1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 15 ஜூன் 2024 (18:35 IST)

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

Maanjolai Estate
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கான குத்தகை காலம் முடிந்து விட்டதால் தோட்டத்தை மூடிவிட்டு, அங்கிருக்கும் தொழிலாளர்களை வெளியேறச் சொல்லிவிட்டது நிர்வாகம். வேறு எங்கு செல்வது எனக் கேள்வி எழுப்புகிறார்கள் தொழிலாளர்கள்.



ஜூன் 14-ஆம் தேதி. திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் கூடியிருக்கும் பெண்கள் மொத்தமாக கதறி அழுதுகொண்டிருக்கிறார்கள். அந்தக் காட்சியைப் பார்ப்பவர்கள் யாரும் கண்கலங்காமல் இருக்க முடியாது.

அவர்கள் நான்கு தலைமுறையாக வேலை பார்த்துவந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் கடைசி நாள் அது. கண்ணீரைத் துடைத்தபடி, விருப்ப ஓய்வுத் திட்டப் படிவத்தில் கையெழுத்திடுகிறார்கள்.

அந்தத் தொழிலாளர்கள் வாழ்ந்த வீடு, வேலைபார்த்த நிலம், படித்த பள்ளி, முன்னோர்களின் கல்லறைகள், சக தொழிலாளர்களுடனான உறவு என எல்லாவற்றின் மீதும் ஒரு விலக்க முடியாத திரை விழுந்துவிட்டது.

"இப்படி ஒரு நாள் வந்திருக்கவே கூடாது. இன்னைக்கு மாஞ்சோலையே ஒரு இழவு வீட்டைப்போல இருந்தது. இப்படி ஒரு சூழல் வரும்னு நாங்கள் ஒருபோதும் எதிர்பார்த்ததில்லை. இனிமேல் என்ன செய்யப்போகிறோம என்று தெரியவில்லை," என்கிறார் நான்காவது தலைமுறையாக இங்கே வேலை பார்க்கும் ஜெயஸ்ரீ.

இவரது முன்னோர்கள் கேரளாவிலிருந்து வந்து மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் வேலையில் சேர்ந்தார்கள். இப்போது இவரும் இவரது கணவர் பாக்கியராஜும் இங்கேதான் வேலைபார்க்கிறார்கள்.

"46 வயதாகிவிட்டது எனக்கு. இனிமேல் எங்கே போய் என்ன வேலையை என்னால் கற்றுக்கொண்டு செய்ய முடியும்?" என்கிறார் ஜெயஸ்ரீ.

அந்த இடி முதன்முதலில் விழுந்தது 2018-ஆம் ஆண்டில்தான். அப்போதுதான். தமிழ்நாடு அரசுக்கும் தோயிலைத் தோட்டத்தை நடத்திவரும் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிட்டெடிற்கும் இடையில் நடந்த வழக்கில், குத்தகை காலம் முடிந்ததும் அந்தப் பகுதியை அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

"அந்தச் செய்தி வந்ததும் அதிர்ந்துபோனோம். பிறகு சில ஆண்டுகளாக அதைப் பற்றிப் பேச்சே இல்லை. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக, மீண்டும் எஸ்டேட்டை மூடுவது பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். கடந்த சில மாதங்களாக இந்தப் பேச்சு தீவிரமடைந்து, இப்போது எல்லாம் முடிந்துவிட்டது," என்கிறார் இந்தத் தோட்டத் தொழிலாளர்களில் ஒருவரும் இப்பகுதியின் கவுன்சிலருமான பாமா கௌசல்யா.

தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த இடம்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் சுமார் 4,500 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது மாஞ்சோலை தேயிலைத் தோட்டம். இந்தத் தேயிலைத் தோட்டத்தை வாடியா குழுமத்திற்குச் சொந்தமான ‘பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட்’ (பி.பி.டி.சி.எல்) என்ற நிறுவனம் நடத்தி வருகிறது.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக இந்தத் தோட்டம் அமைந்திருக்கும் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீன்தாரிடமிருந்து 99 வருட குத்தகைக்கு எடுத்த பி.பி.டி.சி.எல், இப்பகுதியில் தேயிலை, ஏலக்காய், கொய்னா, மிளகு தோட்டங்களை உருவாக்கியது.

சிங்கம்பட்டி ஜமீனுடனான குத்தகை, 1929-ஆம் ஆண்டு துவங்கியதால், 2028-ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. அதற்குப் பிறகு, இந்த வனப்பகுதி தமிழ்நாடு அரசின் வசம் சென்றுவிடும். இந்த எஸ்டேட்டைச் சுற்றியுள்ள பல பகுதிகளை காப்புக்காடுகளாக அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்தப் பகுதியையும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்படவுள்ளது.

2028-க்குள் நிலத்தை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதால், இதில் பணியாற்றிவந்த 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வுக்கான நோட்டீஸ் வழங்கப்பட்டுவிட்டது. விருப்ப ஓய்வுத் திட்டத்தை ஏற்பவர்களுக்கு அவர்களது வயதைப் பொறுத்து, ஒன்றே முக்கால் லட்சம் முதல் மூன்று லட்சம் வரை இழப்பீட்டுத் தொகையாகக் கிடைக்கும். ஜூன் 14-ஆம் தேதி கடைசி வேலை நாளாகாவும் அறிவிக்கப்பட்டுவிட்டது.

மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் என பேச்சு வழக்கில் குறிப்பிடப்படும் 'சிங்கம்பட்டி எஸ்டேட் தேயிலைத் தோட்டம்', ஆரம்பத்தில் காக்கச்சி, ஊத்து, குதிரைவெட்டி, நாலுமுக்கு ஆகிய ஐந்து ஊர்களைக் குறிப்பிடுகிறது. குதிரைவெட்டி, காக்காச்சி ஆகிய இடங்களில் இருந்த தோட்டங்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்ட நிலையில், தற்போது மீதமுள்ள ஊர்களில் உள்ள தேயிலைத் தோட்டங்களும் மூடப்படுகின்றன.

இதனால், தலைமுறை, தலைமுறையாக இங்கு வசித்தவர்கள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர்.

எஸ்டேட் பிபிடிசி நிறுவனத்திற்கு கிடைத்தது எப்படி?

மேற்குத் தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை உள்ளிட்ட சுமார் 74,000 ஏக்கர் வனப்பகுதி சிங்கம்பட்டி ஜமீனுக்குச் சொந்தமானதாக இருந்தது. இந்த நிலம் சிங்கம்பட்டி ஜமீனுக்கு கிடைத்தது தொடர்பாக ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.

18-ஆம் நூற்றாண்டில் திருவிதாங்கூரின் இளவரசராக இருந்த மார்த்தாண்ட வர்மருக்கு (1706–1758) ஒரு போரில் உதவுவதற்காக அப்போதைய சிங்கம்பட்டி ஜமீனைச் சேர்ந்தவர்கள் சென்றனர். அந்தப் போரில் சிங்கம்பட்டியின் இளவரசர் இறந்துவிட்டார். இதனை ஈடுசெய்ய சிங்கம்பட்டி ஜமீனுக்கு திருவிதாங்கூர் அரசர் இந்த 74,000 ஏக்கர் நிலத்தை வழங்கினார்.

இதற்குப் பிறகு 20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில், சிங்கம்பட்டியின் இளவரசரான சிவசுப்பிரமணிய சங்கர தீர்த்தபதி சென்னையில் படித்துவந்தபோது, அந்தக் கல்லூரியின் துணை முதல்வராக இருந்த க்ளெமென்ட் டி லா ஹே என்பவரைக் கொலை செய்த வழக்கில் அவரும் கடம்பூர் இளவரசரும் சிக்கினர்.

