திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (14:50 IST)

காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் தலைவராக ராகுல் காந்தி ஏன் விரும்பவில்லை?

Rahul Gandhi
கடந்த 2019 முதல் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேடும் பணி நடந்து வருகிறது.

ஆனால், இந்த ஆண்டு உதய்பூரில் நடந்த 'சிந்தனை கூட்டத்தில்' கட்சியின் புதிய தலைவரை தேர்ந்து எடுக்கும் பணியை செப்டம்பர் மாதம் முடிக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான நேரம் நெருங்கிவிட்டாலும், காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேடும் பணி முடிந்ததாக தெரியவில்லை.

ராஜஸ்தான் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் திங்கள்கிழமையன்று கூறுகையில் , "ராகுல் காந்தி கட்சித் தலைவராக ஆகாவிட்டால், நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் ஏமாற்றம் அடைவார்கள். லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ராகுல் காந்தி தலைவர் பதவியை ஏற்க வேண்டும்." என்றார்.

காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பெரும்பாலானோர் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி என்ற பெயரையே மனத்தில் வைத்துள்ளனர் என்பதும், தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி தயாராக இல்லை என்பதும் தெளிவாகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி தயங்குவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ராகுல் காந்தியின் தயக்கத்துக்குப் பின்னால் பல காரணங்கள் இருப்பதாக காங்கிரஸ் கட்சியின் அரசியலை கூர்ந்து கவனிக்கும் மூத்த பத்திரிகையாளர்கள் கருதுகின்றனர்.

ராகுலின் தயக்கத்தைப் பற்றி அறிய நாம் கொஞ்சம் வரலாற்றையும், கொஞ்சம் தற்போது நடக்கும் சம்பவங்களையும் உற்று நோக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி குறித்து பல ஆண்டுகளாக செய்தி சேகரிக்கும் மூத்த பத்திரிக்கையாளர் ஔரங்கசீப் நக்ஷ்பந்தி கூறுகிறார்.
 

2019ஆம் ஆண்டு என்ன நடந்தது?

2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார்.

அப்போது அவர் நான்கு பக்க கடிதம் ஒன்றை ட்வீட் செய்திருந்தார். அதில் சில பிரச்னைகளை குறிப்பிட்டு இருந்தார்.

அந்த கடிதத்தில் கட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதற்கான காரணங்கள் பட்டியலிடப்பட்டதாகவும், சில முக்கிய விஷயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் ஔரங்கசீப் கூறுகிறார்.

உதாரணமாக, அந்தக் கடிதத்தில், மக்களவைத் தேர்தல் தோல்விக்கு, கட்சியின் விரிவாக்க பிரச்சனையை சரிசெய்ய வேண்டும் என்று அவர் ஓர் இடத்தில் எழுதியிருந்தார். "இதற்குப் பலர் பொறுப்பு. ஆனால், தலைவர் பதவியில் இருக்கும் போது, நான் பொறுப்பேற்க வேண்டும். மற்றவர்கள் மீது அந்தப் பொறுப்பை திணிக்கக்கூடாது. அது சரியாக இருக்காது." என்றார்.

"அவர் ராஜிநாமா செய்த பிறகு, தோல்விக்கு காரணமானவர்களை பலரும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனால் அவரைத் தவிர, காங்கிரஸ் கட்சியில் உள்ள வேறு எந்த மூத்த தலைவர்களும் ராஜிநாமா செய்யவில்லை," என்று ஔரங்கசீப் கூறுகிறார்.

தான் தனிப்பட்ட முறையில் தனது முழு முயற்சியுடன் பிரதமர், ஆர்எஸ்எஸ் மற்றும் தொடர்புடைய அனைத்து அமைப்புகளுடன் நேரடியாகப் போராடியதாக அந்தக் கடிதத்தில் சொல்லியிருப்பார் ராகுல்.

இது குறித்து ஔரங்கசீப் கூறுகையில், "ரஃபேல் ஊழல் விவகாரத்தை ராகுல் காந்தி எழுப்பிய விதம், 'சௌகிதார் சோர் ஹை'யை தேர்தலில் பிரச்னையாக்கிய விதம், ஆகியவற்றுக்கு அவருக்கு கட்சியின் எந்த மூத்த தலைவர்களின் ஆதரவும் கிடைக்கவில்லை.

