1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 13 ஆகஸ்ட் 2016 (15:33 IST)

110வது விதியின் கீழ் அதிக அறிவிப்புகளை வெளியிடுவது ஏன்? : ஜெயலலிதா விளக்கம்

இருபத்து நான்கு மணி நேரமும் மக்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதால், அறிவிப்புகளை அமைச்சர்கள் வெளியிட்ட பிறகும் புதிய திட்டங்கள் தோன்றுவதால் 110வது விதியின் கீழ் அதிக அறிவிப்புகளை வெளியிடுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
 

 
தமிழக சட்டப்பேரவையில் பேசிய எதிர்க் கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், மானியக் கோரிக்கை விவாதங்களின் போது சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அறிவிப்புகளை வெளியிட்ட பிறகும் முதலமைச்சர் தனியாக 110வது விதியின் கீழ் அதிக அறிவிப்புகளை வெளியிடுவது ஏன் என கேள்வியெழுப்பினார்.
 
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் ஜெயலலிதா, தன்னைப் பொறுத்தவரை, தினம்தோறும் காலை முதல் மாலை வரை இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் மக்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதாகவும் என்ன புதிய திட்டங்களைக் கொண்டுவரலாம் என்று யோசித்துக்கொண்டே இருப்பதாகவும் கூறினார்.
 
அதனால், சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் மானியக் கோரிக்கையை வைத்து புதிய அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு, அந்த துறையைப் பற்றி யோசிக்கும்போது "அடடா, இதை விட்டுவிட்டோமே. இதையும் செய்யலாமே'' என்ற யோசனை வந்தால் அப்படிப்பட்ட புதிய அறிவிப்புகளையே தான் வெளியிடுவதாகவும் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார்.
 
சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள காமராஜர் சாலையில் உள்ள சிவாஜி கணேசன் சிலையை அகற்றும் நோக்கம் தமிழக அரசுக்கு இல்லையென்றும் உயர்நீதிமன்றத்தின் உத்தரவினால்தான் அதனை அகற்ற வேண்டியிருக்கிறது என்றும் ஜெயலலிதா தெரிவித்தார்.
 
அதேபோல, பல ஆண்டுகளாக திரைப்படக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நடத்தப்படாமல் இருப்பதாகவும் விரைவிலேயே மிகப் பெரிய விழா ஒன்று நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்படும் என்றும் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.