இந்த வழக்கில் சிங்கம்பட்டி இளவரசர் அப்ரூவரானாலும், அவருக்காக டி ரிச்மென்ட் என்ற வழக்கறிஞர் அமர்த்தப்பட்டார். முடிவில் வழக்கில் இருந்து கடம்பூர் இளவரசர், சிங்கம்பட்டி இளவரசர் ஆகிய இருவருமே விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான செலவுகளுக்கு சிங்கம்பட்டி ஜமீன் கிட்டத்தட்ட 3 லட்ச ரூபாய் வரை செலவழிக்க நேர்ந்தது.

அந்தச் செலவை ஈடுகட்டவே, 8,373.57 ஏக்கர் நிலத்தை பி.பி.டி.சி நிறுவனத்திற்கு சிங்கம்பட்டி ஜமீன் குத்தகையாக அளித்தது. இந்தத் தகவலை, சிங்கம்பட்டியின் கடைசி ஜமீனாக இருந்து சமீபத்தில் மறைந்த டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதி பல ஊடக பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, The Tamil Nadu Estates (Abolition and Conversion into Ryotwari) Act, 1948 என்ற சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இருந்த ஜமீன்களின் அனைத்து நிலங்களும் அரசால் கையகப்படுத்தப்பட்டன. அதன்படி 1952-ஆம் ஆண்டு பிப்ரவரியில் சிங்கம்பட்டி ஜமீனுக்குச் சொந்தமான இந்த நிலங்களும் அரசின் வசம் வந்தன.

இந்நிலையில், ஏற்கனவே சிங்கம்பட்டி ஜமீனுக்கும் பி.பி.டி.சி-க்கும் இடையிலான ஒப்பந்தம் குறித்து ஆலோசித்த அரசு, இது தொடர்பாக ஒரு அரசாணையை வெளியிட்டது. 1958-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்த அரசாணையின்படி, குத்தகைக்கு விடப்பட்ட 8,373 ஏக்கர் 57 சென்ட் நிலத்தை குத்தகையின் மீதிக் காலத்திற்கும் அந்த நிறுவனம் பயன்படுத்திக்கொள்ளலாம் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், 1976-இல் களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. அப்படி அறிவிக்கப்பட்ட பகுதிக்குள் சிங்கம்பட்டி எஸ்டேட்டும் உள்ளடங்கிய நிலையில், இதனை எதிர்த்து பி.பி.டி.சி நிறுவனம் 1978-இல் நீதிமன்றத்தை நாடியது. 40 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில் 2017-ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

புலிகள் காப்பகமாக அந்தப் பகுதி அறிவிக்கப்பட்டது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருந்தபோதும், குத்தகை காலம் முடியும்வரை, அந்தப் பகுதியில் புதிதாக தோட்டங்களை ஏற்படுத்தாமல் ஏற்கனவே இருக்கும் தோட்டப் பகுதியை மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு 2018-இல் உச்ச நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டது.

பி.பி.டி.சி நிறுவனத்திற்கு சுமார் 8,373 ஏக்கர் நிலம் குத்தகைக்கு அளிக்கப்பட்டாலும், அந்த நிலத்தில் சுமார் 1,000 ஏக்கர் நிலத்தில் மட்டுமே தேயிலைத் தோட்டங்கள் செயல்பட்டு வந்தன. சுமார் 500 ஏக்கர் நிலத்தில், தோட்டப் பணியாளர்களின் வீடுகள் இருந்துவந்தன.

மாஞ்சோலை எங்கேயிருக்கிறது?

திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் சாலையில் கல்லிடைக்குறிச்சியை வந்தடைந்த பிறகு, இடதுபுறம் செல்லும் சாலையில், மணிமுத்தாறு செல்லும் சாலையில் ஏறினால், மாஞ்சோலை ஊரை அடையலாம். இதற்குப் பிறகு காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய ஊர்கள் உள்ளன. இந்த ஐந்து ஊர்களும் சேர்ந்தே மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் எனக் குறிப்பிடப்படுகின்றன.

