செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 3 பிப்ரவரி 2022 (14:03 IST)

பாலிவுட் மீது அவதூறுகள் மூலம் வெறுப்பை கக்கும் யூ-டியூபர்கள்: பிபிசி ஆய்வு செய்தி

இந்தியாவின் ஹிந்தித் திரைப்படத் துறையான பாலிவுட், வெற்றி- தோல்வி, மகிழ்ச்சி-துக்கம், புகழ்ச்சி-இகழ்ச்சி, அலட்சியம் என்ற அனைத்தையும் பார்த்துள்ளது. அதற்குப் பழக்கமில்லாத சில விஷயங்களும் உள்ளன.
 
அவற்றில் ஒன்று, ஆன்லைனில் லட்சக்கணக்கான பின் தொடர்பவர்களைக் கொண்டுள்ள சில செல்வாக்கு மிக்கவர்கள் பரப்பும் அவதூறுகள், பொய்கள் கலந்த விஷமப் பிரச்சாரமாகும். மேலும் இவர்கள் இத்தகைய பொய்களைப் பரப்பி அதன் மூலம் வருவாய் ஈட்டுகிறார்கள் என்பது தான் வேதனையான விஷயம்.
 
இதைப் புரிந்து கொள்ள, கூகுளுக்குச் சொந்தமான வீடியோ பகிர்வு தளமான யூ-ட்யூபைப் பார்க்கலாம். தவறான தகவல்களைப் பரப்பும் தளங்களுக்குத் தாயகமாக இது விளங்குகிறது. இது குறித்து யூ-ட்யூபின் எதிர்வினை உள்ளிட்ட விவரங்களைப் பார்க்கலாம்.
 
இதுபோன்ற நூற்றுக்கணக்கான வீடியோக்களை வாரக்கணக்கில் பார்த்துவிட்டு, பிபிசியின் தவறான தகவல் தடுப்புப் பிரிவு இந்த நெட்வொர்க்கைக் கண்டுபிடித்துள்ளது. ஹிந்தித் திரையுலகிற்கு எதிராக தவறான தகவல்களைப் பரப்பும் இந்த செல்வாக்கு மிக்கவர்களில் பலர் வலதுசாரி ஆதரவாளர்கள் என்பதையும் பிபிசி உணர்ந்தது.

பிஜேபி உறுப்பினர்களுடன் அவர்கள் உரையாடும் வீடியோக்களை நாங்கள் கண்டோம் - உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துடனான மெய்ந்நிகர்ச் சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட ஒருவரும் இதில் அடக்கம்.
 
இதன் தாக்கத்தை ஒப்புக் கொள்ளும் அதே வேளையில், திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள போதுமான முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டனர்.
 
'ஒரு பொய்யான வீடியோ'
சந்தீப் வர்மா என்ற ஒரு நபரை எடுத்துக் கொள்வோம். இந்தச் செல்வாக்கு மிக்கவர்களில் நாங்கள் அடையாளம் கண்ட வர்மா, தன்னை ஒரு பத்திரிக்கையாளர் என்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறிக்கொள்கிறார்.
 
அவரது சேனலில் (பெயர் மறைக்கப்பட்டுள்ளது) திரைப்படத் துறையைப் பற்றிய பல வீடியோக்களைப் பார்த்தோம். அவற்றில் ஒன்றில் அவர் இந்தப் பெண்ணை எய்ம்சில் பணி புரியும் கூக்குரல் எழுப்புநர் ('விசில் ப்ளோயர்') என்று குறிப்பிட்டுள்ளார் (உரையாடலின் ஸ்கிரீன்ஷாட்). பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணையில், முறைகேடுகள் இருப்பதைப் பார்த்ததாக இந்தப் பெண் கூறுகிறார். எய்ம்சில் சீர்கேடு என்பதற்கு 'மிகப்பெரிய ஆதாரம்' என்று வீடியோவின் தலைப்பு இருந்தது.
இது குறித்து விவரமறிய, பிபிசி எய்ம்சை அணுகியபோது, அந்தப் பெண், சம்பந்தப்பட்ட துறையில் பணிபுரிந்ததேயில்லை என்று எய்ம்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார். அவர், இந்த வீடியோவை 'போலி வீடியோ' என்று குறிப்பிடுகிறார்.
 
