வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 12 ஜனவரி 2024 (21:02 IST)

இந்தியா புறக்கணித்தால் மாலத்தீவு என்ன ஆகும்? மாலத்தீவு மக்கள் கூறுவது என்ன?

Maldives
மாலத்தீவின் தலைநகரான மாலேவின் குறுகிய தெருக்களில் நிரம்பியிருக்கும் தேநீர் கடைகளிலும், உணவகங்களிலும், இந்தியாவுடனான மோதல் எப்படி கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது - டெல்லியின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பதே சூடான விவாதப் பொருளாக உள்ளது.
 
மூன்று மாலத்தீவு இளம் அமைச்சர்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோதி பற்றி "இழிவான" கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அதை தொடர்ந்து, மாலத்தீவின் வருமானத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செலுத்தி வரும் இந்திய சுற்றுலாப் பயணிகள் , மாலத்தீவை புறக்கணிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 
கடந்த ஆண்டு மாலத்தீவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்களே எண்ணிக்கையில் அதிகமானவர்கள். சுற்றுலா, மாலத்தீவின் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்காக உள்ளது.
 
தற்போது இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள அந்த அமைச்சர்கள், மோதியை "பயங்கரவாதி", "இஸ்ரேலின் கைப்பாவை" என்று சமூக வலைதளங்களில் குறிப்பிட்டிருந்தனர்.
 
இந்தக் கருத்துக்கள் இந்திய சமூக வலைதளங்களில் கோபத்தையும் மாலத்தீவுவை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் தூண்டியுள்ளன.
 
மாலத்தீவு அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய பதிவுகள் சமூக ஊடக கொந்தளிப்பைத் தொடர்ந்து நீக்கப்பட்டன. மேலும் மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அமைச்சர்கள் கூறிய கருத்துக்கள் தனிப்பட்டவை, அவை அரசாங்கத்தின் கண்ணோட்டத்தை பிரதிபலிக்கவில்லை என்று கூறப்பட்டிருந்தது.
 
இந்தியப் பெருங்கடலின் நடுவில் அமைந்துள்ள சுமார் 1,200 பவளப் பாறை தீவுகள் மற்றும் வளை வடிவ தீவுகளை கொண்டது மாலத்தீவு. இந்த தீபகற்பத்தில் சுமார் 520,000 மக்கள் வசிக்கின்றனர், இது இந்தியாவின் 1.4 பில்லியனுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறியது.
 
சிறிய தீவு நாடாக இருப்பதால், உணவு, உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்காக அதன் பெரிய அண்டை நாடான இந்தியாவையே பெரும்பாலும் நம்பியுள்ளது.
 
தலைநகரான மாலேவில் வசிப்பவர்கள் பலர், இந்த ராஜதந்திர மோதல் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகளை பாதிக்கக்கூடும் என்று கவலைப்படுகின்றனர்.
 
“இந்தியாவிலிருந்து எழும் புறக்கணிப்பு கோரிக்கைகள் எங்களுக்கு வருத்தத்தை அளிக்கிறது. ஆனால் அதை விட அதிக வருத்தம் எங்கள் அரசின் மீது உள்ளது. எங்கள் அதிகாரிகள் நிலைமைகளை சரியாக கணிக்கவில்லை” என்கிறார் பிபிசியிடம் பேசிய மாலத்தீவு தேசிய பல்கலைகழகத்தின் மாணவர் மரியம் ஏம் சஃபீக்.
 
இந்தியா - மாலத்தீவு: லட்சத்தீவில் இஸ்ரேல் செயல்படுத்தப்போகும் திட்டம்
 
பாலிவுட் திரைப்படங்கள் பார்த்து வளர்ந்த மாலத்தீவு மக்களுக்கு இந்தியாவுடன் வலுவான கல்லாச்சார பிணைப்புகள் உள்ளன என்று மற்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.
 