1930-களில் இந்தத் தேயிலைத் தோட்டத்தில் பணியாற்ற வந்தவர்கள் பெரும்பாலும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கேரளாவிலிருந்தும் சிலர் இங்கு வந்து தொழிலாளர்களாகச் சேர்ந்தனர். தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்.

தற்போது இந்த பி.பி.டி.சி நிறுவனத்தில் 562 தொழிலாளர்கள் பணியில் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 2,100 பேர் இந்த கிராமங்களில் வசித்துவருகின்றனர்.

இந்த கிராமங்களில் தபால் அலுவலகம், தொலைபேசி டவர்கள், ரேஷன் கடைகள், அரசு உயர்நிலைப் பள்ளி, அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள், கூட்டுறவு பண்டக சாலை, எஸ்டேட் நிர்வாகத்திற்குப் பாத்தியப்பட்ட தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகள், தேயிலைத் தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், குழந்தைகள் பராமரிப்பு நிலையங்கள், இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள், வனத்துறை விடுதி, சிங்கவால் குரங்கு கண்காணிப்பு கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களும் குடியிருப்புகளும் உள்ளன.

திருநெல்வேலி மற்றும் பாபநாசம் பகுதிகளிலிருந்து தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மூன்று பேருந்துகள் இரண்டு முறை எஸ்டேட் பகுதிகளுக்குச் சென்று வருகின்றன.

காலி செய்துவிட்டு எங்கே செல்வது?’

இந்த நிலையில், தற்போது பி.பி.டி.சி நிறுவனம் விருப்ப ஓய்வைப் பெற முன்வரும் தொழிலாளர்கள், ஜூன் 14-ஆம் தேதிக்குள் இதற்கான ஒப்புதலைத் தர வேண்டும். இந்தத் திட்டத்தை ஏற்பவர்களுக்கு முதலில் 25% பணம் தரப்படும். ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் தங்கள் வீட்டைக் காலி செய்து அதற்கான சாவியைத் தந்துவிட்டால் அப்போது மீதமுள்ள 75% பணம் தரப்பட்டுவிடும்.

பெரும்பாலானவர்கள் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டுவிட்ட நிலையில், ஜெயஸ்ரீ, அவரது கணவர் பாக்கியராஜ், கௌரி உள்ளிட்டோர் இதனை ஏற்காமல் இருந்தனர். ஆனால், வேறு வழியில்லாத நிலையில், ஜூன் 14-ஆம் தேதி இவர்களும் இந்தத் திட்டத்தில் கையெழுத்திட்டுவிட்டனர்.

"எல்லாக் கதவுகளையும் தட்டியாகிவிட்டது. இந்தத் தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டுமென அரசின் எல்லா மட்டங்களிலும் கேட்டுப் பார்த்தாகிவிட்டது. எதுவும் நடக்கவில்லை என்ற நிலையில், விட்டால் இதுவும் கிடைக்காது என்பதால் இதனை ஏற்றுக்கொண்டுவிட்டோம்," என்கிறார் ஜெயஸ்ரீ.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வன விலங்குகள் ஊருக்குள் நுழைவது, மனிதர்களைத் தாக்குவது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கும் நிலையில் மாஞ்சோலை வனப்பகுதியில் அதுபோல எந்த ஒரு சம்பவமும் இங்கே நடந்ததில்லை என்று சுட்டிக்காட்டும் இப்பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரான ராபர்ட், அதற்குக் காரணம் இப்பகுதி மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்வதுதான் என்கிறார்.