பிபிசிக்கு அளித்த பேட்டியில், வர்மா, 'விசில்ப்ளோயரின்' உண்மைத் தன்மையை நிரூபிக்கத் தன்னிடம் ஆதாரம் இருப்பதாகக் கூறினார். ஆனால் அவர் விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார். எதிர்க் கேள்வி கேட்கப்பட்ட போது, பின்வாங்கிய வர்மா, எங்களுக்கு எதிராக 'மேலும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று மிரட்டினார்.
 
நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை 'தேச விரோதிகள்' மற்றும் 'இந்து விரோதிகள்' என்று தவறாக முத்திரை குத்தும் வீடியோக்களை நாங்கள் கண்டோம். போதைப்பொருள் வர்த்தகம், விபச்சாரம், குழந்தைகளின் ஆபாசப் படங்கள் மற்றும் உறுப்புத் திருட்டு போன்றவற்றில் நடிகர்கள் ஈடுபடுவதாக அவை எந்த ஆதாரமுமின்றி, அவதூறாகப் பேசுகின்றன.
 
இவற்றுடன் நில்லாமல், பார்வையாளர்களிடமிருந்து நிதியுதவி கோருபவையாகவும் அவை உள்ளன. இதற்கான வங்கிக் கணக்கு குறித்த தகவலும் உடன் பரப்பப்படுகின்றன.
 
"தயவுசெய்து (யூடியூப்) விளம்பரங்களைத் தவிர்க்காதீர்கள். நீங்கள் அவற்றைத் தவிர்க்காமல் பார்த்தால், எங்களுக்கு அந்த நிதியில் ஒரு பங்கு கிடைக்கும், அது எங்கள் பணி தொடர உதவும்" என்றும் அதில் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
 
பல வீடியோக்களில், பார்வையாளர்கள் இவர்களுக்கு நிதியுதவி அளிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
 
'எங்கள் பிழைப்பு என்னாகும்?'
பாலிவுட் திரையுலகின் களமான மும்பையில் நடிகை ஸ்வரா பாஸ்கரை நாங்கள் சந்தித்தோம். இத்தகைய அவதூறுகளை அதிகம் எதிர்கொள்பவர்களின் இவரும் ஒருவர். இவற்றின் தாக்கம் குறித்து அவரிடம் கேட்டோம்.
 
தனது தொழிலை இது நேரடியாகப் பாதிப்பதாகக் கூறும் இவர், "என் செயல்களை விட, என்னைப் பற்றிய தவறான தகவல்களைத்தான் மக்கள் அதிகம் நம்பும் நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்வராவை அழைத்தால் சர்ச்சை வெடிக்கும் என்று என்னை விளம்பரங்களுக்கு அழைப்பதில்லை," என்று கூறுகிறார்.
தனிப்பட்ட கலைஞர்களைத் தாண்டி, திரைப்படத் துறையை இது பாதிக்கிறதா என்றும் அவரிடம் கேட்டோம். அதற்கு ஆம் என்று ஒப்புக்கொண்ட அவர், ஒரு அச்சம் உருவாகி வருவதாகக் கூறுகிறார்.
 
"2011, 2012, 2013 போல் பெட்ரோல் விலையுயர்வு குறித்து அண்மைக்காலங்களில் நடிகர்கள் ஏன் கருத்து தெரிவிப்பதில்லை என்று மக்கள் கேட்கிறார்கள். தாங்கள் தாக்கப்படும் போது கூட அவர்கள் எதுவும் சொல்வதில்லை என்று கருதுகின்றனர். இதற்குக் காரணம் அச்சம் என்பதை அவர்கள் உணரவில்லை. இதற்குப் பின்னால் திட்டமிட்ட தாக்குதல் உத்தி உள்ளது. பாலிவுட்டைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர எடுக்கப்படும் முயற்சி இது" என்று அவர் விளக்குகிறார்.
 