இந்த விஷயம் இன்னும் அவர் மனதில் இருப்பது போல் தெரிகிறது. தங்கள் பொறுப்பை கூட உணராத இப்படிப்பட்ட தலைவர்கள் கொண்ட கட்சியை வழிநடத்த ராகுல் காந்தி விரும்பவில்லை. அதனால்தான் தயக்கம்." என்கிறார்.

ராகுல் காந்தியின் இயல்பு

ராகுல் காந்தி பதவியில் இருக்க விரும்புகிறார். ஆனால் பொறுப்பு ஏற்க மறுக்கிறார் என்று சில வல்லுநர்கள் கருதுகின்றனர். அதில் ஒருவர், மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா குப்தா.

அவர் பிபிசி இந்தியுடன் பேசுகையில், "2004ம் ஆண்டு அவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியது. அந்த ஆண்டு அவர் அமேதி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று மக்களவைக்கு வந்தார். அன்றிலிருந்து அவர் கட்சியின் தலைவராக வருவார் என்று பேசப்பட்டது. ஆனால் அவர் அதை செய்யவில்லை. 2013ஆம் ஆண்டு கட்சியின் துணைத் தலைவரானார். 2017 ஆம் ஆண்டு தலைவர் பதவியை ஏற்று 2019ஆம் ஆண்டு பதவியை விட்டு விலகினார்.

2004ஆம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக பதவியேற்றபோதும், ஓர் அமைச்சகத்தில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்குவதற்கான வாய்ப்புகள் வெளிப்படையாகவே இருந்தன. ஆனால் அதையும் அவர் ஏற்கவில்லை.

இத்தகைய விஷயங்கள் அவரது இயல்பு பற்றி சொல்கிறது. அதிகாரப்பூர்வமாக அவர் பொறுப்புகளை ஏற்க தயக்கம் காட்டுகிறார். அது அவரது இயல்பு." என்றார்.
 

கட்சியில் எடுக்கும் முக்கிய முடிவுகள்

மற்றொரு முக்கியமாக விஷயத்தையும் ஸ்மிதா கூறுகிறார்.

அவரைப் பொருத்தவரையில், "ராகுல் 2019ம் ஆண்டு கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து ராஜிநாமா செய்த பிறகு, இன்று வரை கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கிறார். கட்சியின் முக்கிய முடிவுகளை எடுப்பதன் மூலம், கட்சியில் தனது பங்கு இருக்க வேண்டும் என்று அவர் நினைப்பது தெளிவாக தெரிகிறது".

ஸ்மிதா கூறுவதை போல் இருந்தால், ராகுல் கட்சித் தலைவராக இல்லாவிட்டாலும், அவர் கட்சியை பின் இருந்து வழிநடத்த விரும்புகிறார்.

அவர் கூறும்போது, ​​"துணைத் தலைவர் பதவியில் இருந்த நாட்களில் இருந்து, ராகுல் காந்தி பல ஆண்டுகளாக கட்சியின் முக்கிய பதவிகளில் இருந்து வருகிறார். அவர் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக கூறி வருகிறார். ஆனால் கட்சியை எடுத்துச் செல்வதில் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்.

ஆனால் அத்தகைய உயரத்திற்கு கொண்டு செல்ல தேவையான கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் அவரிடம் இல்லை. எந்த ஒரு சிந்தனையையும் அவர்களால் இறுதிவரை கொண்டு செல்ல முடியவில்லை என்கிறார்.
 

காந்தி குடும்பத்தைச் சாராத ஒரு கட்சித் தலைவர்

தலைவர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்த ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை தேர்தல் மூலம் முடிவு செய்ய விரும்பினார். அதனால்தான் இந்த பதவிக்கு எந்த பெயரையும் முன்வைக்கவில்லை என்றும் எழுதினார்.

காந்தி குடும்பத்தில் இருந்து வராத ஒருவர் கட்சித் தலைவராக பதவியேற்க வேண்டும் என்பதே அவரது எண்ணம்.