"மாஞ்சோலை என்பது வெறும் ஒரு தேயிலை எஸ்டேட் அல்ல. இங்கே வேலை பார்ப்பவர்களில் பலர் நான்கு தலைமுறைகளாக இங்கே வேலை பார்த்திருக்கிறார்கள். இவர்களில் பலருக்கு இந்தத் தேயிலைத் தோட்டம் இருக்கும் ஊரைத் தவிர, வேறு ஊரையே தெரியாது. இவர்கள் மூதாதையர்களின் சொந்த ஊரும் தெரியாது. தெரிந்தாலும் அங்கு போய் வாழ்வதும் இப்போது சாத்தியமில்லை. ஆகவே, இந்தத் தேயிலைத் தோட்டங்களை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டும்," என்கிறார் மாஞ்சோலை பகுதியில் பிறந்து வளர்ந்தவரான ராபர்ட்.

இங்குள்ள வனப்பகுதியின் மரங்கள் சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்படுவது போன்ற நிகழ்வுகள் நடக்காததற்கும் இங்குள்ள மக்களே காரணம் என்கிறார் அவர்.

இங்கு தொழிலாளியாக உள்ள ஜெயா இன்னொரு கேள்வியை எழுப்புகிறார். "எங்களுடைய ரேஷன் கார்டு, ஓட்டுரிமை எல்லாம் இங்கே இருக்கிறது. பிள்ளைகள் இங்கே படிக்கிறார்கள். 45 நாட்களில் இந்த இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்கிறார்கள். எல்லாவற்றையும் வேறொரு இடத்திற்கு எப்படி மாற்றுவது?" என்கிறார் அவர்.

இந்தத் தோட்டத்தின் பணியாளர்கள் தற்போது ஒரு நாள் கூலியாக 453 ரூபாயைப் பெற்றுவந்தனர். விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் 56 முதல் 59 வயதுவரை உள்ளவர்களுக்கு மூன்று லட்ச ரூபாயும் 53 முதல் 56 வயதுவரை உள்ளவர்களுக்கு 2 லட்சத்து 93 ஆயிரம் ரூபாயும் 53 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்கு இரண்டே கால் லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூலி உயர்வு கேட்டு நடந்த போராட்டம்

1863 வாக்கில் துவங்கப்பட்ட பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிட்டட் நிறுவனம் ஆரம்ப காலத்தில் பர்மாவுடன் மரங்களைக் கொண்டுவந்து வர்த்தகம் செய்துவந்தது. 1913 வாக்கில் தேயிலை உற்பத்தியின் மீது இந்த நிறுவனத்தின் கவனம் திரும்பியது. ஆரம்பத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை மலைப் பகுதியில் தேயிலைத் தோட்டங்களை வாங்கியது.

1920-களில் திருநெல்வேலி மாவட்டத்தில் சிங்கம்பட்டி ஜமீனுக்குச் சொந்தமான மாஞ்சோலை மலைப் பகுதியில் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கியது. இது 'சிங்கம்பட்டி க்ரூப் ஆஃப் எஸ்டேட்ஸ்' என அழைக்கப்படுகிறது.

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 70 ரூபாயாக உள்ள தங்களது கூலியை 100 ரூபாயாக உயர்த்த வேண்டுமெனக் கோரி, 1999-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாகச் சென்றனர். அப்போது காவல்துறை தடியடி நடத்தியதில், பலர் தாமிரபரணி ஆற்றுக்குள் குதித்தனர். ஒட்டுமொத்தமாக 17 பேர் இறந்துபோயினர்.

இந்த சம்பவம் குறித்து விசாரித்த நீதிபதி மோகன் கமிஷன், 17 பேரில் 11 பேர் நீரில் மூழ்கி இறந்ததாகவும், மீதமுள்ளவர்கள் காயங்களால் இறந்ததாகவும் தெரிவித்தது.

தமிழக வரலாற்றில் மிக மோசமான காவல்துறை வன்முறைகளில் ஒன்றான இந்த நிகழ்வையடுத்து, மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் குறித்த கவனம், தமிழ்நாட்டின் பிற பகுதி மக்களுக்கும் ஏற்பட்டது.