ஆனால், பாலிவுட் என்பது நடிகர்கள் மட்டுமல்ல. நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளை ஆயிரக்கணக்கில் உருவாக்கும் ஒரு துறை இது.
 
தற்போது பிபிசி அம்பலப்படுத்தியுள்ள வீடியோ அவதூறுகள் போன்றவை அவர்களையும் பாதிக்கின்றன. இந்தியன் மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (IMPPA) செயலாளர் அனில் நாக்ரத், "சிலர் இந்தத் தொழில் குறித்து பரப்பிய அவதூறுகள் தயாரிப்பாளர்களைப் பெருமளவில் பாதித்துள்ளது. ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், தொழிலாளர்களும் அவதிப்படுகின்றனர். நாங்கள் எப்படிப் பிழைப்போம்?" என்கிறார் அவர்.
 
வதந்திகள், சரிபார்க்கப்படாவிட்டால், விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்று கூறும் முன்னாள் பத்திரிகையாளர் ஸ்ரீமி வர்மா பத்மாவத் திரைப்படத்தை உதாரணமாகக் கூறுகிறார்.
 
"பத்மாவத் படம் வெளியாகும் சமயத்தில், இளவரசியாக நடித்த தீபிகா படுகோனுக்கும் படையெடுத்த அரசராக நடித்த ரண்வீர் சிங்குக்கும் இடையில் முத்தக் காட்சி இருக்கலாம் என்று பரப்பப்பட்ட வதந்தியின் அடிப்படையில், சில அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டு, இயக்குநரைத் தாக்கி, நடிகையின் மூக்கை அறுப்பதாகவும் அச்சுறுத்தினர்" என்று அவர் நினைவு கூர்ந்தார்.
 
"நான் எச்சரிக்கவில்லை, ஆனால் அஞ்சுகிறேன். இன்று ஒரு ஷோ வெளியாகும் முன்பே இதில் எது யாரைப் புண்படுத்தும், சிக்கல் ஏதும் வருமா? எப்படித் தீர்வு காண்பது என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. இது சரியில்லை" என்கிறார் அவர்.
இதை எப்படிச் சரி செய்வது?
"சிலர், தாங்கள் குறிப்பிட்ட திரைப்படங்களைத் தயாரிப்பதாலும் குறிப்பிட்ட சிலரைத் திருப்தி செய்வதாலும் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் யாரும் பாதுகாப்பாக இல்லை என்பதுதான் வரலாறு என்று அவர்கள் அறிய வேண்டும். பாலிவுட் ஒன்று பட்டால்தான் பாதுகாப்பு. அதற்கு ஏதாவது செய்ய வேண்டும். சட்டமியற்றுபவர்களிடம் பேசி, சட்டங்களைத் திருத்த வேண்டும். இது பேச்சு சுதந்திரத்தைத் தடுப்பதாகாது. பொய்ச் செய்தியைத் தடுப்பது" என்று அவர் கூறினார்.
 
'நாங்கள் அஞ்சவில்லை'
எங்கள் விசாரணையின் போது, உத்தரபிரதேச அரசு பதிவேற்றிய 'சமூக ஊடக உரையாடல்' என்ற வீடியோவை நாங்கள் பார்த்தோம். செப்டம்பர் 9, 2021 தேதியிட்ட இதில், முதல்வர் யோகி ஆதித்யநாத், மெய்ந்நிகர் தளத்தில் 'தனது அரசாங்கத்தின் கருத்தை வலுவாக முன்வைத்த முக்கியமான செல்வாக்கு மிக்கவர்களின் குழு'-வுடன் உரையாற்றுகிறார்.
 
அவர்களைப் பாராட்டும் அவர், "அரசாங்கத்தால் நேரடியாகச் சொல்ல முடியாத பல விஷயங்களை நீங்கள் சொல்கிறீர்கள்" என்றார். 'எல்விஷ் யாதவ்' என்ற 'யூ-ட்யூபர்' ஒருவர் முதலமைச்சரிடம் கேள்வி கேட்கக்கூட அழைக்கப்பட்டார்.
 
