வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala

தாலிபன்களிடம் இருந்து ஆப்கானிஸ்தானின் அஷ்ரப் கனி தப்புவதற்கு அமீரகத்தை தேர்வு செய்தது ஏன்?

ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பியோடிய அதிபர் அஷ்ரப் கனிக்கு மனித நேய அடிப்படையில் அடைக்கலம் அளித்தது ஐக்கிய அரபு அமீரகம்

ஆகஸ்ட் 15 அன்று, தாலிபான் போராளிகள் காபூலை முற்றுகையிட்டபோது, அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி திடீரென நாட்டை விட்டு வெளியேறினார்.
 
அந்த நேரத்தில் அவர் எங்கு சென்றார் என்று தெளிவாகத் தெரியவில்லை. அவர் உஸ்பெகிஸ்தான் அல்லது தஜிகிஸ்தானுக்குச் சென்றிருக்கக்கூடும் என்று கூறப்பட்டு வந்தது. பின்னர் அஷ்ரஃப் கனி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பதாக உறுதி செய்தார்.
 
ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் மனித நேய அடிப்படையில் கனிக்குப் புகலிடம் அளிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அஷ்ரஃப் கனியும் ஒரு வீடியோவை வெளியிட்டார். தான் நாட்டை விட்டுத் தப்பி ஓடவில்லை என்றும் ஒரு பெரும் அழிவைத் தடுக்கவே வெளியேறியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். "மிகப் பெரும் வன்முறையையும் குழப்பத்தையும் தவிர்க்கவே தான் ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் தப்பி வந்ததாகவும் அவர் கூறினார். ஆஃப்கானிஸ்தானுக்குத் திரும்புவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கனி கூறினார்.
 
ஆப்கானிஸ்தான் அரசியல்
 
இஸ்லாமிய உலகின் தலைவர் ஒருவருக்கு ஐக்கிய அரபு அமீரகம் தஞ்சம் அளிப்பது இது முதல் முறை அன்று. 90 களில், பாகிஸ்தான் பிரதமர் பேநஸிர் புட்டோ ஐக்கிய அரபு அமீரகத்தைத் தனது புகலிடமாக்கிக்கொண்டார்.
 
பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பும் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தையே நாடினார். ஆனால் கனி ஏன் ஐக்கிய அரபு அமீரகம் சென்றார் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
 
எனினும், இந்த முறை தனது நாட்டை ஒரு அரசியல் தளமாக அஷ்ரப் கனி பயன்படுத்துவதை ஐக்கிய அரபு அமீரகம் விரும்பாது.
 
பிபிசி பாதுகாப்பு நிருபர் பிராங்க் கார்ட்னர், "அமீரகத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர், எனவே அமீரகம் தனது நிலம் ஆப்கான் அரசியலின் களமாக மாறுவதை விரும்பாது." என்று கூறுகிறார்.
 
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கனியின் வருகையில் ஆச்சரியமில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 
அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷனைச் சேர்ந்த கபீர் தன்ரேஜா கூறுகையில், "தாலிபன் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு தரப்புகளுடனும் ஐக்கிய அரபு அமீரகத்தின் உறவு சுமுகமாகவே உள்ளது. மனிதாபிமான அடிப்படையில் அஷ்ரப் கனிக்கு ஐக்கிய அரபு அமீரகம் தஞ்சம் அளித்தது. ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த நடவடிக்கை எதிர்பாராதது அல்ல." என்று தெரிவிக்கிறார்.
 
தாலிபன்களுடனான ஐக்கிய அரபு அமீரகத்தின் உறவு
 
1996 இல், தாலிபன்கள் ஆப்கானிஸ்தானைக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து ஆட்சி அமைத்தபோது, பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் மட்டுமே இந்த அரசாங்கத்தை அங்கீகரித்தன. அப்போதிருந்து இந்த நாடுகளுக்கிடையிலான உறவில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
 
தன்ரேஜா கூறுகையில், "அமெரிக்காவில் 9/11 தாக்குதலுக்குப் பிறகு, அரபு நாடுகள் தங்கள் பிம்பத்தைச் சீராக்கிக்கொள்ள அழுத்தம் கொடுக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள். அரபு நாடுகளில் சீர்திருத்தங்கள் ஆரம்பிக்கப்பட்டன. சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் தாலிபன்களிடமிருந்து விலகிச் செல்லத் தொடங்கின.
 