“உணவு, கல்வி, மருத்துவம் ஆகியவற்றும் இந்தியாவை சார்ந்துள்ளோம்” என்று மாலத்தீவு ஜனநாயக கட்சியின் ஆதரவாளரான சஃபீக் சுட்டிக்காட்டுகிறார். மாலத்தீவு ஜனநாயக கட்சி, “முதலில் இந்தியா” என்ற கொள்கையை கொண்டுள்ளது. டெல்லியுடன் நெருக்கமாக இருப்பதாக அறியப்படுகிறது.
 
லட்சத்தீவுக்கு சுற்றுலா பயணத்தை ஊக்குவிக்கும் புகைப்படங்களை மோதி தனது X சமூக வலைதளத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து மூன்று மாலத்தீவு அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தனர்.
 
கொந்தளிப்பைத் தொடர்ந்து, பல இந்தியர்கள் சமூக வலைதளங்களில் மாலத்தீவு செல்வதற்கான விடுமுறைத் திட்டங்களை ரத்து செய்வதாகக் கூறினர்.
 
சுற்றுலாவுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் இந்திய இணையதளமான ஈஸ் மைடிரிப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, தனது நிறுவனம் மாலத்தீவுக்கான விமான டிக்கெட் முன்பதிவை நிறுத்திவிட்டதாக அறிவித்தார்.
 
மாலத்தீவு சுற்றுலா ஏஜென்ட்டுகள் மற்றும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் அப்துல்லா கியாஸ், ரிசார்ட்டுகள் மற்றும் ஹோட்டல்களில் அதிக முன்பதிவுகள் ரத்து செய்யப்படவில்லை என்று கூறினார். "ஆனால், முன்பதிவுகளில் ஒருவித மந்தநிலையைக் காண்கிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.
 
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு பெய்ஜிங்கில் ஒரு அரசுப் பயணத்தை மேற்கொண்டிருக்கும் சமயத்தில் இந்த சர்ச்சை வெடித்துள்ளது. சீன ஆதரவு கொள்கைக்கு பெயர்பெற்ற முய்சு, சீனாவில் இருந்து மாலத்தீவுக்கு மேலும் சுற்றுலா பயணிகளை அனுப்பும்படி சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
கோவிட்-19 பெருந்தொற்றுக்கு முன், மாலத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் சீன நாட்டவரே அதிகமாக இருந்தனர். ஆனால் பெருந்தொற்றுக்குப் பிறகு சீனாவில் டிக்கெட் விலைகள் உயர்ந்துள்ளதால் பல சுற்றுலாப் பயணிகளுக்குப் பயணம் செய்வது கடினமாகிவிட்டது.
 
“கோவிட்-19க்கு முன்பு, சீனா எங்கள் முதன்மை சந்தையாக இருந்தது. சீனா இந்த நிலையை மீண்டும் பெற முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை," என்று முய்சு தனது பயணத்தின் போது கூறினார்.
 
ஆனால் மாலத்தீவு மக்கள் பலர், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மூன்று அமைச்சர்கள் மீது வலுவான நடவடிக்கை எடுக்காததற்காக முய்சுவை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
 
"அமைச்சர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். நாங்கள் பெரும்பாலான உணவுப் பொருட்களுக்கு இந்தியாவை நம்பியிருப்பதால், இந்தியாவின் எதிர்வினை குறித்து இப்போது கவலைப்படுகிறோம்," என்று எதிர்க்கட்சி வழக்கறிஞர் ஐக் அகமது எஸா பிபிசிக்கு தெரிவித்தார்.
 