பாலிவுட் நடிகர்கள் மீது பலமுறை அவதூறு பரப்பும் இதே நபரின் வீடியோவை நாங்கள் கண்டோம். இதில் பாலியல் ரீதியான கருத்துகள் முன்வைக்கப்பட்டன. கண்ணியமற்ற சொற்களைப் பயன்படுத்துவதற்கு எதிரான யூடியூப் கொள்கையை மீறும் இந்த வீடியோ இன்னும் யூ-ட்யூப் தளத்தில் உள்ளது. பிபிசி இந்த நபருக்குப் பல முறை கடிதம் எழுதியும் பதில் இல்லை.
 
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா மற்றும் மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் உள்ளிட்ட பல பாஜக நிர்வாகிகள் இதுபோன்ற வீடியோக்களில் பங்கேற்பதை நாங்கள் பார்த்தோம். இத்தகைய வீடியோக்கள் அரசியல் இயல்புடையவை என்றாலும், தங்களுக்கு பாஜக-வுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று இவர்கள் கூறினாலும், கட்சித் தலைவர்களுடன் தொடர்புடையவர்களாகவே இவர்கள் இருக்கிறார்கள்.
 
மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக செய்தித் தொடர்பாளர் ஸ்வேதா ஷாலினியும் வர்மாவின் யூடியூப் சேனலில் இரண்டு முறை தோன்றினார். பிபிசி அவரை அணுகியபோது, "இந்தச் செல்வாக்குள்ள நபருக்கும் எனது கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் இந்த நிகழ்ச்சியைத் தனிப்பட்ட ஒன்றாகவும் ஒரு இளைஞர் தலைவராக இளைஞர்களுடனான ஒரு பரிமாற்றமாகவுமே பார்க்கிறேன்" என்று கூறினார்.
 
தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொண்டும் பூனாவாலா பதிலளிக்கவில்லை. பல செல்வாக்கு மிகுந்த யூ-ட்யூபர்களைத் தொடர்பு கொண்டதில் ஒரு சிலரே பதிலளித்தனர்.
 
பலவார முயற்சிக்குப் பிறகு தில்லியில் சந்திக்க வர்மா ஒப்புக்கொண்டார். "நான் என் இருப்பிடத்தை வெளியிடுவதில்லை. என் போன்றவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டியுள்ளது. ஒரு விடுதி அறையில் சந்திக்கலாம்' என்று வாட்ஸ் ஆப்பில் கூறினார்.
 
பணத்துக்காகப் பரபரப்பான, அடிப்படையில்லாத விவகாரங்களை வெளியிடுகிறீர்களா என்று கேட்கப்பட்டதற்கு மறுப்பு தெரிவித்த அவர், "எனக்கு பாலிவுட் மீது வெறுப்பு இல்லை. அதைச் சுத்தப்படுத்த விரும்புகிறேன்" என்றார்.
 
சந்தீப் போகட் என்பவர் சாதாரண மக்களின் குரல் என்று தன்னைக் கூறிக்கொண்டு ஒரு யூட்யூப் சேனல் நடத்துகிறார். பாலிவுட் குறித்த அவரது தனிப்பட்ட பார்வையின் அடிப்படையில் அவர் தனது வீடியோக்களை அமைக்கிறாரா என்று கேட்டோம்.
 
ஒரு வீடியோ அழைப்பில் இதற்குப் பதிலளித்த அவர், "எனது அலுவலகத்தில், தீபாவளி கொண்டாடும்போது பாலிவுட் ஐட்டம் பாடல்கள் இடம்பெறுகின்றன. தொடர்ந்து இரண்டு வருடங்களாக நான் பங்கேற்கவில்லை. பங்கேற்கும் சிலரிடம் நான் பேசியதில் அவர்களும் இப்போது பங்கேற்பதில்லை" என்றார்.
 
அவரது வீடியோக்களில் சில ஆதாரமற்ற கூற்றுகள் இருப்பது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டபோது, "2 மணிநேர வீடியோக்களை எடுக்கும்போது சில விஷயங்கள் தவறவிடப்படலாம்" என்றார்.
 
