புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (15:37 IST)

மனிதர்களால் பேரழிவை எதிர்கொள்ளும் வன உயிரினங்கள் – எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

வன உயிர்களின் எண்ணிக்கை 50 வருடங்களுக்கும் குறைவான காலத்தில் மூன்றில் இரண்டு பங்காக குறைந்துள்ளது என உலக வன உயிர் நிதியத்தின் முக்கிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேரழிவு குறைவதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும் இதுவரை பார்த்திராத வகையில், மனிதர்களால் இயற்கை அழிக்கப்படுகிறது என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

“நாம் காடுகளை எரிப்பதாலும், கடலில் அதிகப்படியாக மீன் பிடிப்பதாலும், வனப்பகுதிகளை அழிப்பதாலும் வன உயிர்கள் அழிந்து கொண்டு வருகின்றன,” என உலக வன உயிர் நிதியத்தின் முக்கிய அதிகாரி தான்யா ஸ்டீல் தெரிவிக்கிறார்.

’மனிதகுலம் ஏற்படுத்திய அழிவின் அடையாளம்’

உலகம் முழுவதும் உள்ள வாழ்விடங்களில் பல ஆயிரக்கணக்கான வன உயிர்களை சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்து இந்த அறிக்கையை உருவாக்கியுள்ளனர்.

1970ஆம் ஆண்டிலிருந்து 20,000க்கும் மேலான பாலூட்டிகள், பறவைகள், நீர் நிலம் ஆகிய இரண்டிலும் வாழ்பவை, ஊர்வன மற்றும் மீன்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை 68 சதவீத அளவு குறைந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்தனர்.

வன உயிர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட இந்த சரிவு, இயற்கைக்கு மனித குலத்தால் ஏற்படும் அழிவின் அடையாளம் என லண்டன் விலங்கியல் சங்கத்தின் பாதுகாப்பு இயக்குநர் ஆண்ட்ரூ டெர்ரே தெரிவித்துள்ளார்.

”மனிதர்களின் இந்த நடவடிக்கைகள் மாறவில்லை என்றால், வன உயிர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறையும், வன உயிர்கள் அழிவின் விளிம்பிற்கு செல்லும், மேலும் நாம் சார்ந்திருக்கும் சுற்றுச்சூழல் அமைப்பின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் ஏற்படும்” என ஆண்ட்ரூ டெர்ரே தெரிவிக்கிறார்.

கொரோனா பெருந்தொற்று இயற்கையும், வன உயிரும் எவ்வாறு பிணைந்திருக்கிறது என்பதை நமக்கு காட்டியது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பெருந்தொற்றுக்கு காரணம் என நம்பப்படுகிற வாழ்விடங்கள் அழிப்பு, வன உயிர் வர்த்தகம் ஆகியவற்றாலும் வன உயிர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

நாம் இயற்கையை காப்பதற்கான உடனடி நடவடிக்கை எடுத்து, நாம் உணவை தயாரிக்கும் மற்றும் உட்கொள்ளும் முறையை மாற்றினால் காடுகள் மற்றும் வாழ்விடங்கள் இழப்பை நாம் நிறுத்தலாம் அல்லது மாற்றலாம் என புதிய ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

இயற்கை ஆர்வலர் சர் டேவிட் அட்டப்ரோ, இயற்கை உலகத்தில் ஒரு சமநிலையை கொண்டுவர நாம் உணவை எப்படி தயாரிக்கிறோம், ஆற்றலை எவ்வாறு உருவாக்குகிறோம், பெருங்கடலை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் மாற்றம் வேண்டும் என தெரிவிக்கிறார்.

“ஆனால் இது எல்லாவற்றிக்கும் மேலாக நமது பார்வை மாற வேண்டும். இயற்கையை ஒரு ரசிக்கும் விஷயமாக மட்டுமல்லாமல் உலக சமநிலைக்கு காரணமான ஒரு விஷயம் என்றும் நாம் கருத வேண்டும்,” என்கிறார்.

வன உயிர்களின் இழப்பை எவ்வாறு அளவிட முடியும்?

பலவித நடவடிக்கைகளால் பூமியில் உள்ள பலவித உயிரினங்களின் எண்ணிக்கையை அளவிடுவது கடினமானது.

மனித வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் பல்லுயிர் பெருக்கம் அழிக்கப்பட்டு வருகிறது.

இந்த அறிக்கையில் வன உயிர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்று கூறப்பட்டுள்ளதே தவிர எத்தனை விலங்கினங்கள் அழிந்துள்ளன அல்லது அழிவின் விளிம்பில் உள்ளன என்பதை கூறவில்லை.

வெப்பமண்டல காடுகளில்தான் வன உயிர்கள் அதிகளவில் குறைந்துள்ளன. உலகில் எந்த இடத்திலும் இல்லாத அளவில் லத்தின் அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதியில் 94 சதவீத அளவில் வன உயிர்கள் குறைந்துள்ளது.

இந்த அறிக்கையில் உள்ள தகவல்கள் சர்வதேச அளவில் வன உயிர் குறித்த ஒரு சித்திரத்தை கொடுக்கிறது. இதன்மூலம் நாம் துரிதமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாம் புரிந்து கொள்ளலாம்.

வாழ்விட இழப்பு, விலங்கின வர்த்தகத்தால் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ள கிரே பேரட் பறவையினம்

வன உயிர் அழிவை தடுக்க ”அனைத்து துறைகளிலிலும் நடவடிக்கை எடுப்பது அவசியம், விவசாயத்துறையை பொறுத்தவரை விநியோகம் மற்றும் தேவை இருதரப்பிலும் நடவடிக்கை தேவை,” என்கிறார் லண்டன் யூனிவர்சிட்டி காலேஜின் பேராசிரியர் டேம்.

இயற்கையின் அழிவை சொல்லும் பல்வேறு தரவுகள்

ஒரு லட்சத்துக்கும் அதிகமான தாவரங்கள் மற்றும் விலங்குகளை ஆய்வு செய்த இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் 32,000 உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

2019 சர்வதேச நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் குழு, ஒரு சில ஆண்டுகளில் ஒரு மில்லியன் உயிரினங்கள் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டதாக தெரிவித்தனர்.

அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை, ஐநா உலகளவில் இயற்கை குறித்த தனது சமீபத்திய மதிப்பீட்டை வெளியிடவுள்ளது.