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக அமைப்புகளில் ஒன்றான அனைத்து இந்திய வியாபாரிகள் கூட்டமைப்பு, மூன்று சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு மாலத்தீவு அதிகாரிகள் மன்னிப்பு கோரும் வரை தங்கள் உறுப்பினர்கள் மாலத்தீவுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
 
புறக்கணிப்பு கோரிக்கைகள் மாலத்தீவில் வசிக்கும் இந்தியர்களையும் பாதிக்கும் என்று பலர் சுட்டிக்காட்டுகின்றனர். நாட்டின் கட்டுமானம், சுற்றுலா மற்றும் சில்லறை துறைகளில் சுமார் 33,000 இந்தியர்கள் பணியாற்றுவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
 
"மாலத்தீவு சுற்றுலாத் துறையில் கணிசமான எண்ணிக்கையிலான இந்தியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் பலர் மேலாளர்கள் மற்றும் முன் அலுவலக ஊழியர்கள்," என்று கியாஸ் கூறினார்.
 
கடந்த ஆண்டு நவம்பரில் ஆட்சிக்கு வந்த பிறகு முய்சு 77 இந்திய துருப்புகளை நாட்டை விட்டு வெளியேறக் கோரியதில் இருந்தே இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே ஏற்கனவே பதற்றம் நிலவுகிறது.
 
இந்திய பாதுகாப்புப் பணியாளர்கள் தான், தாங்கள் மாலத்தீவுக்கு வழங்கிய மூன்று கடல்சார் மீட்பு மற்றும் கண்காணிப்பு விமானங்களை பராமரிப்பதற்காக மாலத்தீவில் இருப்பதாக இந்தியா கூறியுள்ளது.
 
இந்தியப் பெருங்கடல் தீபகற்பம் நீண்ட காலமாக, இந்தியா செல்வாக்கு செலுத்தும் கடல் பரப்பாக உள்ளது. முய்சு அதை மாற்ற விரும்புவதாக கருதப்படுகிறது. அவரது தேர்தல் பிரச்சாரம் 'இந்தியாவே வெளியேறு' கொள்கையை மையமாகக் கொண்டிருந்தது. இந்திய துருப்புகளை வீட்டிற்கு அனுப்பி டெல்லியின் செல்வாக்கைக் குறைக்கும் வாக்குறுதியுடன் இருந்தது.
 
"முய்சுவின் பேச்சுகள், அவரது வாக்காளர்கள் மத்தியில் இந்திய எதிர்ப்பு உணர்வை உண்மையிலேயே வலுப்படுத்தியுள்ளது. இதுவே இளம் அமைச்சர்கள் இந்தியாவிற்கு எதிராக இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளிப்படையாக வெளியிட ஊக்குவித்திருக்கலாம்," என்று மாலத்தீவு அரசியல் பகுப்பாய்வாளர் அசிம் ஜாகிர் கூறினார்.
 
இந்தியா மற்றும் மோதி பற்றிய "மரியாதை இல்லாத" கருத்துக்களை மாலத்தீவு மக்கள் பலர் நிராகரிப்பதாகக் கூறினாலும், டெல்லியால் எடுக்கப்படும் எந்தவொரு கட்டாய ராஜதந்திர நடவடிக்கையும் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.
 
" முய்சுவை சீனா அல்லது இந்தப் பகுதியில் உள்ள வேறு ஒரு சக்தியை நோக்கி மேலும் தள்ளக்கூடும்" என்று ஜாகிர் கூறினார்.
 
முன்னாள் மூத்த இந்திய தூதர் நிருபமா மேனன் ராவ், சமூக வலைதளங்களில் பொருளாதார புறக்கணிப்பு கோரிக்கைகள் எழும்போது மாலேவுக்கு டெல்லி நேர்மறையான உறுதி அளித்திருக்க முடியும் என்று கூறினார்.
 
"இங்கேதான் இந்திய அரசின் செய்தித் தொடர்பாளர்கள் தலையிட்டு, பெரிய,அவசியமான பாதுகாப்பு மற்றும் நலன்களை மனதில் வைத்து சரியான திசையில் இட்டுச் செல்ல வேண்டும். மாலத்தீவு நமது கியூபா அல்ல," என்று அவர் X தளத்தில் எழுதியிருந்தார்.