2001-ல் அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானைத் தாக்கித் தாலிபன்களை விரட்டியபோது, ஐக்கிய அரபு அமீரகமும் இந்தத் தாக்குதலை ஆதரித்தது. ஐக்கிய அரபு அமீரக வீரர்களும் ஆப்கானிஸ்தானில் இருந்தனர், இருப்பினும் அவர்களின் எண்ணிக்கை அதிகமாக இல்லை.
 
ஆப்கானிஸ்தானில் அமைதி மற்றும் மனிதாபிமான பணிகளில் ஐக்கிய அரபு அமீரகத் துருப்புக்களின் ஒரு சிறிய குழு நிறுத்தப்பட்டுள்ளது.
 
ஆப்கானிஸ்தானும் இந்த வீரர்களை நட்பு முஸ்லீம் வீரர்களாகவே பார்க்கிறது.
 
சன்னி வஹாபி சித்தாந்தம் சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இரண்டிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நாடுகள் மதரஸாக்கள் மற்றும் மசூதிகள் மூலம் தொண்டு என்ற பெயரில் ஆப்கானிஸ்தானில் வளர்ச்சிப் பணிகளையும் செய்துள்ளன. கருத்தியல் ரீதியாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தாலிபன்களுக்கு இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
 
ஆனால் தாலிபன்களை அங்கீகரிக்கும் ஐக்கிய அரபு அமீரகம், 2001 ல் தாலிபன்களிடமிருந்து பெரிதும் விலகி இராஜதந்திர ரீதியாகவும் விலகியிருக்கத் தொடங்கியது.
 
"அந்தச் சமயத்தில் ஐக்கிய அரபு அமீரகம், தாலிபனுடனான உறவுகளைப் பெரிதும் துண்டித்து, ஹமீத் கர்சாய் மற்றும் அஷ்ரப் கனி தலைமையிலான அரசாங்கங்களுடன் முறையான இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருந்தது. கருத்தியல் ரீதியாக ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் தாலிபன் இடையிலான உறவு இப்போது குறைந்துவிட்டன. இப்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான உறவு கருத்தியல் ரீதியாகக் குறைவாகவும் நடைமுறை ரீதியாக அதிகமாகவும் உள்ளது. " என்று தன்ரேஜா கூறுகிறார்.
 
2017 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு ராஜதந்திரிகள் குழுவினர் கந்தஹாரில் தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலில் தூதர்கள் உட்பட பலர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, ஐக்கிய அரபு அமீரகம் தாலிபன்களிடமிருந்து சற்று விலகியே இருக்கிறது.
 
தாலிபன் - ஐக்கிய அரபு அமீரக உறவுகளில் பாகிஸ்தானின் பங்கு
அதே நேரத்தில், தலிபான்களுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான உறவுகளில் பாகிஸ்தானும் முக்கிய பங்கு வகிக்க முடியும். துருக்கி மற்றும் கத்தார், பாகிஸ்தானுடன் இணைந்து, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி ஆகியவை தங்கள் செல்வாக்கை கொஞ்சம் குறைக்கக் கூடாது என்று நினைக்கலாம்.
 
பொருளாதார விஷயங்கள் தொடர்பாக பாகிஸ்தானுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் பாகிஸ்தானுக்கு வழங்கிய கடன்களை திரும்பப் பெற வலியுறுத்தியது.
 
