1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 16 டிசம்பர் 2021 (13:12 IST)

பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்க இந்திய அரசு விரும்புவது ஏன்?

நடப்புக் குளிர்காலக் கூட்டத் தொடரில் பொதுத் துறை வங்கிகளில் அரசின் பங்கைக் குறைப்பதற்கான திருத்தச் சட்டங்கள் கொண்டுவரப்படுவதை வங்கி ஊழியர் சங்கங்கள் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்துள்ளன. வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளன. இந்தத் திருத்தச் சட்டங்கள் என்ன சொல்கின்றன?

இந்தியாவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு பொதுத் துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கப்போவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே அறிவித்திருந்தார். அதாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஐ.டி.பி.ஐ. வங்கி தவிர மேலும் இரண்டு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கான சட்டத் திருத்தம் கொண்டுவரப்படுமென்றும் அப்போதே கூறப்பட்டது. அதன்படி தற்போது நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 26 சட்டங்களில் இதற்கான திருத்தச் சட்டங்களும் அடங்கும்.

இந்தத் திருத்தச் சட்டங்களின் மூலம் Banking Companies Act 1970, Banking Companies Act 1980, Banking Regulation Act 1949 ஆகிய மூன்று சட்டங்களிலும் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது. 1969ல் 14 பெரிய தனியார் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன. அதற்கான சட்டம்தான் 1970ல் கொண்டுவரப்பட்டது. 1980ல் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் மூலம் ஆறு தனியார் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டன.

அப்போது 20 வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட நிலையில், அவற்றில் பல ஒன்றோன்று இணைக்கப்பட்டு, தற்போது 12 வங்கிகளாக இயங்கி வருகின்றன. இதில் இந்திய ஸ்டேட் வங்கி தவிர்த்த பிற 11 வங்கிகளும் இந்த இரண்டு சட்டங்களுக்குள்தான் வருகின்றன.

"தற்போதுள்ள சட்டப்படி இந்த வங்கிகளில் மத்திய அரசின் முதலீடானது 51 சதவீதமாக இருக்க வேண்டும். சட்டத்தைத் திருத்தாமல் அதைக் குறைக்க முடியாது. இந்த முதலீட்டு சதவீதத்தை குறைப்பதற்காகத்தான் தற்போது திருத்தம் கொண்டுவரப்படுகிறது. இரண்டு வங்கிகளைப் பற்றித்தான் அவர்கள் சொல்கிறார்கள் என்றாலும் 11 வங்கிகளையும் தனியார் மயமாக்குவதற்கான சட்ட அதிகாரத்தைத்தான் இந்தத் திருத்தத்தின் மூலம் அவர்கள் கையில் எடுக்கப் போகிறார்கள். அப்படிச் செய்துவிட்டால் எந்த வங்கியை வேண்டுமானாலும் தனியார் மயமாக்கலாம். இது நாட்டின் பொருளாதாரத்தையே சீரழிக்கும்."

"ஆயுள் காப்பீட்டு நிறுவன விவகாரத்தில் இப்படித்தான் செய்தார்கள். முதலில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பங்குகளை மட்டும் விற்கப்போவதாகச் சொன்னார்கள். ஆனால், சட்டத்திருத்தம் வந்தபோது இந்தியாவில் அரசின் வசமுள்ள ஐந்து காப்பீட்டு நிறுவனங்களையும் எப்போது வேண்டுமானாலும் தனியார் மயமாக்கும்வகையில் திருத்தம் கொண்டுவரப்பட்டது" என்கிறார் இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் இணைச் செயலாளர் சி.பி. கிருஷ்ணன்.

1947ல் இருந்து 1969வரை 558 தனியார் வங்கிகள் திவாலாயின. 69க்குப் பிறகு இப்போதுவரை 38 தனியார் வங்கிகள் திவாலாகியிருக்கின்றன. 1991க்குப் பிறகு புதிதாக பத்து வங்கிகள் திறக்கப்பட்டன. அதில் குளோபல் டிரஸ்ட் பேங்க், செஞ்சூரியன் வங்கி, டைம்ஸ் வங்கி, பேங்க் ஆஃப் பஞ்சாப் ஆகிய நான்கு வங்கிகள் காணாமல் போய்விட்டன என்று சுட்டிக்காட்டும் கிருஷ்ணன், தனியார் வங்கிகளிலும் வராக் கடன்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

தவிர, பொதுத் துறை வங்கிகள் செய்யும் அத்தனை சமூகக் கடமைகளையும் தனியார் வங்கிகளும் செய்கின்றனவா என்றும் கேள்வி எழுப்புகிறார். "பொதுத் துறை வங்கிகள் தாங்கள் அளிக்கும் கடனில் 18 சதவீதத்தை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டுமென சட்டம் இருக்கிறது. இதன் மூலம்தான் உணவு தன்னிறைவு எட்டப்பட்டது. சிறு, குறு கடனாளிகளுக்கு கடன் கொடுப்பதில் பொதுத் துறை வங்கிகள்தான் முன்னணியில் உள்ளன.