இவர்களது சேனல்கள் முடக்கப்படுவது குறித்து அச்சம் இருக்கிறதா என்று இவர்களிடம் கேட்டபோது, இருவருமே இல்லை என்று மறுத்தனர்.
 
"என் சேனல் முடக்கப்பட்டால், இது போல பத்து சேனல்களைத் தொடங்கி இது பற்றி மீண்டும் மீண்டும் பேசுவேன்" என்கிறார் போகட்.
 
இவர்களிருவரும் பரஸ்பரம் அடுத்தவர் சேனல்களிலும் பங்கேற்கிறார்கள். நிபுணர்களையும் இருவரும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
 
யூ-ட்யூபின் பங்களிப்பு
இந்தியாவில் ஏறக்குறைய 45 கோடி பயனர்களுடன் (உலகளவில் 2 பில்லியன்), யூடியூப் தனித்துவமான ஒரு தளமாக விளங்குகிறது. யூடியூப்பின் மிகப்பெரிய சந்தைகளில் இந்தியாவும் உள்ளது. பெருமளவு மக்களைச் சென்று அடைவதுதான் வருவாய்க்கும் வழிவகுக்கும்.
 
விளம்பர வருவாய், பணம் செலுத்தும் உறுப்பினர்கள், உரையாடல் தளம் மற்றும் நிதியுதவி கோரல் மூலமாக யூ-யூபர்களுக்கு வருவாய் பெருக இத்தளம் வகை செய்கிறது.
கேடு விளைவிக்கும் தவறான தகவல் மூலமாகத் தங்கள் பொருட்களை விற்பனை செய்வதும் இதில் ஒன்று.
 
இந்தச் செல்வாக்கு மிக்க யூ-ட்யூபர்களுக்கு 'சரிபார்க்கப்பட்ட சேனல்' என்ற ஒரு பேட்ஜ் வழங்கி இவர்களது நம்பகத் தன்மையை அதிகரிக்கிறது யூடியூப். பரபரப்பான தலைப்புச் செய்திகள், தவறான கருத்தை வெளியிடும் காட்சிப் படங்கள், பாலிவுட், அதன் நடிகர்கள் குறித்த தவறான தகவல்கள், அவதூறுகள் - இவை அதிகமான பார்வையாளர்களைக் கவர்ந்து யூ-ட்யூபுக்கும் வர்த்தகத்தைப் பெருக்குகின்றன.
 
நாங்கள் கண்டறிந்தவற்றை நாங்கள் யூ-ட்யூப் நிறுவனத்துடனும் பகிர்ந்து கொண்டோம். அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், "யூ-ட்யூப் சமூகத்தைப் பாதுகாக்க, பெரும் முதலீட்டில் கொள்கைகள், வளங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளோம். தகவல்கள் அதிகாரபூர்வமாகவும் தலைப்புகள் வெளிப்படையாகவும் இருப்பதை உறுதி செய்ய எங்கள் அல்காரிதம்களை மாற்றியமைத்துள்ளோம். தவறான தகவல்களைக் கண்காணிக்கும் சிறப்பான குழுக்களை அமைத்துள்ளோம்." என்றார்.
 
கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த நிறுவனத்திடம், தவறான தகவல்களைப் பரப்பும் செல்வாக்குள்ள யூ-ட்யூபர்களின் கணக்குகள் அங்கீகரிக்கப்பட்டு வருவாய் ஈட்ட அனுமதிக்கப்படுவது ஏன் என்று கேட்டோம். இந்தக் கேள்விகளுக்கு யூ-ட்யூப் பதிலளிக்கவில்லை.
 
"யூ-ட்யூப் தங்கள் கொள்கைகளுக்கு விரோதமான வீடியோக்களையும் பரிந்துரைத்துப் பரப்புவதால், உலகெங்கிலும் உள்ள மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்," என்கிறது மோசில்லா அறக்கட்டளையின் ரிக்ரெட்ஸ் ரிப்போர்டர் நிகழ்ச்சி. இது மக்களிடம் பணம் திரட்டி நடத்தப்படும் புலனாய்வு நிகழ்ச்சி என்கிறது மோசில்லா.
 