தன்ரேஜா மேலும் கூறுகையில், "ஐக்கிய அரபு அமீரகத்துடனான பாகிஸ்தானின் உறவு தாலிபனுடனான உறவையும் பாதிக்கலாம். ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் தாலிபன்களுக்கிடையிலான உறவு தொய்வடைவதை பாகிஸ்தான் விரும்பாது. அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள் முக்கியமானவை. இது பாதிக்கப்பட்டால், பாகிஸ்தானில் சீனாவின் செல்வாக்கு இன்னும் அதிகரிக்கலாம். இதை பாகிஸ்தான் விரும்பாது. அத்தகைய சூழ்நிலையில், தாலிபனுடனான அரபு நாடுகளின் உறவால் பாகிஸ்தானும் பாதிக்கப்படலாம். ஐக்கிய அரபு அமீரகம் ஆப்கானிஸ்தானில் தனது செல்வாக்கை அதிகரிக்க முயற்சி செய்யலாம், ஆனால் இது நெருப்பில் கை வைப்பது போன்றது. ஐக்கிய அரபு அமீரகம் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது ஆழ்ந்த யோசனைக்குப் பிறகே எடுக்கப்படும்." என்று கூறுகிறார்.
 
எத்தனை காலம் கனி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பார்?
 
இருப்பினும், கனி எவ்வளவு காலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருப்பார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பின்னர் அவர் அமெரிக்கா செல்லலாம், ஆனால் இந்த நேரத்தில் அமெரிக்கா அவருக்கு வரவேற்பளிக்காது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
 
தன்ரேஜா கூறுகையில், "கடந்த காலங்களில் இஸ்லாமிய உலகில் இருந்து வந்தவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தஞ்சம் அளித்துப் பேச்சு வார்த்தைக்கும் வழி வகுத்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், கனி இங்கு வந்ததில் ஆச்சரியம் இல்லை." என்றார்.
 
ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழ்வது அவ்வளவு எளிதல்ல. இங்கு வாழ்வதற்கான செலவு மிக அதிகம். கனி பெரும் தொகையுடன் தப்பிச் சென்றதாக சில அறிக்கைகள் கூறின, ஆனால் அவர் ஒரு அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
 
கனி தனது அறிக்கையில் ஆப்கானிஸ்தானிலிருந்து ஒரு ஜோடி ஆடை மற்றும் காலணி அணிந்து சென்றதாகவும், தன்னிடம் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார்.
 
ஐக்கிய அரபு அமீரகத்தைத் தேர்ந்தெடுத்தது ஏன்?
 
ஐக்கிய அரபு அமீரகத்தை இவர் தேர்ந்தெடுக்கக் காரணமாக, இந்த நாடு பாதுகாப்பையும் ரகசியக் காப்பையும் உறுதி செய்வது தான் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ரகசியமாகத் தங்கவும் பணத்தை முதலீடு செய்யவும் ஏராளமான வாய்ப்புகள் மற்றும் இடங்கள் இங்கு உள்ளன.
 
ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிநவீன கேமராக்கள் உள்ளன. பாதுகாப்பும் வலிமையானது. அரச குடும்பத்திற்கு ஆட்சி அதிகாரத்திலும் வலுவான பிடிப்பு உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இங்கு வரும் அரசியல்வாதிகள் பாதுகாப்பாக உணர்கிறார்கள்.
 
உலகெங்கிலும் உள்ள அரசியல் குடும்பங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் மக்களும் தஞ்சம் கோருவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸை அடைவதற்கு இதுவே காரணம். தாய்லாந்தின் பிரதமர் தக்சின் ஷினவத்ரா மற்றும் யிங்லக் ஷினவத்ரா ஆகியோரும் ராணுவ சதித்திட்டத்தில் அதிகாரத்தை இழந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சமடைந்தனர்.
 
இது தவிர, ஸ்பெயினின் முன்னாள் மன்னர் ஹ்வான் கார்லோஸ், பாலஸ்தீனத் தலைவர் முகமது தஹ்லான் மற்றும் மறைந்த யேமன் அதிபர் அலி அப்துல்லா சலேஹின் மூத்த மகன் அகமது அலி அப்துல்லா சலேஹ் ஆகியோரும் துபாயில் தஞ்சமடைந்தனர்.