தற்போது பொதுத் துறை வங்கிகள் 75 சதவீத வியாபாரத்தைக் கொண்டிருந்தாலும் மொத்த வாடிக்கையாளர்களில் 94 சதவீதம் பேர் பொதுத் துறை வங்கிகளைத்தான் சார்ந்திருக்கிறார்கள். பிரதமர் எங்கு போனாலும் பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் ஜன் - தன் கணக்குகள் தற்போது 44 கோடி கணக்குகள் உள்ளன. அதில் 43 கோடி கணக்குகள் பொதுத் துறை வங்கிகளால் அளிக்கப்பட்டவை. வெறும் ஒரு கோடி கணக்குகளை மட்டுமே தனியார் வங்கிகள் அளித்துள்ளன. பொதுத் துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்டால், அதில் உள்ள ஜன் தன் வங்கிக் கணக்குகள் மூடப்படும் அபாயம் இருக்கிறது" என்கிறார் கிருஷ்ணன்.

ஆனால், பொதுத் துறை வங்கிகளைத் தனியார் மயமாக்கம் செய்வதே சரி என்கிறார் பா.ஜ.கவைச் சேர்ந்த பொருளாதார நிபுணரான ராஜலட்சுமி. "பண மதிப்பிழப்பு நடந்த சமயத்தில் பொதுத் துறை வங்கிகளில் பல மோசடிச் சம்பவங்கள் நடந்தன. எவ்வளவுதான் அவர்களைக் கட்டுப்படுத்துவது? நிலங்களை வைத்துக் கடன் கொடுக்கும்போது அவற்றின் மதிப்பிற்கு மேல் கடன் கொடுத்தார்கள். இதனால், அந்தக் கடன்களைத் திரும்ப வசூலிப்பதில் சிரமம் ஏற்பட்டது. வங்கிப் பணி என்பது மிகவும் விரும்பப்படும் பணியாக இருந்தாலும், அதில் பொறுப்பில்லாத்தனம் அதிகரித்துவிட்டது. ஆகவே தனியார் மயாக்கம் சரிதான்" என்கிறார் அவர்.

இந்தக் கூற்றுகளை எல்லாம் சி.பி. கிருஷ்ணன் மறுக்கிறார். பொதுத் துறை நிறுவனங்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுவதாகச் சொல்லும் சி.பி. கிருஷ்ணன், கடந்த 7 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் மட்டும் இந்த வங்கிகள் 11 லட்சம் கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியதாகக் குறிப்பிடுகிறார்.

"ஆனால், அந்த லாபம் அரசுக்குக் கிடைக்கவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பெரும் தொகையைக் கடனாகக் கொடுத்து, அவை தள்ளுபடி செய்யப்பட்டன. அந்த வராக் கடன்கள் இந்த லாபத்தில் கழிக்கப்பட்டன. ஆகவேதான் நிகர இழப்பு ஒரு கோடி ரூபாய் என்று கணக்குக் காட்டப்பட்டது.

கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிகளிடம் பெற்ற கடனை திரும்பச் செலுத்த வலியுறுத்தாமல் வங்கிகளின் லாபத்தை அதற்கென ஒதுக்கிவைப்பது எவ்விதத்தில் சரி?" எனக் கேள்வியழுப்புகிறார் கிருஷ்ணன்.

2008ல் உலக பொருளாதார நெருக்கடி வந்தபோது, இந்தியாவில் பெரும்பாலான வங்கிகள் பொதுத் துறையில் இருந்ததால்தான் பொருளாதாரம் காப்பாற்றப்பட்டது என்பதை அனைவருமே ஒப்புக்கொள்கிறார்கள். 100 நாள் வேலைத் திட்டத்திற்காக மட்டும் பொதுத் துறை நிறுவனங்களில் 6 கோடிப் பேர் கணக்கு வைத்திருப்பதையும் கிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார்.

"இந்தப் பணிகளையெல்லாம் கூட்டுறவு வங்கிகளை வைத்து செய்துவிடலாமே? அதற்கு பொதுத் துறை வங்கிகள் எதற்கு? பொதுத் துறை வங்கிகள் நிறையக் கடன்களைக் கொடுத்து தேசிய இழப்பை ஏற்படுத்துகின்றன" என்கிறார் ராஜலட்சுமி.

இந்த சட்டத் திருத்தங்களைக் கடுமையாக எதிர்க்கும் ஊழியர்களுக்கான தொழிற்சங்கங்கள், இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் தவிர, நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களைக் குரல் கொடுக்க வைப்பது, பரவலான போராட்டங்களை நடத்துவது போன்றவற்றிற்கும் திட்டமிட்டுள்ளன.