2019 ஆம் ஆண்டு அவர் கடிதம் எழுதிய பிறகு, காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தனது நிலைப்பாட்டை ராகுல் காந்தி இதுவரை மாற்றவில்லை. குறைந்தபட்சம் அது குறித்து பொதுவெளியில் எந்த அறிக்கையும் வரவில்லை.
 

இதனால், ராகுல் காந்தி மீண்டும் தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டால், அவரது பேச்சுக்கும் செயலுக்கும் வேறுபாடு ஏற்படும்.

எது எப்படி இருந்தாலும், பிரதமர் நரேந்திர மோதி முதல் பாஜகவின் பெரிய தலைவர்கள் வரை காங்கிரஸ் கட்சியைக் குடும்ப அரசியல் செய்யும் கட்சி என்று என்று குற்றம் சாட்டுகிறார்கள். இந்த முறை செங்கோட்டையில் இருந்து பிரதமர் நரேந்திர மோதி காங்கிரஸ் கட்சியை குடும்ப அரசியல் செய்யும் கட்சி என்று மீண்டும் கூறினார். காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்வதன் மூலம், இந்த விவகாரத்தை மீண்டும் பாஜக கையில் எடுக்க ராகுல் காந்தி விரும்பவில்லை.

அசோக் கெலாட்டின் பேச்சுக்கான அர்த்தம்

ஆனால், திங்கள்கிழமையன்று, காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவரை காங்கிரஸ் தலைவர் ஆக்குவது குறித்த கேள்விக்கு, காந்தி குடும்பத்தை சேர்ந்த அல்லது சேராத ஒருவரை கட்சித் தலைவர் ஆக்குவது குறித்த சர்ச்சை ஏன் எழுகிறது? 32 ஆண்டுகளாக இந்த குடும்பத்தில் இருந்து பிரதமராகவோ, முதல்வராகவோ அமைச்சராகவோ யாரும் ஆகவில்லை. பிறகு மோதிஜி இந்தக் குடும்பத்தைக் கண்டு ஏன் பயப்படுகிறார்? என்று பதலளித்தார் அசோக் கெலாட்.

அவரது பேச்சில், பிரதமர் நரேந்திர மோதியின் குடும்ப அரசியல் குற்றச்சாட்டு பற்றி குறிப்பிட்டார்.

இதுகுறித்து ஸ்மிதா குப்தா கூறுகையில், "ராகுல் காந்தி மீண்டும் தலைவர் பதவியை ஏற்க வேண்டும், அது குறித்து அசோக் கெலாட் கூறிய சூழ்நிலையும் முக்கியம்.

இப்போது காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்திக்கு சவாலாக யாரும் இல்லை.

ராகுலை தலைவராக்க இதுவே சரியான நேரம். ஜி23 (23 மூத்த தலைவர்கள் கொண்ட காங்கிரஸ் கட்சிக் குழு) மெதுவாக சிதைந்து வருவதாகத் தெரிகிறது. இந்த குழுவைச் சேர்ந்த பல தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறினர். ஆனந்த் சர்மா மற்றும் குலாம் நபி ஆசாத்தின் அதிருப்தி தெளிவாகத் தெரிகிறது.

ஜி23 குழு கட்சித் தலைவர் பொறுப்பை யார் ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் முழு நேரமாக அந்த பதவியை ஏற்க வேண்டும் என்று விரும்பியது. பகுதி நேரமாக எடுக்க கூடாது என்று விரும்பியது. செயல் தலைவர் ஒருவராகவோ, உண்மையான தலைவர் மற்றொருவராகவோ இருக்க கூடாது என்பதே அதன் கருத்து.

"நேஷனல் ஹெரால்டு வழக்கில் மூத்த தலைவர்கள் இருவரும் விசாரிக்கப்பட்ட விதம், அத்தகைய நேரத்தில், கட்சி தலைமை பொறுப்பில் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இல்லாமல் இருந்தால் அது அவர்களை மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் தள்ளக்கூடும் என்றும் ஸ்மிதா கூறுகிறார்.