இந்தியா போன்ற ஆங்கிலம் அல்லாத மொழிச் சந்தைகளில் இதுபோன்ற பிரச்சினை இன்னும் பெரிய விளைவுகளை ஏற்படுத்துவதாக மோசில்லா புலனாய்வுச் செய்தியின் இணை ஆசிரியரான பிராண்டி க்யெர்கிங்க் கூறினார்.
 
"ஆங்கிலத்தை முதன்மை மொழியாகக் கொள்ளாத நாடுகளில், ஆங்கிலத்தை முதன்மை மொழியாகக் கொண்ட நாடுகளில் இருந்ததைவிட, வருத்தக் குறிப்பு 60 சதவீதம் அதிகமாக உள்ளது எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது" என்று கூறினார்.
 
அப்படியானால், யூ-ட்யூப் போன்ற ஒரு தளத்தில் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வது எப்படி? "கூகிள் யூ-ட்யூபில் உங்கள் தரவு அமைப்புகளைப் பாருங்கள். எடுத்துக்காட்டாக, யூ-ட்யூபில் உங்கள் வாட்ச் ஹிஸ்டரி மற்றும் சர்ச் ஹிஸ்டரி நீங்கள் பாதிக்காத விஷயங்களைத் தேர்வு செய்து கொள்ள வழி செய்கிறது. 'இந்த சேனலை பரிந்துரைக்க வேண்டாம்', 'இந்த வீடியோவில் எனக்கு ஆர்வம் இல்லை' போன்ற ரிப்போர்ட்களை அளிக்கலாம்.
 
பிரைவேட் பிரவுசிங் விண்டோக்கள் நீங்கள் அவசியமாக உள் நுழைந்திருக்கவில்லை என்பதை உறுதிசெய்வதற்கான ஒரு சிறந்த வழியாகும். அதனால் நீங்கள் எதைப் பார்க்கிறீர்களோ அது உங்கள் சுயவிவரத்தில் சேர்க்கப்படாது, மேலும் இது எதிர்காலத்தில் நீங்கள் YouTube இல் செய்யப்போகும் அனைத்து விஷயங்களையும் பாதிக்காது" என்றார் அவர்.
 
அடுத்து என்ன?
யூடியூப் உட்பட ஆன்லைன் தளங்களில் தவறான தகவல்களுக்கு எதிராக இந்திய அரசாங்கம் மீண்டும் மீண்டும் நடவடிக்கை எடுத்து வரும் ஒரு கால கட்டத்தில், பிபிசி விசாரணையின் வெளிப்பாடுகள் வந்துள்ளது ஒரு தற்செயலான நிகழ்வு.
 
இந்தியாவின் 'தகவல் சூழலை' பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், 'இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தையும்' கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் மேற்கோள் காட்டி, கடந்த இரண்டு மாதங்களில், இந்தியாவின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் (MIB) கிட்டத்தட்ட 55 யூடியூப் சேனல்கள் மற்றும் பிற தளங்களில் உள்ள கணக்குகளை முடக்கியுள்ளது.
 
ஜனவரி 21 அன்று, எம்ஐபியின் செயலர் அபூர்வ சந்திரா, குடிமக்கள் மற்றும் ஊடகங்களை 'விஷமத் தனமான சேனல்கள் குறித்த தகவல்களை எங்களிடம் தெரிவியுங்கள்' என்று கேட்டு, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
 
மேலும், "யூ-ட்யூப் போன்ற நிறுவனங்கள், இவை விஷமத் தனமான தகவல், போலியான செய்திகள் என்பதைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, மேலும் தங்கள் அமைப்புகளுக்குள்ளும் இவை எந்த ஊடக அறத்துக்கும் பொருந்தவில்லை என்று அடையாளப்படுத்த வேண்டும்" என்றும் அவர் கூறினார்.
 
பிபிசி தனது விசாரணையைப் பற்றி MIB மற்றும் மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEITY) க்கு தெரிவித்து பதிலைக் கோரியுள்ளது. ஆனால், பலமுறை நினைவூட்டியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.