந்தக் கூட்டணியில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 84 ஆயிரம் வாக்குகளையே பெற்றார் என்பதையும் கவனிக்க வேண்டும்" என்கிறார் து. ரவிக்குமார்.

அவரைப் பொறுத்தவரை இந்த நாடாளுமன்றத் தொகுதியில் இந்த முறை தி.மு.க. கூட்டணி பெற்ற 72 ஆயிரம் வாக்குகளைவிட அதிகம் பெற்றால், அவற்றை அ.தி.மு.கவின் வாக்குகளாகக் கொள்ளலாம் என்கிறார். அதேபோல, 2016ல் பா.ம.க. பெற்ற 41 ஆயிரம் வாக்குகளைவிட அதிகம் பெற்றால் அது அ.தி.மு.கவின் வாக்குகள் என்றும் நாம் தமிழர் கட்சி இந்த முறை பெற்ற 8,350 வாக்குகளுக்கு அதிகமாகப் பெற்றால் அதுவும் அ.தி.மு.கவின் வாக்குகள் என்றும் புரிந்துகொள்ளலாம் என்கிறார் து. ரவிக்குமார்.

ஆனால், பாலுவைப் பொறுத்தவரை அ.தி.மு.க. போட்டியிலிருந்து விலகியிருப்பது வேறொரு வகையிலும் பா.ம.கவுக்கு சாதகம் என்கிறார். "அ.தி.மு.க. போட்டியிட்டால், தி.மு.க. - அ.தி.மு.க. ஆகிய இருவரையும் பா.ம.க. எதிர்க்க வேண்டியிருக்கும். ஆனால், இப்போது தி.மு.கவை மட்டும் குறிவைத்து தாக்க முடியும். அது எங்களுக்கு சாதகம்" என்கிறார் அவர்.

"பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்"

ஆனால், அ.தி.மு.க. வாக்குகள் முழுமையாக பா.ம.கவுக்குச் செல்லுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான கார்த்திகேயன்.

"பா.ஜ.கவைப் பொறுத்தவரை இப்போது தாங்கள்தான் இரண்டாவது பெரிய கட்சி என்று சொல்லிவருகிறது. இந்த நிலையில், அ.தி.மு.கவினர் தங்கள் வாக்குகளை அளித்தால், அந்த வாக்குகள் அ.தி.மு.கவின் வாக்குகள் என தே.ஜ.கூவினர் சொல்வார்களா அல்லது தங்களுக்குக் கிடைத்த வாக்குகள் என்று சொல்வார்களா என்பதை அ.தி.மு.கவினர் யோசிப்பார்கள். ஆகவே, பல அ.தி.மு.கவினர் வாக்களிக்காமல் இருக்கலாம். மற்றவர்கள் வேறு பல காரணிகளை வைத்து முடிவெடுக்கலாம்" என்கிறார் கார்த்திகேயன்.

ஆனால், து. ரவிக்குமார், கார்த்திகேயன் ஆகிய இருவரும் இன்னொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டுகிறார்கள். அதாவது, 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.கவைப் பொறுத்தவரை பா.ம.கவுடன் கூட்டணி அமைக்கவே விரும்பும். அதனை மனதில் வைத்தே இரு கட்சிகளும் இந்தத் தேர்தலை அணுகும் என்கிறார்கள் இவர்கள்.

2007ஆம் ஆண்டுதான் உருவான விக்ரவாண்டி தொகுதி இடைத் தேர்தலைச் சந்திப்பது இது இரண்டாவது தடவை. 2016ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க. வேட்பாளர் ராதாமணி, 2019ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதற்கு நடந்த இடைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்றது.